சிறுமி குடும்பத்தினரிடம் தமிழக அரசு சார்பில் ரூ.7 லட்சத்துக்கான காசோலையை அமைச்சர்கள் பார்த்திபன், சம்பத்குமார் வழங்கினர். உடன் சேலம் ஆட்சியர் இளம்பகவத், எஸ்.பி. கவுதம் கோயல் உள்ளிட்டோர்.

 
தமிழகம்

கோவையில் கொல்லப்பட்ட சிறுமியின் பெற்றோரிடம் தொலைபேசியில் முதல்வர் விஜய் ஆறுதல்

அரசு சார்பில் ரூ.7 லட்சம் நிதியுதவியை அமைச்சர்கள் வழங்கினர்

செய்திப்பிரிவு

மேட்டூர் / கோவை: கோவையில் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட சிறுமியின் பெற்றோரை முதல்வர் விஜய் தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆறுதல் தெரிவித்தார். தமிழக அரசு சார்பில் ரூ.7 லட்சத்துக்கான காசோலையை அமைச்சர்கள் வழங்கினர்.

கோவை மாவட்டத்தில் வசித்து வந்த தம்பதியின் 10 வயது மகள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், போக்குவரத்து அமைச்சர் பார்த்திபன், பிற்படுத்தப்பட்டோர் நலத் துறைஅமைச்சர் சம்பத்குமார் சேலம் மாவட்டத்தில் நேற்று சிறுமியின் பெற்றோரை சந்தித்து ஆறுதல் கூறினர். போக்சோ நீதிமன்ற உத்தரவின்பேரில், தமிழக அரசு சார்பில் ரூ.7 லட்சத்துக்கான காசோலையை வழங்கினர்.

இதைத் தொடர்ந்து, முதல்வர் விஜய்யும் தொலைபேசி வாயிலாக சிறுமியின் தந்தை மற்றும் பாட்டியிடம் பேசி ஆறுதல் கூறினார். சேலம் ஆட்சியர் இளம் பகவத், எஸ்.பி. கவுதம் கோயல் ஆகியோர் உடன் இருந்தனர். பின்னர், செய்தியாளர்களிடம் சிறுமியின் குடும்பத்தினர் கூறியதாவது: சம்பவம் குறித்து கேட்டதும் மிகுந்த அதிர்ச்சியடைந்ததாக முதல்வர் தெரிவித்தார்.கொலையாளிகள் மீது கடும்நடவடிக்கை எடுக்க போலீஸாருக்கு உத்தரவிட்டுள்ளதாகவும், உங்களுக்கு வீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் முதல்வர் தெரிவித்தார். இவ்வாறு அவர்கள் கூறினர்.

முன்னதாக, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் ஆகியோர் சிறுமியின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறிவிட்டு வந்தனர். தமிழக அமைச்சர்கள் பார்த்திபன், சம்பத்குமார் வெளியே காத்திருந்தனர். அப்போது, ‘‘சிறுமி குடும்பத்தினருக்கு சொந்தமாக வீடு இல்லை, அதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கூற, அரசு சார்பில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் பார்த்திபன் தெரிவித்தார்.

செய்தியாளர்களிடம் நயினார் நாகேந்திரன் கூறியபோது, ‘‘தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு, நல்லாட்சி நடைபெறும் என்று மக்கள் எதிர்பார்த்தனர். ஆனால், தொடர்ந்து அதே நிலைமை நீடிக்கிறது. திமுக ஆட்சியில் நடைபெற்ற அதே சம்பவங்கள் தொடர்ந்து நடக்கின்றன. சட்டம் - ஒழுங்கு மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கு முதல்வர் முழு பொறுப்பு ஏற்க வேண்டும்.

சம்பவங்கள் நிகழ்ந்த பிறகு, சட்டநடவடிக்கை எடுப்பது போதாது. இதுபோன்ற சம்பவங்கள் நிகழாமல் இருக்க, குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும். சிறுமி குடும்பத்துக்கு முதல்வர் ரூ.1 கோடி நிதி வழங்க வேண்டும்’’ என்றார்.

மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கூறியபோது, ‘‘இந்தியாவில் குற்றவியல் சட்டங்களுக்கு மாற்றாக கடுமையான சட்டங்களை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. ஆனால், முந்தைய திமுக அரசு இதை பின்பற்றாமல் பிரிட்டிஷ்காரர்கள் கொண்டு வந்த சட்டத்தையே நடைமுறையில் வைத்துள்ளது. புதிய சட்டத்தை முறையாக நடைமுறைப்படுத்த வேண்டும்’’ என்று தெரிவித்தார்.

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கார்த்தி.

பழனிசாமி ஆறுதல்: சிறுமியின் பெற்றோரிடம் அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி தொலைபேசியில் தொடர்புகொண்டு ஆறுதல் தெரிவித்து, குற்றவாளிக்கு கடுமையான தண்டனை வழங்க தொடர்ந்து போராடுவோம் என்று உறுதியளித்தார். சிறுமி கொலை வழக்கில் கார்த்தி (33), அவரது நண்பர் மோகன் (30) கைது செய்யப்பட்டுள்ளனர். முன்னதாக, போலீஸிடம் இருந்து தப்பிக்க, மாடியில்இருந்து கீழே குதித்ததால் கார்த்தியின் கை, காலில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனால், கோவை அரசு மருத்துவமனையின் தீவிரசிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

நேற்று தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்து, கைதிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படும் வார்டுக்கு மாற்றப்பட்டார். தொடர்ந்து அவருக்கு போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

காவலில் எடுக்க திட்டம்: கார்த்தியை ஜூன் 5 வரை நீதிமன்றக் காவலில் வைக்கபோக்சோ நீதிமன்ற நீதிபதி பகவதியம்மாள் உத்தரவிட்டுள்ளார். இந்த நிலையில், 2 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க, நீதிமன்றத்தில் விண்ணப்பிக்க உள்ளதாக போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 2 பேரின் செல்போன்களையும் போலீஸார் கைப்பற்றி ஆய்வு செய்து வருகின்றனர். கார்த்தியின் தொடர்பு எண்கள், சம்பவம் நடந்தபோது யார் யாரிடம் அவர் பேசியுள்ளார் என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

SCROLL FOR NEXT