கொடைக்கானல் நட்சத்திர ஏரியைச் சுற்றி உற்சாகமாக சைக்கிள் ஓட்டிச் சென்ற முதல்வர் ஸ்டாலின்.
கொடைக்கானல்: கொடைக்கானல் நட்சத்திர ஏரியைச் சுற்றி முதல்வர் ஸ்டாலின் நேற்று காலை உற்சாகமாக சைக்கிள் ஓட்டினார். இன்று அவர் சென்னை திரும்புகிறார்.
தமிழகத் தேர்தல் முடிவடைந்துள்ள நிலையில் கொடைக்கானலில் 5 நாட்கள் ஓய்வெடுக்க குடும்பத்துடன் முதல்வர் ஸ்டாலின் வந்துள்ளார். நேற்று காலை நட்சத்திர ஏரிப் பகுதியில் நடைப்பயிற்சியில் ஈடுபட்டார். அப்போது, ஆரோக்கியத்துடன் இருக்க தினமும் ‘வாக்கிங் போங்க…’ என்று பொதுமக்களுக்கு ஆலோசனை வழங்கினார்.
அவருடன் சுற்றுலாப் பயணிகள் செல்ஃபி எடுத்து கொண்டார். சிலர் அவருக்கு மலைப்பூண்டு, பூங்கொத்து வழங்கினர். அவரைப் பார்க்க தனது தந்தையுடன் வந்திருந்த சிறுமி ஒருவர் ‘ஸ்டாலின் தொடரட்டும், தமிழ்நாடு வெல்லட்டும்’ என்ற திமுகவின் பிரச்சாரப் பாடலைப் பாடிக் காண்பித்தார். உடனே, சிறுமியை கன்னத்தில் தட்டிக் கொடுத்து பாராட்டினார். இடையில் ஓர் உணவகத்தில் டீ அருந்தினார்.
பின்னர், நட்சத்திர ஏரியைச் சுற்றி சிறிது தூரம் சைக்கிள் பயணம் மேற்கொண்டார். முதல்வர் ஸ்டாலின் சைக்கிள் பயணம் மேற்கொள்வதை அறிந்த ஏராளமான பொதுமக்கள் சாலையோரம் நின்று அவருக்கு கையசைத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். அவரும் பொதுமக்களைப் பார்த்து கையசைத்தவாறே சைக்கிள் பயணம் மேற்கொண்டார். பின்னர், காரில் ஏறி தங்கும் விடுதிக்கு திரும்பினார்.
காலை உணவுக்குப் பிறகு கொடைக்கானலில் உள்ள தனியார் அருங்காட்சியகத்துக்குச் சென்ற முதல்வர், அங்கிருந்த பழமையான கார்கள், நாணயங்கள், ரேடியோக்களை பார்வையிட்டு விடுதி திரும்பினார். முதல்வர் ஓய்வெடுப்பதற்காக வந்ததால் விடுதியில் அவரைப் பார்க்க கட்சி நிர்வாகிகள், முக்கிய பிரமுகர்கள் யாருக்கும் அனுமதி அளிக்கப்படவில்லை. இந்நிலையில் நேற்று மாலை திண்டுக்கல் மாவட்ட, கட்சி நிர்வாகிகளை அழைத்து முதல்வர் ஸ்டாலின் திடீர் ஆலோசனை நடத்தினார்.
அதில், அமைச்சர்கள் இ.பெரியசாமி, அர.சக்கரபாணி, எம்எல்ஏ செந்தில்குமார் மற்றும் முக்கிய நிர்வாகிகள் மட்டுமே பங்கேற்றனர். ஒரு மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்ற கூட்டத்தில் அவர்களுடன் தொகுதிகளில் வாக்குப்பதிவு, வெற்றி வாய்ப்பு நிலவரம், மீண்டும் ஆட்சி அமைப்பது, மக்கள் மனநிலை எப்படி இருக்கிறது என்பது தொடர்பாக முதல்வர் ஆலோசனை நடத்தினார். அவர்களும் வெற்றிவாய்ப்புப் பிரகாசமாக இருக்கிறது என்று கூறினர்.
தொடர்ந்து, 2-வது முறையாக ஆட்சியைப் பிடித்த கட்சி என்ற பெருமை திமுகவுக்கு கிடைக்கும் என்று கூறினர். அதைக் கேட்டு முதல்வர் மகிழ்ச்சி அடைந்ததாகவும், கொடைக்கானல் வந்த பிறகு மனதுக்கும், உடலுக்கும் புத்துணர்ச்சி கிடைத்திருப்பதாகவும், அதே உத்வேகத்துடன் மீண்டும் திராவிட மாடல் 2.0 ஆட்சி அமைத்து, தமிழக மக்களுக்குச் சேவை புரியும் வாய்ப்பு எனக்குக் கிடைக்கும் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் முதல்வர் கூறியதாக திமுக வட்டாரத்தில் கூறப்படுகிறது.
இதனிடையே 4 நாட்கள் ஓய்வுக்குப்பிறகு, இன்று (ஏப்.29) காலை குடும்பத்தினருடன் முதல்வர் கொடைக்கானலில் இருந்து காரில் புறப்பட்டு மதுரை சென்று, அங்கிருந்து தனி விமானத்தில் சென்னை திரும்புகிறார்.