முதல்வர் கோப்பை விளையாட்டுப் போட்டி நிறைவு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நேற்று நடைபெற்றது. 142 தங்கம் உள்பட 319 பதக்கங்களுடன் முதலிடம் பிடித்த சென்னை அணி வீரர்களுக்கு முதல்வர் விஜய் கோப்பை, பதக்கங்களை வழங்கி பாராட்டினார். உடன் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, தலைமைச் செயலர் சாய்குமார் உள்ளிட்டோர்.
சென்னை: முதல்வர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளில் 142 தங்கம் உள்பட 319 பதக்கங்களுடன் முதலிடம் பிடித்த சென்னை அணி வீரர்களுக்கு முதல்வர் விஜய் கோப்பை, பதக்கங்களை வழங்கி பாராட்டினார்.
தமிழகத்தின் 38 மாவட்டங்களிலும் பள்ளி, கல்லூரி மாணவர்கள், மாற்றுத்திறனாளிகள், அரசு ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் என 5 பிரிவுகளின் கீழ் நடத்தப்பட்ட முதல்வர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளில் மாநில அளவிலான போட்டிகள் கடந்த அக்.15-ம் தேதி தொடங்கின.
சென்னை, செங்கல்பட்டு, கோவை, மதுரை உள்ளிட்ட 10 மாவட்டங்களில் 32,603 வீரர், வீராங்கனைகளுடன் விறுவிறுப்பாக நடைபெற்ற போட்டிகள் நேற்று முன்தினம் (அக்.28) நிறைவடைந்தன.
இதில் 142 தங்கம் உள்பட 319 பதக்கங்களை குவித்து சென்னை மாவட்டம் முதலிடத்தைப் பிடித்தது. செங்கல்பட்டு மாவட்டம் 64 தங்கம் உள்பட 143 பதக்கங்களுடன் இரண்டாம் இடத்தையும், கோவை மாவட்டம் 27 தங்கம் உள்பட 118 பதக்கங்களுடன் மூன்றாம் இடத்தையும் பிடித்தன.
இதைத் தொடர்ந்து, முதல்வர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளுக்கான நிறைவு மற்றும் பரிசளிப்பு விழா சென்னை ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டரங்கில் நேற்று நடைபெற்றது.
விழாவுக்கு தலைமை தாங்கிய முதல்வர் விஜய், போட்டிகளில் முதல் மூன்று இடங்களை பிடித்த வீரர், வீராங்கனைகள் மற்றும் அணிகளுக்கு கோப்பை, பதக்கங்கள் மற்றும் ரூ.38 கோடிக்கான பரிசுத்தொகைகளை வழங்கி பாராட்டினார்.
மேலும், ஜப்பானில் நடைபெற்ற 5-வது ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்கள் வென்று சாதனை படைத்த 9 விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு ரூ.6.85 கோடி உயரிய ஊக்கத்தொகைகளுக்கான காசோலைகளை வழங்கினார்.
அப்போது வீரர்களிடம் கலந்துரையாடி அவர்களின் கோரிக்கைகளை கேட்டறிந்த முதல்வர் விஜய்யுடன், அவர்களது குடும்பத்தினருடன் குழுப் புகைப்படமும் எடுத்துக்கொண்டனர்.
தொடர்ந்து நீர் விளையாட்டுகளில் தமிழக வீரர்கள் உலகத் தரம் வாய்ந்த பயிற்சிகளை பெறுவதற்காக ராமநாதபுரம் பிரப்பன்வலசையில் ரூ.42.90 கோடியில் 7.18 ஏக்கர் பரப்பளவில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு ஒலிம்பிக் நீர் விளையாட்டு அகாடமியையும், சேலம் கருப்பூர் அரசினர் பொறியியல் கல்லூரி வளாகத்தில் ரூ.20 கோடியில் உருவாக்கப்பட்டுள்ள பல்நோக்கு விளையாட்டு வளாகத்தையும் முதல்வர் விஜய் திறந்து வைத்தார்.
முன்னதாக விளையாட்டுத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேசுகையில், “‘ட்ரீம்ஸ்’ ஒலிம்பிக்ஸ் என்ற குறிக்கோளுடன் நடத்தப்பட்ட முதல்வர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளில் இதுவரை இல்லாத அளவில் முதல்முறையாக 27.82 லட்சம் பேர் பங்கேற்க பதிவு செய்திருந்தனர்.
போட்டிகளை நடத்துவதற்காக ரூ.83.36 கோடி செலவிடப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே முதல்வர் கோப்பைக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்தது நம் முதல்வர் தான்.
ஒரே ஒரு ஒலிம்பிக் பதக்கம் வெல்லுங்கள். உலகின் நம்பர் ஒன் ஆக நீங்கள் மாறும்போது, ஒட்டுமொத்த பொருளாதாரமும், தமிழகமும் உங்களை தேடி வரும். நாம் சாதாரணமாக ஜெயிக்க கூடாது.
ஒரு வரலாற்றை உருவாக்க வேண்டும்” என்று தெரிவித்தார். இந்நிகழ்வில் தலைமைச் செயலர் எம்.சாய்குமார், விளையாட்டுத் துறை செயலர் சந்தீப் நந்தூரி, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் உறுப்பினர் செயலர் மேகநாத ரெட்டி, அதன் இணைத் தலைவரும், மிஷன் ஒலிம்பிக் திட்டத்தின் சிறப்பு அதிகாரி எஸ்பி மயில்வாகணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.