எடப்பாடி பழனிசாமி

 
தமிழகம்

“23-ம் புலிகேசியை நினைவூட்டுகிறார் முதல்வர் விஜய்...” - காவிரி பிரச்சினையில் பழனிசாமி காட்டம்

வெற்றி மயிலோன்

சென்னை: ‘காவிரி தொழில்நுட்பக் குழுவின் அருமை தெரியாமல் முடக்கி வைத்திருக்கும் முதல்வர் விஜய், தன்னுடைய விளையாட்டுத்தனத்தை எல்லாம் கைவிட்டுவிட்டு உடனடியாக காவிரிப் பிரச்சனையில் கவனம் செலுத்தி, காவிரி தொழில்நுட்பக் குழுவின் அனைத்து பதவிகளையும் நிரப்ப வேண்டும்’ என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், ‘காவிரி ஆறும், காவிரி நீரும் தமிழகத்தின் உயிர்நாடியாகும். இந்த இரண்டிலும் எந்தப் பிரச்சினை ஏற்பட்டாலும், அது தமிழக விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் உணவு மற்றும் குடிநீரில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.

விளையாட்டுப் பிள்ளைகளின் கையில் சிக்கிய பொம்மைபோல் த.வெ.க. என்னும் திறமையற்றவர்களின் கையில் சிக்கியுள்ள தமிழக அரசு, தற்போது காவிரி பிரச்சனை குறித்து எந்தவித புரிதலில் உள்ளது என்பதே தெரியவில்லை.

கர்நாடக காங்கிரஸ் ஆட்சிக்கு பல முனைகளில் இருந்து அழுத்தம் கொடுத்து, காவிரியில் தமிழகத்தின் உரிய பங்கு நீரைப் பெறுவதற்கு துப்பில்லாமலும், சர்வாதிகார மனப்பான்மையோடு `காவிரியின் குறுக்கே மேகேதாட்டுவில் அணை கட்டியே தீருவேன்’ என்று கர்நாடக முதல்வர் கொக்கரிப்பதை அடக்க வழி தெரியாமலும், மைனாரிட்டி த.வெ.க. அரசின் முதல்வர் விஜய் திணறுவதும், தடுமாறுவதும் வாடிக்கையாகிவிட்டது.

தமிழகத்துக்கும், கர்நாடகாவுக்கும் இடையே உள்ள காவிரி நீர் தாவாவைத் தீர்க்க காவிரி தொழில்நுட்பப் குழு ஒன்று பல ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இந்தக் குழுவின் துணைத் தலைவர் செல்வராஜ், கடந்த ஜூன் மாதம் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அவரது ராஜினாமாவை இந்த த.வெ.க. அரசு, நான்கு மாத தாமதத்திற்குப் பிறகு, அதாவது இம்மாதம் 9-ஆம் தேதியன்று ஏற்றுக்கொண்டதாகவும்; விரைவில் அந்தப் பதவிக்கு வேறொருவர் நியமிக்கப்பட உள்ளதாகவும் கூறி இருக்கிறது. கும்பகர்ணனைக்கூட தூக்கத்தில் இருந்து எழுப்பி விடலாம். இந்த மைனாரிட்டி ஆட்சியாளர்களை தட்டி எழுப்புவது என்பது குதிரைக் கொம்பாக உள்ளது.

கடந்த ஜூன் மாதம் முதல் காவிரி மேலாண்மை ஆணையம் - காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு பலமுறை கூடி, ஒவ்வொரு முறையும் கர்நாடக அரசு காவிரியில் இருந்து தமிழகத்தின் உரிய பங்கு நீராக, முறைவைத்து எவ்வளவு டிஎம்சி தண்ணீர் திறந்துவிடப்பட வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளது. மேலும், கடந்த ஆகஸ்ட் மாதம் தமிழ் நாடு சட்டமன்றக் கூட்டத் தொடர் நடைபெற்றபோது, பல்வேறு குளறுபடிகளுடன் காவிரி நீர் பிரச்சினை குறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்த த.வெ.க. ஆட்சியில், காவிரி தொழில்நுட்பக் குழு என்ற ஒன்று கடந்த நான்கு மாதங்களாக முழுமையாக செயல்படாமல் முடங்கிப் போய் உள்ளதால், கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்டும் திட்டத்தைத் தடுக்க உறுதியான நடவடிக்கை எடுக்க முடியவில்லை; காவிரி நீரையும் காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவின்படி முழுமையாகப் பெற முடியவில்லை. இதனால் இந்த த.வெ.க. அரசால் குறுவை சாகுபடிக்கு குறித்த காலத்தில் தண்ணீர் திறந்துவிட முடியவில்லை.

காவிரியில் வரும் ஜனவரி மாதம் வரை முழுமையாக தண்ணீர் திறந்துவிட்டால்தான் சம்பா சாகுபடியில் முழு விளைச்சலைப் பெற முடியும் என்ற நிலையில், தற்போது மேட்டூர் அணையில் 54 அடி மட்டுமே தண்ணீர் உள்ளது. இதனால் சம்பா சாகுபடிக்கும் முழுமையாக தண்ணீர் வழங்கமுடியாத சூழ்நிலை உள்ளது. இந்த த.வெ.க. அரசும், காவிரியில் தமிழகத்திற்குரிய பங்கு நீரை முழுமையாகப் பெறுவதற்கு எந்த உறுதியான நடவடிக்கையையும் எடுக்காமல் மழுப்பி வருகிறது.

இதனால், டெல்டா மாவட்ட விவசாயிகள் குறுவை மற்றும் சம்பா சாகுபடியையும் மேற்கொள்ள முடியாமல் கடும் சிரமத்திற்குள்ளாகி உள்ளனர். தமிழகத்தின் பல இடங்களில் பொதுமக்கள் குடிநீருக்காகப் போராடுவதும்; சாலை மறியல் செய்வதும் என்று ஊடகங்களில் செய்திகள் வந்த வண்ணம் உள்ளது.

தமிழக மக்களின் குடிநீர்ப் பிரச்சினையையும், டெல்டா விவசாயிகளின் பாசனப் பிரச்சனையையும் தீர்ப்பதற்கு பதிலாக, பொழுதுபோக்கு மற்றும் கேளிக்கை நிகழ்ச்சிகளில் உற்சாகமாக முதல்வர் பங்கேற்பது 23-ஆம் புலிகேசியை நினைவுபடுத்துகிறது.

தன்னுடைய விளையாட்டுத்தனத்தையெல்லாம் கைவிட்டுவிட்டு, உடனடியாக காவிரிப் பிரச்சனையில் கவனம் செலுத்தி, காவிரி தொழில்நுட்பக் குழு முழுமையாக செயல்பட அனைத்து பதவிகளையும் நிரப்ப வேண்டுமென்று இந்த த.வெ.க. அரசை வலியுறுத்துகிறேன்’ எனத் தெரிவித்துள்ளார்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT