சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் நேற்று பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு பேசிய முதல்வர் விஜய்.

 
தமிழகம்

திமுக ஆட்சியில் போராடிய விவசாயிகள், ஆசிரியர்கள் மீதான அனைத்து வழக்குகளும் வாபஸ்: முதல்வர் விஜய் அறிவிப்பு

செய்திப்பிரிவு

சென்னை: ‘‘கடந்த திமுக ஆட்சியில் கோரிக்கைகளுக்காக அமைதியான முறையில் போராடிய விவசாயிகள், ஆசிரியர்கள் மீது பதிவு செய்யப்பட்ட அனைத்து வழக்குகளும் வாபஸ் பெறப்படும்’’ என்று சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் தெரிவித்தார்.

இதுதொடர்பாகத் தமிழக சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் அறிவிப்பை வெளியிட்டு முதல்வர் விஜய் நேற்று பேசியதாவது: தவெக அரசு பொறுப்பேற்ற மே 10-ம் தேதி முதல், சமுதாயத்தின் அனைத்து தரப்பு மக்களுக்கும் ஜனநாயக நெறிமுறைகளின் அடிப்படையில், வெளிப்படைத்தன்மை மற்றும் ஊழலற்ற நேர்மையான அரசாக சேவையாற்றி வருகிறது. மக்களின் கருத்துரிமை, போராட்ட உரிமை மற்றும் ஜனநாயக உரிமைகளை மதித்து, சட்டத்துக்கு உட்பட்டு மக்கள் தங்கள் கோரிக்கைகளை முன்வைப்பதற்கான சூழலை இந்த அரசு உறுதிப்படுத்தி வருகிறது.

ஆனால், கடந்த திமுக ஆட்சி காலங்களில் தங்களது வாழ்வாதாரம், உரிமைகள் மற்றும் சமூக நலன் தொடர்பான கோரிக்கைகளை முன்வைத்து போராடிய விவசாயிகள் மற்றும் ஆசிரியர்கள் மீது 2021-ம் ஆண்டு மே மாதம் முதல் 2026-ம்ஆண்டு ஏப்ரல் வரை ஏராளமான வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. ஜனநாயக முறையில் குரல் கொடுத்த மக்களுக்கு உரிய அனுமதிகள் மறுக்கப்பட்டதோடு, அவர்கள் மீது பதியப்பட்ட வழக்குகளால் இன்று வரையிலும் மிகுந்த சிரமத்துக்கும் ஆளாகியுள்ளனர்.

விவசாயிகள் நாட்டின் பொருளாதார முன்னேற்றத்துக்கும், உணவு பாதுகாப்புக்கும் அடிப்படையாக விளங்கும் சமூகத்தின் முதுகெலும்பாகப் போற்றப்பட வேண்டியவர்கள். அவ்வாறான விவசாயிகள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி நடத்திய பல்வேறு போராட்டங்களுக்காக, அவர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகள் இன்றும் நிலுவையில் உள்ளன. அதேபோல், திருவண்ணாமலை மாவட்டம், சிப்காட் தொழிற்பேட்டை எதிர்ப்பு போராட்டங்களில் ஈடுபட்ட விவசாயிகள் மீது வழக்குகள் பதிவுசெய்யப்பட்டதுடன், சில விவசாயிகள் மீது குண்டர் தடுப்பு சட்டமும் போடப்பட்டது.

பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தைக் கைவிட வேண்டும் என்று போராடிய விவசாயிகள் மீதும் முந்தைய அரசால் மனிதநேயமற்ற வகையில் பதிவு செய்யப்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. அதேபோல், கல்வியின் ஒளியை ஏற்றி சமூக முன்னேற்றத்துக்கு வழிகாட்டும் ஆசிரியர்கள் நாட்டு வளர்ச்சியின் அடித்தளமாக உள்ளனர்.

ஆசிரியர்கள் தங்களது நியாயமான கோரிக்கைகள் மற்றும் உரிமைகளுக்காக ஜனநாயக முறையில் போராடிய போதும், அவர்கள் மீதும் பதிவு செய்யப்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதனால் ஆசிரியர்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.

எனவே, ஜனநாயக உரிமைகளை மதிக்கும் இந்த அரசு, கடந்த ஆட்சியாளர்களால் விவசாயிகள் மற்றும் ஆசிரியர்கள் மீது பதிவு செய்யப்பட்ட அனைத்து வழக்குகளையும் மனிதநேய அடிப்படையிலும், ஜனநாயக கொள்கைகளின் அடிப்படையிலும் திரும்பப் பெற முடிவு செய்துள்ளது என்பதை இந்த பேரவைக்கு மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

விவசாயிகள் மற்றும் ஆசிரியர்களுக்கும், அவர்களது நியாயமான கோரிக்கைகளுக்கும் இந்த அரசு உறுதுணையாக நிற்கும். இந்த நடவடிக்கை ஜனநாயக உரிமைகளை மேலும் வலுப்படுத்துவதோடு, சாமானிய மக்களுக்கும் அரசுக்கும் இடையிலான நம்பிக்கையை உறுதிப்படுத்தும். இவ்வாறு முதல்வர் விஜய் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT