சென்னை: தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் மக்கள் தீர்ப்பைத் தலைவணங்கி ஏற்பதாகவும், வென்றவர்களுக்கு வாழ்த்துகளை தெரிவிப்பதாகவும் முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: கடந்த 5 ஆண்டு காலத்தில் ஏராளமான திட்டங்களை உருவாக்கி, தமிழக மக்களுக்கு நல்லாட்சியை வழங்கினோம். தமிழகத்தை அனைத்து வகையிலும் உயர்த்தினோம்.
தேர்தல் களத்தில் எங்கள் சாதனைகளைச் சொல்லியே வாக்குகளை கேட்டோம். மக்களுக்கு செய்து கொடுத்த நலத்திட்டங்கள் தொடருவதற்கு வாக்கு கேட்டு நாங்கள் பரப்புரை செய்தோம். திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியை ஆதரித்து வாக்களித்த தமிழக மக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
வாக்களித்தவர்களுக்கு மட்டுமல்ல, வாக்களிக்க மறந்தவர்களுக்கும் சேர்த்தே ஆட்சி நடத்தினேன். அனைத்து மக்களுக்கும் உண்மையாக இருந்தேன். எனது மனச்சாட்சிப்படியே செயல்பட்டேன். எனது சக்தியை மீறி உழைத்தேன். என்னைப் போன்றே களத்தில் உழைத்த என் உயிரோடு கலந்திருக்கும் தொண்டர்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றி. எங்களுடன் தோள்நின்ற கூட்டணிக் கட்சியினர் அனைவருக்கும் நன்றி.
எனது அரசியல் வாழ்வில் அதிகப்படியான வெற்றியையும் பார்த்துள்ளேன். தோல்விகளையும் சந்தித்துள்ளேன். எனவே, லட்சியமும் கொள்கையும்தான் முக்கியமே தவிர, வெற்றி தோல்விகள் மட்டுமல்ல என்று செயல்படக்கூடியவன் நான்.
அதனால், திமுகவின் அரசியல் பயணம் தொய்வின்றி தொடரும். இதுவரை மக்களுக்காக சிறப்பான ஆளும்கட்சியாக செயல்பட்ட திமுக, இனி சிறப்பான எதிர்க்கட்சியாக செயல்படும். வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துகளை தெரிவிக்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.