சென்னை: தன் வாழ்நாளில் வேதனையான நிகழ்வு நடந்த நாள் என்று கடந்த ஆண்டு இதே நாளில் கரூரில் நடைபெற்ற தவெக பரப்புரையில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி செலுத்தி உள்ளார்.
கரூர் மாவட்டம் வேலுச்சாமிபுரத்தில் கடந்த 2025 செப்.27-ம் தேதி தவெக தலைவர் விஜய் பங்கேற்ற பிரச்சாரக் கூட்டத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். 140-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இதுதொடர்பாக உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தவெக சார்பில் நிதி உதவி செய்யப்பட்டது. 2026 சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்று முதல்வராக விஜய் பதவியேற்றதை தொடர்ந்து, கரூர் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு கருணை அடிப்படையில் அரசு வேலை வழங்க முடிவு செய்யப்பட்டது. கரூரில் கடந்த ஜூலை 10-ம் தேதி நடைபெற்ற நிகழ்வில், பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த 31 பேருக்கு அரசு வேலைக்கான பணி நியமன ஆணையை முதல்வர் விஜய் வழங்கினார். அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
அதை விசாரித்த உயர் நீதிமன்றம், நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசுப் பணி வழங்கி பிறப்பித்த அரசாணையை ரத்து செய்து உத்தரவிட்டது. அதை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டது. இதையடுத்து, சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்தது உச்ச நீதிமன்றம்.
முதல்வர் விஜய் அஞ்சலி
“என் நெஞ்சில் குடியிருக்கும் அனைவருக்கும் வணக்கம். கடந்த வருடம். இதே நாள். அதாவது 2025, செப்டம்பர் 27. என் வாழ்நாளில், நம் கரூர் சொந்தங்களின் வாழ்வில், நம் தமிழ்நாட்டு உறவுகளின் மனத்தில் ஆறாத ரணமாக, தீராத வலியாக, வேதனையான நிகழ்வு நடந்த நாள்.
சொல்ல முடியாத சோகத்தைச் சுமந்து நிற்கிறோம், நாமும் நம் கரூர் சொந்தங்களும், தமிழக வெற்றிக் கழகத்தின் சொந்தங்களும்.
நம் இதயத்தில் சுமந்த உறவுகளை இழந்து தவிக்கும் நமக்கு, ஆறுதலாகவும் ஆதரவாகவும் அரணாகவும் நாமே இருப்போம். நினைவில் வாழும் அனைத்து உறவுகளுக்கும் நம் இதய அஞ்சலி” என்று சமூக வலைதளத்தில் முதல்வர் விஜய் பதிவிட்டுள்ளார்.