பேரவையில் முதல்வர் விஜய்
சென்னை: சட்டப்பேரவைத் தலைவராக ஜேசிடி பிரபாகர் இன்று தேர்வு செய்யப்பட்டார். அவரை அவை முன்னவர் செங்கோட்டையன், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் இருவரும் இணைந்து கைப்பிடித்து அழைத்துச் சென்று பேரவைத் தலைவருக்கான இருக்கையில் அமர வைத்தனர்.
பின்னர் சபாநாயகர் ஜேசிடி பிரபாகர், துணை சபாநாயகராக ரவிசங்கர் நியமிக்கப்படுவதாக அறிவித்தார். இதனைத் தொடர்ந்து அவை உறுப்பினர்கள் சபநாயகர், துணை சபாநாயகருக்கான வாழ்த்துரைகளை வழங்கினர்.
சபாநாயகரை வாழ்த்தி முதல்வர் விஜய் பேசியதாவது: “மக்களே, மக்களுக்காக மக்களால் நடத்தும் ஆட்சி மக்களாட்சி” என்றார் அமெரிக்க முன்னாள் குடியரசு தலைவர் ஆப்ரகாம் லிங்கன். இன்றைக்கு அமைந்துள்ள மக்களாட்சி மலர்வதற்கு மக்களிடம் உள்ள பெரும் எதிர்பார்ப்பு, அவர்களுடைய எதிர்பார்ப்புகளை இப்பேரவையின் கவனத்திற்குக் கொண்டு வந்து அதனைச் செயல்படுத்துவதற்கான திட்டங்களை, சட்டங்களை அமல்படுத்த வேண்டிய பொறுப்பு இப்பேரவைக்கு உள்ளது. அதிகமான மக்கள், அதிக நன்மைகளை இந்த ஆட்சிக் காலத்தில் நன்மை பெற்றுள்ளார்கள் என்கிற வகையில் நம்முடைய செயல்பாடுகள் அமைய வேண்டும். இங்கே அனைவரும் சமம்.
ஓர் உறுப்பினரைக் கொண்ட கட்சிகள் இங்கே இடம் பெற்றிருந்தாலும், அவர்களுடைய கருத்துக்களுக்கும், அதிக எண்ணிக்கை பெற்ற தமிழக வெற்றிக் கழக உறுப்பினர்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கும் சமமாகவே மதிப்பளிக்கப்பட்டு, நல்லவை ஏற்கப்பட்டு, அல்லவை நிராகரிக்கப்பட்டு, ஜனநாயகத்தின் இதயமாகவும், மூளையாகவும் இப்பேரவை செயல்பட வேண்டும். அதற்குரிய வகையில் பெருமை வாய்ந்த, வரலாற்றுச் சிறப்புக் கொண்ட இப்பேரவையை நடத்திச் செல்லும் பண்பை பெற்றுள்ளவரையே தமிழக வெற்றிக் கழகம் முன்மொழிந்து தாங்கள் இன்றைக்கு இந்த ஆசனத்தில் அமர்ந்துள்ளீர்கள்.
தாங்கள் பேரவைத் தலைவராக ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளீர்கள். தங்களை இந்த ஆசனத்தில் மாண்புமிகு பேரவை முன்னவரும், எதிர்க்கட்சித் தலைவரும் தங்களுடைய கரங்களைப் பிடித்து அழைத்துக் சென்று அமர வைத்தார்கள். இந்தச் சம்பிரதாயம் எப்படி வந்தது என்று சொன்னால் சுவாரசியமாக இருக்கும். பெரிய வரலாறே இச்சம்பவத்தில் உள்ளது. இங்கிலாந்து நாட்டில் உள்ள பாராளுமன்றம் நடைமுறைகளைப் போன்றதே நம்முடைய பாராளுமன்ற நடைமுறைகளும்.
மன்னர் ஆட்சி இருந்த காலத்திலேயே அங்கே பாராளுமன்றம் இயங்கியுள்ளது. அக்காலத்தில் அனைத்து அதிகாரங்களையும் பெற்ற மன்னரும் இருந்தார். பாராளுமன்றமும் இயங்கியது. அங்கே மன்னர் ஒரு பணியைச் செய்ய வேண்டுமென்று விரும்புவார். பாராளுமன்றம் அவருடைய விருப்பத்தை பெரும்பாலும் நிராகரிக்கும். மன்னர் விரும்பிய காரியத்தை பாராளுமன்றம் நிராகரித்து விட்டது என்கிற செய்தியை, மன்னருக்கு சொல்ல வேண்டியவர் பாராளுமன்ற தலைவர் ‘ஸ்பீக்கர்’ என்பார்கள். பாராளுமன்ற கருத்தை மன்னரிடம் சொல்ல வேண்டியவர் ‘ஸ்பீக்கர்’. அதற்கு துணிவு வேண்டும்.
சில பணிகளைச் செய்வதற்குதான் பாராளுமன்றத்தின் அனுமதி பெற வேண்டுமே தவிர, அந்த ராஜ்யத்தில் உள்ள எந்தப் பிரஜைக்கும் மரண தண்டனை விதிக்கும் அதிகாரம் மன்னருக்கு உண்டு. தான் விரும்பியதை பாராளுமன்றம் நிராகரித்துவிட்டது என்று சொல்லும் ஸபீக்கர்-க்கு மரண தண்டனை விதிக்கும்படி ஆணையிடுவார். தலையை வெட்டி விடுங்கள் என்று ஆணையிடுவார்கள். இது பலமுறை நடந்ததால் யாருமே இந்த ‘ஸபீக்கர்’ பதவிக்கு வர விரும்ப மாட்டார்கள்.
எனவே, புதிதாக பாராளுமன்றம் அமையும்போது ‘ஸபீக்கர்’ பதவிக்கு ஒருவர் அறிவிக்கப்பட்டவுடன் அவர் உடனே தலை தப்பித்தால் போதும் என்று ஓட்டம் பிடிப்பார். அவை முன்னவரும், எதிர்க்கட்சித் தலைவரும் அவரை தடுத்து நிறுத்தி, அவர் கைகளைப் பிடித்து இழுத்து வந்து ஆசனத்தில் அமர வைப்பார்கள். இதுதான் அந்தக் காலத்தில் இருந்து வந்த மரபு.
ஜனநாயக முறை ஏற்பட்ட பிறகும், இம்மரபு தொடர்கிறது. நிச்சயமாக தமிழக வெற்றிக் கழக உறுப்பினர்கள் அனைவருமே உங்களுக்கு உதவிகரமாகவே இருப்பார்கள் என்கிற வாக்குறுதியை இந்நேரத்தில் அளிக்க விரும்புகிறேன். பேரவையின் மாண்பையும், கண்ணியத்தையும் பேரவை உறுப்பினர்களின் கண்ணியத்தையும் காக்க வேண்டிய பொறுப்பை உங்களிடத்தில் ஒப்படைத்திருக்கிறார்கள்.
“குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள் மிகைநாடி மிக்க கொளல்” எனும் வள்ளுவரின் வாய்மொழிக்கேற்ப, சட்டமன்ற நடவடிக்கைகள் சீராக, செம்மையாக, அமைதியாக நடைபெறும் வகையிலும், சட்டமன்ற ஜனநாயகப் பண்புகள், நெறிமுறைகள் பேணிப் பாதுகாக்கப்படும் வகையிலும், இந்த அவைக்குப் பேரவைத் தலைவரும், பேரவைத் துணைத் தலைவரும் பெருமை சேர்ப்பீர்கள் எனும் நம்பிக்கை எனக்கு உண்டு.
அரசியலுக்கு அப்பாற்பட்டு, மனிதர்களை மதிக்கும் நல்ல பண்புகள் நிலைநாட்டப்பட வேண்டும். தமிழ்ப் பண்பாடு போற்றப்பட வேண்டும், அவையின் மரபும், மாட்சிமையும், மதிப்பும் காக்கப்பட வேண்டும் என்ற நல்லெண்ணத்தின் அடிப்படையில் அந்த பதவியை ஏற்றுள்ள தங்கள் இருவராலும் காப்பாற்றப்படும் என்னும் நம்பிக்கையை மீண்டும் தெரிவித்து என் உரையை நிறைவு செய்கிறேன்” இவ்வாறு முதல்வர் விஜய் பேசினார்.