சட்டப்பேரவையில் நேற்று காவல் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதில் அளித்தபோது, திமுகவுக்கு எதிராக மிகுந்த ஆவேசத்துடன் குற்றச்சாட்டுகளை முன்வைத்துப் பேசிய முதல்வர் விஜய்.
சென்னை: சட்டப்பேரவையில் காவல் துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்துக்கு முதல்வர் விஜய் நேற்று பதில் அளித்தார். அப்போது, சர்க்காரியா கமிஷன் மற்றும் அமலாக்கத் துறையின் அறிக்கைகளை சுட்டிக்காட்டி திமுக மீது கடுமையாக குற்றம்சாட்டினார்.
தமிழக சட்டப்பேரவை 3 நாட்கள் விடுமுறைக்குப் பிறகு நேற்று மீண்டும் கூடியது. காவல் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதில் அளித்து முதல்வர் விஜய் பேசியதாவது: கடந்த வாரம் நான் பேசும்போது, ‘‘என் மேஜையில் 3 துறை சார்ந்த கோப்புகள் உள்ளன. அதை திறக்க வேண்டிய நேரத்தில் திறப்போம்’’ என்று கூறினேன். ‘‘இப்போதே திறங்கள்’’ என்று எதிர்க்கட்சியினர் தெரிவித்தனர்.
1970-களில் திமுக ஆட்சியில் வீராணம் திட்ட குழாய் தயாரிக்க டெண்டர் வழங்கிய விவகாரம் குறித்து ‘சர்க்காரியா கமிஷன்’ அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. கடந்த 2001-ல் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, முன்னாள் அமைச்சர் பொன்னையன் இதே சர்க்காரியா கமிஷன் அறிக்கை குறித்து பேரவையில் பேசியுள்ளனர். அந்த அறிக்கை வந்து இப்போது பொன்விழா ஆண்டை எட்டியுள்ளது.
பவள விழா கண்ட கட்சியின் பொன்விழா சாதனைதான் இந்த சர்க்காரியா கமிஷன் அறிக்கை. அதில் அப்போதைய முதல்வர் தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நீங்கள் ஆதாரம் கேட்டால், சட்டப்பேரவை நூலகத்திலேயே சர்க்காரியா கமிஷன் புத்தகம் இருக்கிறது.
திமுகவுக்கு எப்போதும் ஒரு பழக்கம் உண்டு, ஆதாரத்தைப் பக்கத்திலேயே வைத்துக்கொண்டு மற்றவர்களிடம் போய் தேடுவார்கள். அப்படித்தான் நான் ‘பார்ட்டி ஃபண்ட்’ என்று சொன்னதும் ஆதாரம் கேட்டார்கள். ஆதாரம் பக்கத்திலேயேதான் இருக்கிறது.
திமுக ஆட்சியில் இருந்தபோது அமலாக்கத் துறை அளித்த 100 பக்க அறிக்கையில் நகராட்சி நிர்வாகத் துறையில் ஒப்பந்ததாரர்களிடம் இருந்து பார்ட்டி ஃபண்ட் என்ற பெயரில் 7.5 சதவீதம் முதல் 10 சதவீதம் வரை லஞ்சம் வசூலிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளது. இதன் நேரடிப் பயனாளிகளாக அப்போதைய முதல்வர் ஸ்டாலினும், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினும் இருந்துள்ளனர் என்று அறிக்கை கூறுகிறது.
இன்னொரு துறையின் அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி தனது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தியதாகவும் கூறப்பட்டுள்ளது. டாஸ்மாக்கை கையில் வைத்திருந்த அமைச்சருடன் சேர்ந்து சில ஐஏஎஸ் அதிகாரிகளும் இதில் ஈடுபட்டுள்ளனர். அதில் ரத்தீஷ் என்பவர் ‘பவர் புரோக்கராக’ இருந்துள்ளார்.
