கரூர்: கரூரில் தவெக பிரச்சார கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினரில் 31 பேருக்கு அரசு பணி, ஒருவருக்கு ரூ.10 லட்சம் கருணைத் தொகையை முதல்வர் விஜய் வழங்கினார்.
கரூர் வேலுசாமிபுரத்தில் கடந்தாண்டு செப்.27-ம் தேதி நடந்த தவெக பிரச்சாரத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு தவெக சார்பில் ரூ.20 லட்சம் நிவாரணம் வழங்கப்பட்டது. அவர்களை சென்னை மாமல்லபுரம் அழைத்து விஜய் ஆறுதல் கூறினார்.
ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நிலையில் கரூர் சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக அவர்களின் கல்வித்தகுதி உள்ளிட்ட விவரங்கள் சேகரிக்கப்பட்டன.
கரூர் ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், கரூர் துயர சம்பவத்தில் உயிரிழந்த குடும்பத்தினருக்கு இன்று (ஜூலை 10) பணியாணை வழங்கும் நிகழ்ச்சி ஆட்சியர் சி.முத்துக்குமரன் தலைமையில் நடைபெற்றது.
இதில் 31 பேர் குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு கல்வித் தகுதி அடிப்படையில் பல்வேறு துறைகளில் இளநிலை உதவியாளர், அலுவலக உதவியாளர் உள்ளிட்ட பணிக்கான ஆணைகள், ஒருவருக்கு ரூ.10 லட்சத்துக்கான கருணைத் தொகையை முதல்வர் விஜய் வழங்கினார்.
அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா, அருண்ராஜ், செங்கோட்டையன், கீர்த்தனா, விஜயலட்சுமி, எம்.பி. ஜோதிமணி, கிருஷ்ணராயபுரர் எம்எல்ஏ எம்.சத்யா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து மணவாசியில் தனியார் காலணி தொழிற்சாலைக்கான அடிக்கல்லை முதல்வர் விஜய் நாட்டினார்.
முதல்வர் அழுதார்:
எம்பி செ.ஜோதிமணி செய்தியாளர்களிடம் கூறும்போது, “கரூர் துயர சம்பவத்தில் உயிரிழந்தர்களுக்கு அரசுப் பணி வழங்குவதை அரசியலாக பார்க்கக் கூடாது. இது மகிழ்ச்சியான நிகழ்ச்சி இல்லை. பணியானை பெற்றவர்கள் கண் கலங்கினர். முதல்வரும் பணியானை வழங்கும்போது அழுதார்” என்றார்.