முதல்வர் ஸ்டாலின்
சென்னை: தேர்தலில் எத்தனை முனை போட்டி வந்தாலும் திமுக கூட்டணி வெற்றி பெறும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக வேட்பாளர் பட்டியலை முதல்வர் ஸ்டாலின் நேற்று வெளியிட்டார். அப்போது செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: அதிமுக முன்னாடியே வேட்பாளர்களை அறிவித்து விட்டார்களே, திமுக இன்னும் அறிவிக்க வில்லையே என்று கேட்கின்றனர், நாங்கள் கொஞ்சம் லேட்டா வந்தாலும், லேட்டஸ்ட்டா வந்திருக்கிறோம்.
ஏனென்றால் கூட்டணியில் பல கட்சிகள் இருக்கின்றன. அனைத்து கட்சிகளுடனும் உட்கார்ந்து பொறுமையாக பேசி, இடையூறுகளை களைந்து, எல்லோரையும் திருப்தி செய்து, இடங்களை ஒதுக்கீடு செய்திருக்கிறோம். அதற்காகதான் நேரம் ஆகியிருக்கிறது.
மகா கூட்டணி: கடந்த 2021 தேர்தலை ஒப்பிடும்போது தேமுதிக உள்ளிட்ட புதிய கட்சிகள் கூட்டணிக்குள் வந்துள்ளன. அதன்படி, பார்த்தால் முதலில் இருந்தது மகா கூட்டணி. இப்போது அது மகா, மகா கூட்டணியாக மாறியிருக்கிறது. தேர்தல் அறிக்கை நாளை (இன்று) மாலை வெளியிடப்படும்.
தேர்தல் பிரச்சாரத்தை 31-ம் தேதி முதல் தொடங்க இருக்கிறேன். துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் 31-ம் தேதியும், திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி 30-ம் தேதியும் தொடங்கவுள்ளனர்.
பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என பழனிசாமி கூறிவருகிறார். அவர் அப்படித்தான் சொல்வார். ஏனென்றால் திமுக ஆட்சியில் சாதனைகள் செய்யவில்லை என்று அவரால் சொல்ல முடியாது. வேறு ஒன்றும் குறை சொல்வதற்கு வழி இல்லாததால் இதை திருப்பித் திருப்பி சொல்லிக் கொண்டிருக்கிறார். தேர்தலுக்கான பணிகளை நாடாளுமன்ற தேர்தல் முடிந்த உடனே ஆரம்பித்துவிட்டோம். அடுத்த 5 ஆண்டுகளுக்கான திட்டங்கள் தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்படும்.
சீட் கிடைக்காதவர்களுக்கு நான் சொல்ல விரும்புவது, “அண்ணா அடிக்கடி சொல்வார், ஒரு கல்யாணத்துக்கு போகும்போது ஒரு பட்டுப்புடவையைதான் கட்டிட்டு போக முடியும். பீரோவில் இருக்கிற எல்லா பட்டுப்புடவையும் கட்டிட்டு போக முடியாது. அடுத்த கல்யாணத்துக்கு அந்த பட்டுப்புடவையை கட்டிட்டு போவோம் என்று அதைத்தான் நானும் சொல்கிறேன். இந்த தேர்தலில் எத்தனை முனை போட்டி வந்தாலும் திமுக கூட்டணி மாபெரும் வெற்றிபெறும். இவ்வாறு அவர் கூறினார்.