சென்னை: “எந்த ஷா வந்தாலென்ன? எத்தனை திட்டம் போட்டாலென்ன? தமிழ்நாடு என்றைக்குமே ஆணவம் பிடித்த டெல்லிக்கு Out of Control தான்!” என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், மத்திய அரசு சார்பில் தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தப் பணிகள் (எஸ்ஐஆர்) மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில், திமுக சார்பில் “என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி” திட்டம் அன்மையில் தொடங்கப்பட்டது.
சென்னை மயிலாப்பூர் தொகுதி வாக்குச்சாவடி கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டார். ஒரு வாக்க்ச்சாவடியில் 440 வாக்குகளை இலக்காக நிர்ணயித்து ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் உறுப்பினர்களுக்கும், அவரவர்களுக்கான இலக்கையும் ஸ்டாலின் நிர்ணயித்து கொடுத்தார்.
இதையடுத்து திமுக வாக்குச்சாவடி உறுப்பினர்கள் ஒரு மாதம் வீடு வீடாக சென்று பரப்புரை மேற்கொள்ள உள்ளனர். அதேபோல் இந்தக் குழுக்களில் மகளிர் ஒருவராவது கட்டாயம் இருக்க வேண்டும் என்று திமுக தலைமை அறிவுறுத்தியுள்ளது.
இதனிடையே, தமிழக முதல்வர் ஸ்டாலின் தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ”எந்த ஷா வந்தாலென்ன? எத்தனை திட்டம் போட்டாலென்ன?
டெல்லி பாதுஷா என்ற நினைப்போடு தமிழ்நாட்டுக்கு வர நினைத்தால், ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் எங்களது கருப்பு சிவப்புப் படை உங்களுக்குத் தக்க பாடம் புகட்டும்!
தமிழ்நாடு என்றைக்குமே ஆணவம் பிடித்த டெல்லிக்கு Out of Control தான்” என்று குறிப்பிட்டுள்ளார்.