தமிழகம்

கொடைக்கானலில் 50 சென்ட் நிலத்தின் விற்பனை பத்திரம்: உயர் நீதிமன்றத்தில் முதல்வர் விஜய் தாக்கல்

அக்.14-க்குள் எழுத்துப்பூர்வ வாதங்களை சமர்ப்பிக்க நீதிபதி உத்தரவு

செய்திப்பிரிவு

சென்னை: கொடைக்கானல் வில்பட்டியில் வாங்கிய 50 சென்ட் நிலத்துக்கான 1997-ம் ஆண்டு விற்பனை பத்திரம் முதல்வர் விஜய் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், இருதரப்பும் தங்களது எழுத்துப்பூர்வ வாதங்களை வரும் அக்.14-க்குள் தாக்கல் செய்ய நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

பெரம்பூர் தொகுதியில் போட்டியிட்ட முதல்வர் விஜய் தனது வேட்புமனுவில் தனது சொத்துக்கள் தொடர்பாக தவறான தகவலை அளித்துள்ளதால் அவர் தேர்தலில் வெற்றி பெற்றது செல்லாது என அறிவிக்கக்கோரி அத்தொகுதி வாக்காளர்களான வியாசர்பாடியைச் சேர்ந்த எஸ்.தினேஷ், லட்சுமி நரசிம்மன் மற்றும் திமுக வேட்பாளரான ஆர்.டி.சேகர்ஆகியோர் உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு, நீதிபதி வி. லட்சுமி நாராயணன் முன்பாக விசாரணைக்கு வந்தபோது வாக்காளர் தினேஷ் தரப்பில், தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்களது வேட்புமனுவில் தவறான, பொய்யான, முழுமையற்ற தகவல்களை தெரிவிக்கக்கூடாது என ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி வி.ராமசுப்பிரமணியன் சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த 2009-ல் அளித்த தீர்ப்பை மேற்கோள்காட்டி வாதிடப்பட்டது.

அதற்கு முதல்வர் விஜய் தரப்பி்ல், ‘இதற்கு தெளிவான பதில் தங்களிடமும் உள்ளது. இந்த தேர்தல் வழக்கை நிராகரிக்கக் கோருவதற்கான உச்ச நீதிமன்ற தீர்ப்புகளை தாக்கல் செய்கிறோம்’ என தெரிவிக்கப்பட்டது. அதையடுத்து நீதிபதி வழக்கு விசாரணையை தள்ளி வைத்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி வி. லட்சுமி நாராயணன் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது முதல்வர் விஜய் தரப்பி்ல் கொடைக்கானல் வில்பட்டி கிராமத்தில் 50 சென்ட் நிலம் விலைக்கு வாங்கியது தொடர்பான கடந்த 1997-ம் ஆண்டின் விற்பனைப் பத்திரம் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

அப்போது தினேஷ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் அசோக்குமார், ” அந்த நிலம் அரசு புறம்போக்கு நிலம் என்பதற்கான சர்வே எண் மற்றும் வருவாய் துறை ஆதாரங்களை நாங்களும் சமர்ப்பித்துள்ளோம், என்றார்.

அப்போது நீதிபதி, ‘அந்த சொத்து யாருக்கு சொந்தம் என்பதை இந்த தேர்தல் வழக்கில் என்னால் தீர்மானிக்க முடியுமா? ஒருவர் நிலத்தை ஆக்கிரமித்துள்ளார் என்றாலும் கூட, அவர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறுவது தகுதி இழப்பு ஆகிவிடுமா?’எனவும் மனுதாரர் தரப்புக்கு கேள்வி எழுப்பினார்.

அதற்கு வழக்கறிஞர் அசோக்குமார், ’ தேர்தல் பிரமாணப் பத்திரத்தில் கூறப்பட்டுள்ள தகவல்களின் உண்மைத் தன்மையை இந்த நீதிமன்றம் நிச்சயமாக ஆராய முடியும்.’என்றார்.

அப்போது விஜய் தரப்பு மூத்த வழக்கறிஞர் கோபால் சங்கரநாராயணன் ” முதல்வர் விஜய்யின் சொத்து மதிப்பு ரூ. 650 கோடிக்கு கீழே இருந்தால் மட்டுமே அவருக்கு வாக்களிப்போம் என அத்தொகுதி வாக்காளர்கள் யாரும் மனதளவில் முடிவு செய்திருந்தார்களா? சந்தை விலை நிலவரத்துக்கு ஏற்ப சொத்துக்களின் மதிப்பும் கூடும், குறையும், வேட்புமனுவில் தகவல்களை மறைத்தது வாக்காளர்கள் சுதந்திரமாக முடிவெடுப்பதில் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்தரப்பில் சுட்டிக்காட்டப்பட்ட சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பு குற்ற வழக்கு தொடர்புடையது.

விஜய் வசதி படைத்தவர் என்பது தொகுதியில் உள்ள அனைத்து வாக்காளர்களுக்கும் நன்றாகத் தெரியும். ரூ. 650 கோடிக்கு சொத்துக்கள் உள்ளது என வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.

அப்படி இருக்கும்போது அவர் சொத்தை மறைத்தது வாக்காளர் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தும் என எப்படி கூற முடியும், இந்த வழக்கு தொடர்பான உச்ச நீதிமன்றத்தின் ஏராளமான முன்மாதிரி தீர்ப்புகளை தாக்கல் செய்கிறோம்’ என்றார்.

அதையடுத்து நீதிபதி, இருதரப்பும் வழக்கு தொடர்பான எழுத்துப்பூர்வ வாதங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை வரும் அக்.14-க்கு தள்ளி வைத்துள்ளார். அன்றைய தினம் இந்த வழக்கில் தீர்ப்பளிப்பது குறித்து முடிவு செய்யப்படும், என நீதிபதி தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT