தமிழகம்

கோவை கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் விஜய் திடீர் ஆய்வு

டி.ஜி.ரகுபதி

கோவை: கோவை கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் விஜய் இன்று (நவ.3) திடீர் ஆய்வு செய்தார்.

ஈரோடு மாவட்டம், பெருந்துறையில் நடைபெறும் அரசு விழாவில் கலந்து கொண்ட பின்னர், இன்று (நவ.3) மாலை முதல்வர் விஜய் சாலை மார்க்கமாக கோவை விமான நிலையம் நோக்கி புறப்பட்டு வந்து கொண்டிருந்தார்.

கோவை மாவட்ட எல்லைக்குள் நுழைந்தவுடன், அவிநாசி சாலையில் உள்ள கருமத்தம்பட்டி அருகே வந்தபோது, கருமத்தம்பட்டி காவல் நிலையத்துக்கு வாகனத்தை திருப்புமாறு முதல்வர் விஜய் கூறினார்.

இதையடுத்து முதல்வரின் வாகனம் கருமத்தம்பட்டி காவல் நிலையம் நோக்கி சென்றது. தொடர்ந்து முதல்வர் விஜய் கருமத்தம்பட்டி காவல் நிலையத்துக்குள் சென்று திடீர் ஆய்வு செய்தார். அங்கு இருந்த காவல் ஆய்வாளர் நவநீத கிருஷ்ணன் மற்றும் காவலர்கள் முதல்வரின் திடீர் ஆய்வை கண்டு அதிர்ந்தனர்.

தொடர்ந்து காவல் நிலையத்துக்குள் சென்ற முதல்வர் விஜய் அங்கு உள்ள அறைகளை பார்வையிட்டார். பின்னர், காவல் ஆய்வாளர் அறையில், காவல் ஆய்வாளரின் மேஜைக்கு முன்புறம் இருந்த இருக்கையில் அமர்ந்தார். காவல் ஆய்வாளர் நவநீத கிருஷ்ணன் அவரது இருக்கையில் அமர்ந்திருந்தார்.

முதல்வரின் இருக்கைக்கு அருகே, சட்டம் - ஒழுங்கு கூடுதல் டிஜிபி அன்பு, மேற்கு மண்டல ஐஜி ஆர்.வி.ரம்யாபாரதி, காவல் கண்காணிப்பாளர் பவன்குமார் ரெட்டி ஆகியோர் இருந்தனர்.

தொடர்ந்து காவல் நிலையம் தொடர்பான விவரங்களை ஆய்வாளரிடம் முதல்வர் விஜய் கேட்டறிந்தார். கருமத்தம்பட்டி காவல் நிலையத்தின் எல்லை, இங்குள்ள முக்கிய கிராமங்கள், சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு நிலவரம், வழக்குகள் மீது எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் உள்ளிட்டவை குறித்து கேட்டறிந்தார்.

பின்னர், பொதுமக்கள் பாதுகாப்பு தொடர்பான அறிவுறுத்தல்களை காவல் ஆய்வாளரிடம் கூறிவிட்டு முதல்வர் விஜய் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT