சென்னை: சென்னை மாநகருக்கு தடையின்றி குடிநீர் வழங்குவதற்காக ரூ.3,108 கோடியில் பிரதான சுற்றுக்குழாய் அமைக்கும் திட்டத்துக்கு முதல்வர் விஜய் அடிக்கல் நாட்டினார். மேலும், வடகிழக்குப் பருவமழையை முன்னிட்டு, பள்ளிக்கரணை மற்றும் ஒக்கியம் மடுவு பகுதிகளில் நடைபெற்றுவரும் வெள்ளத் தடுப்புப் பணிகளையும் அவர் நேரில் ஆய்வு செய்தார்.
சென்னைக்கு குடிநீர் வழங்குவதற்காக, பூண்டி, புழல், சோழவரம், செம்பரம்பாக்கம் ஏரிகள் மற்றும் கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையங்கள் உட்பட 9 குடிநீர் ஆதாரங்கள் உள்ளன. இதன்மூலம் சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் வாரியம் சென்னையில் உள்ள சுமார் 91 லட்சம் குடும்பங்களுக்கு தினமும் 1,260 மில்லியன் லிட்டர் குடிநீரை வழங்கி வருகிறது. தற்போதுள்ள அமைப்பில் ஒரு நிலையத்தில் இருந்து குறிப்பிட்ட பகுதிகளுக்கு மட்டுமே குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. இதனால் பற்றாக்குறை ஏற்படும் பகுதிகளுக்கு, மற்ற ஆதாரங்களில் இருந்து உபரிநீரை மாற்ற முடியாத சூழல் நிலவுகிறது.
இதை சரிசெய்யும் விதமாக முந்தைய திமுக ஆட்சியில் ‘பிரதான சுற்றுக்குழாய் திட்டம்’ (ரிங் மெயின் சிஸ்டம்) ஆசிய வளர்ச்சி வங்கியின் நிதியுதவியுடன் ரூ.3,108 கோடியில் செயல்படுத்த திட்டமிடப்பட்டது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா சோழிங்கநல்லூரில் உள்ள குடிநீரேற்றும் நிலையத்தில் நேற்று நடைபெற்றது. இதில் முதல்வர் விஜய் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு திட்டத்துக்கு அடிக்கல் நாட்டினார். தொடர்ந்து திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து அதிகாரிகள் முதல்வர் விஜய்க்கு விளக்கம் அளித்தனர்.
சிறப்பம்சங்கள்
இத்திட்டத்தின் வாயிலாக 5 குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள், கடல்நீரைக் குடிநீராக்கும் 3 நிலையங்கள் மற்றும் தற்போது பேரூரில் அமைக்கப்பட்டு வரும் 400 மில்லியன் லிட்டர் கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையம் என மொத்தம் 9 சுத்திகரிப்பு நிலையங்களும் ஒன்றிணைக்கப்படும். 91.20 கி.மீ. நீளத்துக்குச் சுற்றுக்குழாய்கள், 64.20 கி.மீ. நீளத்துக்கு குடிநீர் பரிமாற்றக் குழாய்கள் மற்றும் 2.65 கி.மீ. நீளத்துக்கு உந்து குழாய்கள் பதிக்கப்பட உள்ளன. இந்தக் கட்டமைப்புகளில் நீரின் அழுத்தம், தரம் மற்றும் ஓட்டத்தை அளவிட நவீன சென்சார் கருவிகள் பொருத்தப்படும். சென்னை குடிநீர் வாரியத் தலைமை அலுவலகக் கட்டுப்பாட்டு அறையில் இருந்து இவற்றைத் தொடர்ச்சியாகக் கண்காணித்து சீரான குடிநீர் வழங்கலை தானியங்கி முறையில் மேற்கொள்ள முடியும். இதன்மூலம் சென்னையில் அனைத்து பருவக்காலங்களிலும் மக்களுக்கு குடிநீர் தடையின்றி தேவைக்கேற்ப சீரான அளவில் வழங்கப்படும் என்று தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளிக்கரணையில் ஆய்வு
இதைத்தொடர்ந்து சோழிங்கநல்லூர் காரப்பாக்கத்தில் உள்ள ஒக்கியம் மடுவை முதல்வர் விஜய் பார்வையிட்டார். வடகிழக்குப் பருவமழையை முன்னிட்டு பள்ளிக்கரணை சதுப்பு நிலம் மற்றும் தெற்கு பக்கிங்ஹாம் கால்வாய் பகுதிகளில் நீர்வளத் துறையால் மேற்கொள்ளப்பட்டு வரும் வெள்ளத் தடுப்பு பணிகளை அவர் ஆய்வு செய்தார்.
