சீனாவின் ஷாங்காய் நகரில் நடைபெற்ற உலகத்திறன் போட்டிகளில் பதக்கம் வென்ற தமிழகத்தைச் சேர்ந்த வீரர்களுக்கு முதல்வர் விஜய் ஊக்கத்தொகை வழங்கிப் பாராட்டினார்.
சென்னை: சீனாவின் ஷாங்காய் நகரில் நடைபெற்ற உலகத்திறன் போட்டிகளில் பதக்கம் வென்றவர்கள், போட்டியில் பங்கேற்றவர்கள் என தமிழகத்தைச் சேர்ந்த 12 பேருக்கு ரூ.49 லட்சத்துக்கான ஊக்கத் தொகை வழங்கி முதல்வர் விஜய் பாராட்டினார்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: சீனாவின் ஷாங்காய் நகரில் 68 நாடுகள் பங்கேற்ற 48-வது உலகத் திறன் போட்டிகளில், 6 வெள்ளிப் பதக்கங்கள் மற்றும் 20 சிறப்புத் தகுதிப் பதக்கங்களை (Medal for Excellence) வென்று இந்தியா 10-வது இடத்தைப் பிடித்தது. மொத்தம் 63 திறன் பிரிவுகளில் களம் கண்ட 70 பேர் கொண்ட இந்திய அணியில், தமிழகத்திலிருந்து 12 பேர் பங்கேற்றனர். இவர்களில் 5 பேர் சர்வதேச அளவில் பதக்கங்களை வென்றுள்ளனர்.
இப்போட்டிகளில் டென்டல் புராஸ்தெடிக்ஸ் பிரிவில் ஜா.முகமது சலாம் வெள்ளிப் பதக்கமும், இன்டலிஜன்ட் செக்யூரிட்டி டெக்னாலஜி பிரிவில் தகா.பா.ராகுல், மொபைல் அப்ளிகேஷன்ஸ் டெவலப்மென்ட்டில் சு.வி.அர்ஜுன், பிளாஸ்டரிங் அண்டு டிரைவால் சிஸ்டம்ஸ் பிரிவில் ம.சுரேந்திரன், ஜூவல்லரி பிரிவில் ஜாய்தாஸ் ஆகியோர் சிறப்புத் தகுதிப்பதக்கங்களையும் வென்றனர்.
இந்தப் போட்டிகளில் பதக்கங்கள் வென்ற மற்றும் பங்கேற்ற தமிழக போட்டியாளர்களைச் சிறப்பிக்கும் வகையில் வெள்ளிப் பதக்கம் வென்ற ஜா.முகமது
சலாமுக்கு ரூ.15 லட்சம், சிறப்புத் தகுதிப் பதக்கங்களை வென்ற நால்வருக்கும் தலா ரூ.5 லட்சம், போட்டிகளில் பங்கேற்ற 7 பேருக்கும் தலா ரூ.2 லட்சம் என 12 பேருக்கு மொத்தம் ரூ.49 லட்சம் ஊக்கத் தொகைக்கான காசோலைகளை முதல்வர் விஜய் நேற்று வழங்கி பாராட்டினார்.
இப்போட்டிகளில் பள்ளிகள், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள், பாலிடெக்னிக் கல்லூரிகள், தொழிற்பயிற்சி நிலையங்கள், ஓட்டல் மேனேஜ்மென்ட், மருத்துவம் மற்றும் துணை மருத்துவப் படிப்புகள் பயிலும் மாணவ, மாணவியர் மற்றும் பணிபுரியும் இளைஞர்கள் உள்ளிட்டோர் பங்கேற்கலாம்.
உலகத் திறன் போட்டிகள் குறித்த விவரங்களைத் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தின் உதவி எண்கள் 9962220527 மற்றும் 9962220528 ஆகியவற்றைத்தொடர்பு கொண்டும், www.skilldevelopment.tn.gov.in/tnskills/ என்ற இணையதளம் மூலமாகவும் அறியலாம். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில், தலைமைச் செயலர் மு.சாய்குமார், சிறப்புத்திட்டச் செயலாக்கத் துறை செயலர் சோ. மதுமதி, திறன் மேம்பாட்டுக் கழக எம்டி கவிதா ராமு பங்கேற்றனர்.
முதல்வர் கோப்பை பரிசளிப்பு: தமிழகத்தில் ஆண்டுதோறும் முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அந்தவகையில் நடப்பாண்டுக்கான போட்டிகள் நடைபெற்றன. இவற்றில் வெற்றி பெற்றவர்களுக்கான மாநில அளவிலான இறுதிப் போட்டிகள் இன்றுடன் நிறைவு பெறுகின்றன.
வெற்றி பெற்ற அணிகள் மற்றும் வீரர்களுக்கான பரிசளிப்பு விழா நாளை (அக். 29) சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது. இதில் முதல்வர் விஜய் பங்கேற்று, வெற்றி பெற்றோருக்கு ரூ.17 கோடியே 4 லட்சத்து 25 ஆயிரம் மதிப்பிலான பரிசுத்தொகையையும், பதக்கங்களையும் வழங்குகிறார்.