சென்னை: ஸ்ரீபெரும்புதூர், ஒரகடத்தில் உள்ள சிப்காட் தொழிற்பூங்காவில் செயின்ட் கோபைன் கண்ணாடி தயாரிப்பு நிறுவனம், ரெனால்ட் கார் உற்பத்தி தொழிற்சாலை ஆகியவற்றின் செயல்பாடுகளை முதல்வர் விஜய் பார்வையிட்டார்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் இயங்கிவரும் தொழில் நிறுவனங்களை முதல்வர் விஜய் நேற்று பார்வையிட்டார். முதலில், ஸ்ரீபெரும்புதூர் சிப்காட் தொழிற்பூங்கா வளாகத்தில் அமைந்துள்ள செயின்ட் கோபைன் கண்ணாடி தயாரிப்பு நிறுவனத்தை பார்வையிட்டார்.
அங்குள்ள மிதவைக் கட்டுப்பாட்டு அறை, ரோபோட்டிக் இயந்திரம் மூலம் கண்ணாடி உற்பத்தி பொருட்களைக் கையாளும் பகுதி ஆகியவற்றை ஆய்வு செய்தார். கண்ணாடி உற்பத்தி குறித்து அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.
செயின்ட் கோபைன் நிறுவனம் தொடங்கியுள்ள ‘கற்றுக்கொண்டே சம்பாதிப்போம்’ எனும் திட்டத்தின் பயிற்சி மாணவர்களுடன் கலந்துரையாடினார். பின்னர், நிறுவன வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள மழைநீர் சேகரிப்பு மையம், நகர்ப்புறக்காடு வளர்ப்பு, வண்ணத்துப் பூச்சி தோட்டம் போன்ற இயற்கை நிலைத்தன்மை முன்னெடுப்புகளை அலுவலர்கள் முதல்வருக்கு விளக்கினர்.
அங்கிருந்த கண்ணாடித் தகட்டில் கையொப்பமிட்ட முதல்வர், வளாகத்தில் மரக்கன்று நட்டுவைத்து, ஊழியர்களுடன் குழுப்படம் எடுத்துக் கொண்டார்.
ரெனால்ட் கார் தொழிற்சாலை
இதையடுத்து, ஒரகடம் சிப்காட் தொழிற்பூங்கா வளாகத்தில் அமைந்துள்ள ரெனால்ட் கார் உற்பத்தி தொழிற்சாலைக்கு முதல்வர் விஜய் சென்றார்.
அங்கு கார் உற்பத்திக்கான உதிரி பாகங்களைப் பொருத்தும் பிரிவு, தரம் உறுதிப்படுத்தும் பிரிவு ஆகியவற்றை பார்வையிட்டார். பின்னர், புதிய ரக ரெனால்ட் டஸ்டர் வாகனத்தை ஓட்டிப் பார்த்தார். காரின் நவீன தொழில்நுட்ப அம்சங்கள் குறித்து அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.
தொடர்ந்து, ஒரகடம் சிப்காட் தொழிற்பூங்கா திட்ட அலுவலகத்துக்கு சென்று ஆய்வு செய்தார். அங்கு மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப் பணிகள், செயல்பாடுகள் குறித்து அலுவலர்கள் முதல்வரிடம் விரிவாக விளக்கம் அளித்தனர்.
இந்த நிகழ்வின்போது அமைச்சர்கள் கீர்த்தனா, தென்னரசு, ரஞ்சித் குமார், தலைமைச் செயலர் சாய்குமார், தொழில் துறை செயலர் விஜயகுமார், சிப்காட் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் சி.அ.ராமன், வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் தீபக் ஜேக்கப் மற்றும் துறை அலுவலர்கள் உடன் இருந்தனர்.