அவரது உத்தரவுப்படி தான் டாஸ்மாக் மேலாண் இயக்குநராக இருந்த ஐஏஎஸ் அதிகாரியே செயல்பட்டார் என அமலாக்கத் துறை தெரிவிக்கிறது. இந்த அரசு வந்தவுடன் துபாயில் போய் ஒளிந்துகொண்டார். இவர் யாருக்கு நெருக்கமானவர்? யாருடைய அறிவுரைப்படி செயல்பட்டார்? கடவுளுக்குத்தான் வெளிச்சம்.
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியும் அவரது சகோதரர் அசோக் குமாரும் தங்கள் அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி டாஸ்மாக் பார்கள், போக்குவரத்து டெண்டர்கள், மின்வாரியப் பணிகளில் பெரும் முறைகேடுகள், சட்டவிரோதப் பணப் பரிவர்த்தனைகளிலும் ஈடுபட்டனர். இந்த 2 துறை கோப்புகளைத் திறந்ததற்கே இப்படி என்றால், மற்ற துறை கோப்புகளைத் திறந்தால் எத்தனை பூதம் கிளம்புமோ தெரியவில்லை.
திமுக இருக்கும் இடத்தில்தான் தப்பு நடக்கும். தப்பு நடக்கும் இடத்தில்தான் திமுக இருக்கும். திமுக என்னதான் அவதூறாகப் பேசினாலும் நாம் அவ்வளவு தரம்தாழ்ந்து பேசும் ரகம் கிடையாது. ஆனால், திமுகவின் போலி பிம்பத்தையும், பிராண்டையும் உடைப்போம்.
நான் இந்த நாற்காலிக்காகவோ, அதிகாரத்துக்காகவோ வரவில்லை. மக்களுக்கு உண்மையிலேயே நல்லது செய்ய வேண்டும். அவர்களுக்கு நன்றிக்கடன் செலுத்த வேண்டும் என்றுதான் வந்துள்ளேன். இவ்வாறு முதல்வர் பேசினார்.
57 நிமிடங்கள் ஆவேசம்: முதல்வர் பேசும்போது, ‘‘1967, 1977,1982, 2026.. அண்ணா, எம்ஜிஆர், என்டிஆர், விஜய். இறைவனும், இயற்கையும், மக்களும் நமது பக்கம்தான் எப்போதுமே இருப்பார்கள். அதனால் யார் என்ன முறைகேடுகள், என்ன வேலைகள் செய்தாலும் ஒன்றும் எடுபடாது. அந்த அன்புக்கு முன்னால் இவர்கள் தோற்பது உறுதி’’ என்றார்.
பேரவையில் முதல்வர் விஜய் நேற்று மொத்தம் 57 நிமிடங்கள் 42 விநாடிகள் பேசினார். பேச்சின் தொடக்கத்தில் பல்வேறு விஷயங்களை குறிப்பிட்ட அவர்,
சுமார் 15 நிமிடங்களுக்குப் பிறகு, திமுக ஆட்சியின் நிர்வாகம், செயல்பாடுகள் தொடர்பான குற்றச்சாட்டுகளை ஆவேசத்துடன் முன்வைத்தார்.
பேரவைக் கூட்டம் இன்று நிறைவு: தமிழகத்தில் அமைந்த 17-வது சட்டப் பேரவையின் முதல் பட்ஜெட் மற்றும் மானியக் கோரிக்கைக்கான கூட்டத்தொடர், ஆக.5-ம் தேதி தொடங்கியது. அன்று பொது பட்ஜெட், மறுநாள் 6-ம் தேதி வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டன. பின்னர், அரசு விடுமுறை நாட்கள் தவிர்த்து ஆக.12 வரை பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று, அமைச்சர்கள் பதில் அளித்தனர்.
இதைத் தொடர்ந்து, துறை வாரியாக மானியக் கோரிக்கை மீதான விவாதம் ஆக.17-ல் தொடங்கியது. இன்று போக்குவரத்து, இயக்கூர்திகள் சட்டம் உள்ளிட்ட துறைகள் மீதான விவாதம் நடைபெறுகிறது. இன்றைய நிகழ்வு டன் பேரவை நிறைவு பெறுகிறது.