முதல்வருடன் தமிழக டென்னிஸ் சங்க நிர்வாகிகள் சந்திப்பு
சென்னை: சென்னை ஓபன் சர்வதேச மகளிர் டென்னிஸ் சாம்பியன்ஷிப்-2026 போட்டிகளை சிறப்பாக நடத்துவதற்கு முதல்வர் விஜய் ரூ.10 கோடி நிதி ஒதுக்கியுள்ளார்.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் தமிழ்நாடு டென்னிஸ் சங்கம் சார்பில் சென்னை ஓபன் சர்வதேச மகளிர் டென்னிஸ் சாம்பியன்ஷிப்-2026 போட்டிகள் நவம்பர் மாதம் நடத்தப்பட உள்ளன. இந்தப் போட்டிகள் நுங்கம்பாக்கத்தில் அமைந்துள்ள டென்னிஸ் அரங்கில் நடைபெற உள்ளன.
தற்போது இதற்கான முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும், நடப்பாண்டு நடைபெறவுள்ள போட்டிகளில் உலகின் முன்னணி மகளிர் டென்னிஸ் வீராங்கனைகள் கலந்துகொள்ள இருக்கின்றனர்.
இந்நிலையில், தமிழ்நாடு டென்னிஸ் சங்கத்தின் தலைவர் விஜய் அமிர்தராஜ் தலைமையிலான குழுவினர், முதல்வர் விஜய்யை சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று சந்தித்துப் பேசினர். அதன்பின் டென்னிஸ் போட்டிகளை சிறப்பாக நடத்துவதற்காக தமிழக அரசின் சார்பில் ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்று முதல்வர் விஜய் அறிவித்துள்ளார்.
இந்நிகழ்வின்போது, விளையாட்டுத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, தலைமைச் செயலாளர் மு.சாய்குமார், விளையாட்டுத் துறை செயலர் சந்தீப் நந்தூரி, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் ஜெ.மேகநாத ரெட்டி ஆகியோர் உடனிருந்தனர்.
இந்தப் போட்டிகள் தமிழகத்தை உலக விளையாட்டு அரங்கில் உயர்த்துவதுடன், விளையாட்டு சுற்றுலாவை ஊக்குவித்து இளம் வீரர்களுக்கு புதிய உத்வேகத்தை அளிக்கும் வகையில் நடத்தப்படவுள்ளன.
சர்வதேச தரத்திலான விளையாட்டுப் போட்டிகளை தொடர்ந்து நடத்துவதன் மூலம், உலகத்தரம் வாய்ந்த விளையாட்டு மையமாக நமது மாநிலத்தை உருவாக்கவும், விளையாட்டுத் திறன்களை மேம்படுத்தவும், இளம் தலைமுறையினருக்கு சிறந்த வாய்ப்புகளை ஏற்படுத்தவும் தமிழக அரசு தொடர்ந்து பல்வேறு முன்னெடுப்புகளை செய்துவருவது குறிப்பிடத்தக்கது.