லண்டன்: இங்கிலாந்தின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் சர்வதேச பந்தயப் பாதையில் நடைபெற்ற மிச்செலின் லீ மேன்ஸ் கோப்பை கார் பந்தயத் தொடரின் 5-வது சுற்றை தமிழக முதல்வர் விஜய் பச்சைக்கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.
முன்னதாகக் கார் பந்தயம் நடைபெறும் களத்திற்கு நேரில் வந்த முதல்வர் விஜயை நோக்கி நடிகர் அஜித்குமார் வர, அவரை ஓடிச் சென்று கட்டியணைத்து முத்தமிட்டு முதல்வர் விஜய் தனது அன்பைப் பகிர்ந்துகொண்டார். இந்த நெகிழ்ச்சியான வீடியோக்கள் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.
பந்தயம் தொடங்குவதற்கு முன் இருவரும் இணைந்து புகைப்படங்கள் எடுத்துக்கொண்டனர். அப்போது அஜித்தின் ரேஸ் காரின் மீது அமர்ந்து முதல்வர் விஜய் புகைப்படம் எடுத்துக்கொண்டதுடன், அஜித்துக்கு தனது வாழ்த்துகளையும் தெரிவித்தார்.
நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த நடிகர் அஜித், “திரைத்துறையில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக நாங்கள் சக நடிகர்களாக இருக்கிறோம். தமிழ்நாட்டில் விளையாட்டுத் துறையை மேம்படுத்த முதல்வர் விஜய் தலைமையிலான அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுக்கிறது. தன் பிஸியான பணிச் சூழலுக்கிடையே, என்னுடைய அழைப்பின் பேரில் லீ மேன்ஸ் கோப்பை கார் பந்தய தொடரை தொடங்கிவைக்க முத்ல்வர் விஜய் லண்டன் வந்துள்ளார். அவர் முதலமைச்சர் ஆனதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி” என்று தெரிவித்திருந்தார்.
44 பந்தயக் கார்கள் பங்கேற்கும் இந்த தொடரில், 'அஜித் ரெட்ஆண்ட் பை விராஜ்' (Ajith RedAnt by Virage) அணியின் சார்பில் அஜித்குமார் களம் இறங்கியுள்ளார். தனது சக போட்டியாளர் ரோமைன் வோஸ்னியாக் (Romain Vozniak) உடன் இணைந்து, LMP3 Pro/Am பிரிவில் 'நம்பர் 16 லிஜியர் JS P325' (Ligier JS P325) ரகப் பந்தயக் காரை அவர் இயக்கி வருகிறார். இவர்களுடன் நட்சத்திர ரேஸ் வீரர்களான நரேன் கார்த்திகேயன் மற்றும் ஆதித்யா பட்டேல் ஆகியோரும் LMP3 பிரிவில் போட்டியிடுகின்றனர்.