எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில், காவல் துறையினருக்கான பதக்கங்கள் வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. அப்போது, ‘ராக்கி’ என்ற மோப்ப நாய் பூக்கூடையை வாயில் கவ்வியபடி மேடைக்கு வந்து முதல்வர் விஜய் முன்பு பணிந்து மரியாதை செலுத்தியது. படம்: எஸ்.சத்தியசீலன்.
சென்னை: தமிழக காவல் துறையில் சிறப்பாகப் பணியாற்றிய 630 பேருக்கு பதக்கங்கள் வழங்கப்பட்டன. முதல்வர் விஜய் 72 பேருக்கு பதக்கங்களை வழங்கி கவுர வித்தார். மீதமுள்ள 558 பேருக்கு காவல் துறை அதிகாரிகள் பதக்கங்களை அணிவித்து பாராட்டினர்.
காவல் துறை அதிகாரிகள், போலீஸாருக்கு குடியரசு தலைவர், மத்திய உள்துறை அமைச்சர் மற்றும் தமிழக முதல்வர் பதக்கங்கள் வழங்கும் விழா, சென்னை எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் மைதானத்தில் நேற்று மாலை நடைபெற்றது. இந்த விழாவில் முதல்வர் விஜய் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
அவரை தலைமைச் செயலர் எம்.சாய்குமார், சட்டம் ஒழுங்கு டிஜிபி மகேஷ்குமார் அகர்வால், சென்னை காவல் ஆணையர் அமல்ராஜ் மற்றும் மூத்த காவல் துறை அதிகாரிகள் பூங்கொத்து வழங்கி வரவேற்றனர். இதையடுத்து, திறந்த ஜீப்பில் நின்று அணிவகுப்பு மரியாதையை முதல்வர் விஜய் ஏற்றுக் கொண்டார். அவருக்கு தமிழக காவல் துறையின் பல்வேறு சிறப்புப் பிரிவு போலீஸார் கம்பீரமாக அணிவகுத்து மரியாதை செலுத்தினர்.
ஆயுதப் படை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை, தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படை,கடலோர பாதுகாப்பு குழுமம், ‘சிங்கப் பெண்’ மகளிர் சிறப்பு அதிரடிப் படை, சிறைகள் மற்றும் சீர்திருத்தத் துறை, தமிழ்நாடு கமாண்டோ படை உள்ளிட்ட பிரிவுகளின் அணிவகுப்பை முதல்வர் விஜய் பார்வையிட்டார்.
அதனைத் தொடர்ந்து, அணிவகுப்பு குழுத் தலைவர் எஸ்.பி.ஆகாஷ் ஜோஷி மற்றும் துணைத் தலைவர் டிஎஸ்பி அஜிஸ் பூனியா தலைமையில் காவல் துறையினர் கம்பீரமாக அணிவகுத்துச் சென்றனர். அணிவகுப்பு மேடையில் இருந்து முதல்வர் மரியாதையை ஏற்றுக் கொண்டார். பின்னர் நடைபெற்ற பதக்கம் வழங்கும் விழாவில், டிஜிபி மகேஷ்குமார் அகர்வால் வரவேற்று பேசினார்.
தொடர்ந்து 2023 முதல் 2026-ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் அறிவிக்கப்பட்ட குடியரசுத் தலைவரின் தகைசால் பணிக்கான காவல் பதக்கம், மெச்சத்தக்கப் பணிக்கான காவல் பதக்கம், மத்திய உள்துறை அமைச்சரின் சிறந்த செயலாக்கம், நுண்ணறிவு மற்றும் புலனாய்வுத் திறனுக்கான பதக்கங்கள், தமிழக முதல்வரின் சமூக சேவை, சீர்மிகு புலனாய்வு, சிறந்த காவல் நற்பணி (அண்ணா பதக்கம்), தொழில்நுட்பம் மற்றும் சிறப்புப் பணி, விரல் ரேகை அறிவியல், நுண்ணறிவு மற்றும் சிறப்புச் செயலாக்கம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் பதக்கங்கள் வழங்கப்பட்டன.
அடுத்த படம்: முதல்வரிடம் விருது பெற்ற மாநில சைபர் கிரைம் பிரிவு டிஜிபி பால நாகதேவி. படம்: எஸ்.சத்தியசீலன்.
மொத்தம் 630 பேருக்கு விருதுகள் வழங்கப்பட்டன. அவர்களில் காவல் துறையைச் சேர்ந்த 527 அதிகாரிகள் மற்றும் காவலர்கள், சிறைத் துறையைச் சேர்ந்த 21 பேர், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையைச் சேர்ந்த 57 பேர், தடய அறிவியல் துறையைச் சேர்ந்த 8 பேர், ஊர்க்காவல் படையைச் சேர்ந்த 17 பேர் இடம்பெற்றனர்.
பதக்கம் பெற்றவர்களில் 2 டிஜிபி.க்கள், 3 கூடுதல் டிஜிபி.க்கள், 16 ஐஜி.க்கள், 6 டிஐஜி.க்கள், 35 எஸ்பி.க்கள், 26 கூடுதல் எஸ்பி.க்கள், 80 டிஎஸ்பி.க்கள், 147 இன்ஸ்பெக்டர்கள், 66 எஸ்ஐ.க்கள், 90 சிறப்பு எஸ்ஐ.க்கள், 46 தலைமைக் காவலர்கள் உள்ளிட்ட பல்வேறு நிலை அதிகாரிகள் அடங்குவர். 72 பேருக்கு முதல்வர் விஜய் பதக்கங்களை வழங்கி கவுரவித்தார்.
மீதம் உள்ளவர்களுக்கு தலைமைச் செயலர் எம்.சாய் குமார், டிஜிபி மகேஷ்குமார் அகர்வால், இதர பிரிவு டிஜிபி.க்கள், கூடுதல் டிஜிபி.க்கள் பதக்கங்களை வழங்கினர். கடைசியில் பதக்கம் பெற்ற அதிகாரிகள் மற்றும் போலீஸாருடன் முதல்வர் விஜய், குழு புகைப்படம் எடுத்துக் கொண்டு அவர்களின் சேவையை பாராட்டி வாழ்த்தினார்.
பதக்கங்கள் வழங்கும் விழா நிறைவடைந்தவுடன் போலீஸாரின் சாகச நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. அப்போது போலீஸ் மோப்ப நாய் படை பிரிவைச் சேர்ந்த ராக்கி என்ற நாய் பூக்கூடையை வாயில் கவ்வியபடி மேடைக்கு வந்தது. முதல்வர் விஜய் முன்பு பணிந்து மரியாதை செலுத்தியது. அப்போது அவரது முகத்தில் புன்முறுவல் ஏற்பட்டது.
அதன்பின்னர் போலீஸ் மோப்ப நாய்படை பிரிவை சேர்ந்த நாய்கள் நெருப்பு வளையத்தை தாண்டுதல் உள்ளிட்ட சாகசங்களை செய்து பார்வையாளர்களை பரவசப்படுத்தின. அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்குள் தீவிரவாதிகள் திடீரென்று ஊருடுவி அங்கிருப்பவர்களை பிணைய கைதிகளாகப் பிடித்து வைத்தால், அவர்களை மீட்பது எப்படி? தீவிரவாதிகளை எவ்வாறு சுட்டு வீழ்த்துவது என்பதை அதிதீவிரப் படையின் கமாண்டோ படை வீரர்கள் தத்ரூபமாக செயல்விளக்க காட்சிகளை அரங்கேற்றி அசத்தினார்கள்.