சென்னை: 5-வது ஆசிய பாரா விளையாட்டு போட்டி ஜப்பானின் ஐச்சி-நகோயா மாகாணத்தில் நடைபெற்று வருகிறது. இதில் ஆடவர் நீளம் தாண்டுதல் டி64 பிரிவில் தங்கம் வென்ற தமிழகத்தின் சோலைராஜ் தர்மராஜுக்கு ரூ.75 லட்சம் ஊக்கத்தொகை அறிவித்துள்ளார் முதல்வவர் விஜய்.
இது தொடர்பாக முதல்வர் விஜய் வெளியிட்ட அறிக்கையில், “ஜப்பானில் நடைபெற்று வரும் 5-வது பாரா ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், தடகளத்தில் ஆடவர் நீளம் தாண்டுதல் டி64 பிரிவில் தங்கப் பதக்கம் வென்று தமிழகத்துக்கும், இந்தியாவுக்கும் பெருமை சேர்த்துள்ள விளையாட்டு வீரர் சோலைராஜ் தர்மராஜுக்கு எனது நெஞ்சார்ந்த பாராட்டுகளையும், நல்வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
அவரது சாதனையைப் பாராட்டும் வகையில், தமிழக அரசு சார்பில் ரூ.75 லட்சம் உயரிய ஊக்கத்தொகை வழங்கப்படும்.
திறமையும், உறுதியும் இருந்தால் எத்தகைய சவால்களையும் கடந்து சாதிக்க முடியும் என்பதற்கு அவரது இம்மகத்தான வெற்றி சான்றாகத் திகழ்வதோடு, தமிழகத்தின் விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்குப் புதிய நம்பிக்கையும், ஊக்கத்தையும் அளிப்பதாகவும் அமைந்துள்ளது.
எதிர்காலத்திலும் அவர் பல வெற்றிகளைப் பெற்று தமிழகத்துக்கும், இந்தியாவுக்கும் பெருமை சேர்க்க எனது வாழ்த்துகள்” என்று தெரிவித்துள்ளார்.
மனிஷா, நித்யஸ்ரீக்கும் ஊக்கத்தொகை அறிவிப்பு
முன்னதாக, பாரா ஆசிய விளையாட்டுப் போட்டியில் பேட்மிண்டனில் வெண்கலம் வென்ற தமிழக வீராங்கனைகள் மனிஷா ராமதாஸ், நித்யஸ்ரீ ஆகியோருக்கு முதல்வர் விஜய் வாழ்த்து தெரிவித்து, ரூ.30 லட்சம் ஊக்கத்தொகை அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஜப்பானில் நடைபெற்றுவரும் 5-வது பாரா ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பேட்மிண்டன் விளையாட்டில் கலப்பு இரட்டையர் எஸ்.எல்.3- எஸ்.யு.5 பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய அணிக்கும், அந்த அணியில் இடம்பெற்றுள்ள தமிழக வீராங்கனை மனிஷா ராமதாஸுக்கும் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்.
அதேபோல, பேட்மிண்டன் விளையாட்டில் கலப்பு இரட்டையர் எஸ்.ஹெச்.6 பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய அணிக்கும், அந்த அணியில் இடம்பெற்றுள்ள தமிழக வீராங்கனை நித்யஶ்ரீக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள்.
இப்போட்டியில் பதக்கம் வென்ற தமிழக வீராங்கனைகள் மனிஷா, நித்யஸ்ரீ ஆகியோரின் சாதனையைப் பாராட்டும் வகையில், தமிழக அரசு சார்பில் ரூ.30 லட்சம் ஊக்கத்தொகை வழங்கப்படும். விடாமுயற்சி, கடின உழைப்பால் சாதனை படைத்துள்ள வீராங்கனைகளின் வெற்றி இளம் தலைமுறை பாரா விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்குப் புதிய நம்பிக்கையை அளிக்கும். எதிர்காலத்திலும் அவர்கள் பல வெற்றிகளைப் பெற்று தமிழகத்துக்கும், இந்தியாவுக்கும் பெருமை சேர்க்க வாழ்த்துகள்” என்று அவர் தெரிவித்துள்ளார்.