சென்னை: காவல், தீயணைப்புத் துறைகளுக்கு ரூ.164.64 கோடியில் கட்டப்பட்ட கட்டிடங்களை முதல்வர் விஜய் திறந்து வைத்தார்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: மாநிலத்தின் அமைதியைப் பேணிப் பாதுகாத்து, சட்டம் - ஒழுங்கைப் பராமரிக்கும் முக்கிய பணிகளை ஆற்றிவரும் காவல் துறையின் பணிகள் சிறக்கவும், தீயணைப்புத் துறையின் செயல்திறன் மேம்படவும், அத்துறைகளின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது.
அந்த வகையில், செங்கல்பட்டு மாவட்டம் பெரும்பாக்கத்தில் ரூ.121.85 கோடியில் கட்டப்பட்டுள்ள 400 காவலர், தலைமைக் காவலர் குடியிருப்புகள், சென்னை துறைமுகத்தில் ரூ.2.91 கோடியில் கட்டப்பட்ட காவல் நிலையம், சென்னை ஆவடி தமிழ்நாடு சிறப்பு காவல் 5-ம் அணி வளாகம், புனித தோமையர் மலை, காஞ்சிபுரம் ஆயுதப்படை வளாகங்களில் தலா ரூ.1 கோடியில் கட்டப்பட்ட காவலர் பல்பொருள்
அங்காடிகள் என ரூ.127.76 கோடியில் கட்டப்பட்ட காவல் துறை கட்டிடங்களை முதல்வர் விஜய் நேற்று காணொலியில் திறந்து வைத்தார்.
தீயணைப்புத் துறை
சேலம் - செவ்வாய்ப்பேட்டை, திருச்சி - சமயபுரம், நாமக்கல் - வெப்படை, மதுரை தே.கல்லுப்பட்டி, வாடிப்பட்டி, சிவகங்கை - சிங்கம்புணரி, பெரம்பலூர் மாவட்டம் ஆகிய பகுதிகளில் 7 தீயணைப்பு நிலையங்கள், கோவை - பீளமேடு, மேட்டுப்பாளையம், நாமக்கல் - திருச்செங்கோடு பகுதிகளில் ரூ.36.88 கோடியில் கட்டப்பட்ட குடியிருப்பு கட்டிடங்களையும் முதல்வர் திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் தலைமைச் செயலர் சாய்குமார், உள்துறைச் செயலர் க.மணிவாசன், டிஜிபி மகேஷ் குமார் அகர்வால், தீயணைப்புத் துறை இயக்குநர் ஜி.வெங்கடராமன், காவலர் வீட்டுவசதி கழகத்தின் தலைவர் வினித் தேவ் வான்கடே, சென்னை காவல் ஆணையர் அமல்ராஜ் ஆகியோர் பங்கேற்றனர்.