தென்சென்னையின் உயிர்நாடி வடிகாலாக ஒக்கியம் மடுவு விளங்குகிறது. தென்சென்னை புறநகர்ப் பகுதிகளில் உள்ள ஏரிகளின் உபரி நீர் பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் சேர்ந்து, ஒக்கியம் மடுவு, தெற்கு பக்கிங்ஹாம் கால்வாய் மற்றும் முட்டுக்காடு முகத்துவாரம் வழியாக மட்டுமே கடலைச் சென்றடைகிறது. 2023 டிசம்பரில் மிக்ஜாம் புயலின்போது இந்த நீர்வழி அடைபட்டதால், வேளச்சேரி, பள்ளிக்கரணை, பெருங்குடி, துரைப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் பல நாட்கள் மழைநீர் தேங்கி பாதிப்புக்குள்ளானது. இதற்கு நிரந்தரத் தீர்வு காணும் வகையில் ஒக்கியம் மடுவு தூர்வாரப்பட்டு ஆழப்படுத்தி அகலப்படுத்தப்பட்டுள்ளது.
கண்ணகி நகர் மக்களைப் பாதுகாக்க வெள்ளத் தடுப்புச் சுவர்கள் அமைக்கப்பட்டுள்ளன. வெள்ள ஓட்டத்துக்குத் தடையாக இருந்த காரப்பாக்கம் பாலம் (70 மீட்டர்), சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தால் 120 மீட்டர் அகலமான உயர்மட்டப் பாலமாக மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. ஒக்கியம் மடுவு, வேளச்சேரி, கோவிலம்பாக்கம், நாராயணபுரம், ஆதம்பாக்கம் ஏரிகள் மற்றும் கால்வாய்களில் உள்ள ஆகாயத் தாமரை மற்றும் கழிவுகள் கனரக இயந்திரங்கள் மூலம் அகற்றப்பட்டு வருகின்றன. இதுதவிர மழைநீர் விரைவாகக் கடலில் கலக்க முட்டுக்காடு முகத்துவாரம் தொடர்ந்து திறந்தநிலையில் பராமரிக்கப்படுகிறது. தாம்பரம், பல்லாவரம் பகுதிகளில் உள்ள உபரிநீர் கால்வாய்கள் சுத்தம் செய்யப்பட்டு மதகுக் கதவுகளும் பராமரிக்கப்பட்டு வருகின்றன.
முதல்வர் உத்தரவு
இந்த ஆய்வின்போது, பருவமழை தீவிரமடைவதற்கு முன்பாக அனைத்துப் பணிகளையும் விரைந்து முடிக்க வேண்டும். வெள்ளப் பாதிப்புக்குள்ளாகும் பகுதிகளில் மீட்பு இயந்திரங்களைத் தயார் நிலையில் வைக்க வேண்டும். நீர்மட்ட உயர்வை இரவு பகலாக கண்காணிக்க வேண்டும் என்று அலுவலர்களுக்கு முதல்வர் விஜய் உத்தரவிட்டார். இந்த நிகழ்வுகளில் அமைச்சர்கள் ந.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, ப.வெங்கடரமணன், ராஜ்மோகன், நெ.மரிய வில்சன், ரா.குமார், நகராட்சி நிர்வாகத் துறை செயலர் ககன்தீப் சிங் பேடி, நீர்வளத்துறை செயலர் பிரசாந்த் எம். வடநரே, சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் மேலாண்மை இயக்குநர் த.ஆனந்த், சென்னை மாநகராட்சி ஆணையர் ஜி.எஸ்.சமீரன் மற்றும் துறை சார்ந்த உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.