கோவை: கோவை காந்திபுரம் நஞ்சப்பா சாலையில் சுமார் ரூ.300 கோடி மதிப்பில் கட்டப்பட்ட, ‘பெரியார் அறிவுலகம்’ எனப்படும் நூலகம் மற்றும் அறிவியல் மையத்தை முதல்வர் விஜய் நேற்று திறந்து வைத்தார்.
தமிழக அரசின் பொதுப்பணித் துறையின் சார்பில், கோவை காந்திபுரம் நஞ்சப்பா சாலையில், சிறைத்துறைக்கு சொந்தமான 6.98 ஏக்கர் பரப்பளவிலான இடத்தில், 1.98 லட்சம் சதுரடி பரப்பளவில், ரூ.301.71 கோடி மதிப்பில் பெரியார் அறிவுலகம் எனப்படும் நூலகம் மற்றும் அறிவியல் மையம் கட்டு்ம் பணி கடந்த 2024-ல் தொடங்கியது. தரைத்தளம் மற்றும் 7 தளங்களுடன் கூடிய பிரம்மாண்ட கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நேற்று நடைபெற்றது.
முதல்வர் விஜய் நேரில் கலந்து கொண்டு பெரியார் அறிவுலகம் மற்றும் அறிவியல் மையத்தை திறந்து வைத்தார். வளாகத்தின் முகப்பில் வைக்கப்பட்டுள்ள பெரியார் சிலையையும் திறந்து வைத்தார். பின்னர், அறிவுலகத்தின் ஒவ்வொரு தளமாகச் சென்று அங்கு ஏற்படுத்தப்பட்டுள்ள கட்டமைப்புகளை முதல்வர் பார்வையிட்டார். நூலகம் மற்றும் அறிவியல் மைய தளங்களில் இருந்த பள்ளி மாணவ, மாணவிகளுடன் முதல்வர் விஜய் கலந்துரையாடினார்.
பின்னர், அதே வளாகத்தில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார் வரவேற்றார். முதல்வர் விஜய் ரூ.408.25 கோடி மதிப்பிலான 89 முடிவுற்ற திட்டங்களை பயன்பாட்டுக்கு திறந்து வைத்ததுடன், ரூ.32.32 கோடி மதிப்பில் 144 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். பின்னர், பல்வேறு துறைகளின் சார்பில் ரூ.34.72 கோடி மதிப்பில் 9,343 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் வகையில், முதல் கட்டமாக 100 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை முதல்வர் வழங்கினார். மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைகள் துறை அமைச்சர் கே.விக்னேஷ் நன்றி கூறினார்.
விழாவில், அமைச்சர்கள் என்.ஆனந்த், கே.ஏ.செங்கோட்டையன், ராஜ்மோகன், பள்ளிக்கல்வித்துறை செயலர் இன்னசென்ட் திவ்யா, எம்.எல்.ஏ.க்கள் சூலூர் சுகுமார், கவுண்டம்பாளையம் கனிமொழி சந்தோஷ், மேட்டுப்பாளையம் சுனில் ஆனந்த், திருப்பூர் சத்தியபாபா, தாராபுரம் சத்யபாமா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
திருச்சூர் பயணம் ரத்து
கோவை நிகழ்வை முடித்துக் கொண்டு முதல்வர் விஜய், ஹெலிகாப்டர் மூலம் கேரள மாநிலம் திருச்சூரில் நண்பர் வீட்டில் நடைபெறும் நவராத்திரி கொலு நிகழ்வில் பங்கேற்க திட்டமிட்டிருந்தார். ஆனால், விழா முடிந்தவுடன் மழை பெய்யத் தொடங்கியதால், கேரள பயணம் ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து, காந்திபுரத்திலிருந்து கார் மூலம் கோவை விமான நிலையம் சென்ற முதல்வர் விஜய், அங்கிருந்து சென்னை திரும்பினார்.