சென்னை: பாராகுவே நாட்டில் நடைபெற்ற உலக ஸ்கேட்டிங் விளையாட்டுப் போட்டி தொடரில் பதக்கங்களை வென்று சாதனை படைத்த தமிழக வீரர், வீராங்கனைகளுக்கு முதல்வர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில், ‘பாராகுவே நாட்டின் அசுன்சியோன் நகரில் நடைபெற்ற உலக ஸ்கேட்டிங் விளையாட்டுப் போட்டிகள் 2026 தொடரின் ஆண்கள் மாரத்தான் பிரிவில் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ள தமிழ்நாடு ஸ்கேட்டிங் வீரர் ஆனந்த்குமார், ஜூனியர் பெண்களுக்கான 3,000 மீட்டர் தொடர் ஓட்டப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ள தமிழகத்தைச் சேர்ந்த ஸ்கேட்டிங் வீராங்கனைகள் லட்சிதா, பிரகதி மற்றும் ருத்வ ஆகியோருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள் மற்றும் பாராட்டுகள்.
இந்தப் போட்டிகளில் ஸ்கேட்டிங் வீரர் ஆனந்த்குமார், ஏற்கனவே 500 மீட்டர் பிரிவில் வெண்கலமும், 1000 மீட்டர் பிரிவில் வெள்ளியும் வென்றிருப்பதோடு, தற்போது மூன்றாவதாகத் தங்கப் பதக்கத்தையும் வென்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இச்சாதனைகள் விளையாட்டுத் துறையில் சாதனை படைக்கத் துடிக்கும் இளைய தலைமுறையினருக்குப் புதிய ஊக்கத்தையும், உத்வேகத்தையும் அளிக்கிறது. பதக்கங்களை வென்று தமிழ்நாட்டிற்கும், இந்தியாவிற்கும் பெருமை சேர்த்த ஸ்கேட்டிங் வீரர் ஆனந்த்குமார், வீராங்கனைகள் லட்சிதா, பிரகதி மற்றும் ருத்வ ஆகியோர் மேலும் பல உயரங்களை எட்ட வாழ்த்துகிறேன்.’ என்று தெரிவித்துள்ளார்.