சென்னை: ‘‘தன்னிறைவும், பொருளாதாரச் சுதந்திரமும், சிறந்த உடல்நலனும் கொண்டவர்களாகத் தமிழக மகளிரை உயர்த்தும் சமூக விடுதலை இலக்கினை அடுத்த 5 ஆண்டுகளில் உறுதியாக அடைவோம்’’ என்று மகளிர் தினத்தை ஒட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
உலக மகளிர் தினத்தை ஒட்டி அவர் வெளியிட்ட வாழ்த்துச்செய்தியில் கூறியிருப்பதாவது: உலகை இயக்கும் பேராற்றலான என் அன்புக்குரிய தாய்மார்கள், சகோதரிகள் அனைவருக்கும் இனிய உலக மகளிர் நாள் வாழ்த்துகள்.“பெண் ஏன் அடிமையானாள்?” எனக் கேள்வியெழுப்பி விழிப்புணர்வை ஏற்படுத்தினார் தந்தை பெரியார். அவரது கொள்கை வழித்தோன்றலாக மு.கருணாநிதி பெண்களுக்குச் சொத்தில் சமபங்கு உரிமை அளித்துச் சட்டம் நிறைவேற்றினார்.
அரசுப் பணியிடங்களில் இட ஒதுக்கீடு அளித்தார். இத்தகைய பெண்ணினக் காவலர்களின் வழியிலான நமது திராவிட மாடல் அரசு இந்த ஆட்சியையே மகளிரின் உயர்வுக்கான ஆட்சியாக நடத்தி வருகிறது.
வெல்லும் தமிழ்ப்பெண்கள்: விடியல் பயணம், கலைஞர் மகளிர் உரிமைத்திட்டம், புதுமைப்பெண், முதல்வரின் காலை உணவுத் திட்டம், தோழி விடுதிகள், தனியார் தொழிற்சாலைகளில் குறிப்பிட்ட சதவீதம் பணியிட ஒதுக்கீடு, பெண்கள் பெயரில் சொத்துப்பதிவுக்கு பதிவுக்கட்டண சலுகை, 14 வயதுக்குட்பட்ட சிறுமிகளுக்கு இலவசமாகக் கருப்பைவாய்ப் புற்றுநோய் தடுப்பூசி, ஆதிதிராவிட – பழங்குடியினப் பெண்களுக்கான நன்னிலம் நிலவுடைமைத் திட்டம், திருக்கோயில்களில் பெண் ஓதுவார்கள் நியமனம், பெண்கள் வேலைவாய்ப்பு, பாதுகாப்புக்காக டிஎன்- விசேப் திட்டம், கிராமப் புறங்களில் இருந்தும் பெண் தொழில் முனைவோர்களை வளர்த்தெடுக்கும் டிஎன் ரைஸ் போன்ற எண்ணற்ற திட்டங்களால் திமுக ஆட்சியில் தமிழக மகளிர் வெல்லும் தமிழ்ப்பெண்களாக வரலாறு படைத்து வருகின்றனர்.
அடுத்து அமையவுள்ள திராவிட மாடல் 2.0 ஆட்சியில், மகளிர் உரிமைத்தொகை 2 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்படும் என அறிவித்துள்ளோம். அத்துடன், 3 மாதங்களுக்கான தொகையை முன்பணமாகவும், ரூ.2 ஆயிரத்தை கோடைகால சிறப்பு நிதியாகவும் தமிழகம் முழுவதும் 1.31 கோடி மகளிர் வங்கிக் கணக்கில் வரவு வைத்துள்ளோம்.
தரமான கல்வியும், உயர் வேலைவாய்ப்புகளும் தன்னிறைவும், பொருளாதாரச் சுதந்திரமும், அனைத்துக்கும் மேலாக சிறந்த உடல்நலனும் கொண்டவர்களாகத் தமிழகத்தில் உள்ள அனைத்து மகளிரையும் உயர்த்தும் சமூக விடுதலை இலக்கினை அடுத்த 5 ஆண்டுகளில் உறுதியாக அடைவோம்.
ஒரு ட்ரில்லியன் டாலர் பொருளாதாரம் கொண்ட தமிழகம் எனும் என் லட்சியக் கனவை முன்னின்று நிறைவேற்றப் போவது நீங்கள்தான். உங்கள் அனைவருக்கும் மீண்டும் எனது மகளிர் நாள் நல்வாழ்த்துகள்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.