தமிழகம்

“மிசாவுக்கே பயப்படாதவன், அமித் ஷாவுக்கா பயப்படுவேன்?” - முதல்வர் ஸ்டாலின் ஆவேசம்

டெக்ஸ்டர்

ராணிப்பேட்டை: “மிசாவுக்கே அசராமல் எதிர்த்து நின்ற முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின். மிசாவுக்கே பயப்படாதவன், அமித்ஷாவுக்கா பயப்படுவேன்” என்று முதல்வர் ஸ்டாலின் ராணிப்பேட்டையில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் பேசினார்.

அதில் அவர் பேசியதாவது: “ராணிப்பேட்டையின் தொழில் வளர்ச்சி, கல்வி வளர்ச்சி, உட்கட்டமைப்பு வளர்ச்சிக்காக பார்த்து பார்த்து திட்டங்களைச் செய்து கொடுத்திருக்கிறோம்.

          

தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு தொகுதிக்கும் இதுபோன்று நிறைவேற்றப்பட்ட திட்டங்களை சொல்லித்தான் இன்றைக்கு வாக்குகளைக் கேட்டுக் கொண்டிருக்கிறோம். இப்படி, ஒவ்வொரு மாவட்டத்தையும் வளர்த்த காரணத்தால்தான், ஒட்டுமொத்தமாக தமிழ்நாடும் இன்றைக்கு வளர்ந்திருக்கிறது.

அதுவும் எப்படி? ஒன்றிய பா.ஜ.க. அரசின் தயவு இல்லாமலேயே இந்தளவுக்கு வளர்ந்திருக்கிறோம். பா.ஜ.க. அரசு பல ஆயிரம் கோடிகளை வாரி வழங்கியும், அவர்கள் ஆட்சி செய்யும் மாநிலங்களால் இந்த வளர்ச்சியைக் காண்பிக்க முடியவில்லை. நம்முடைய வீடுகளில் ஒரு பழமொழி சொல்லுவார்கள், “படிக்கிற புள்ள எங்க இருந்தாலும் படிக்கும்” என்று சொல்லுவார்கள்.

அதுபோன்று, திறமையிருந்தால் தடைகளை மீறியும் சாதிக்கலாம் என்பதற்கு திராவிட மாடல்தான் சிறந்த எடுத்துக்காட்டாக இன்றைக்கு விளங்குகிறது! “தமிழ்நாடு வளர்ந்தால், அது இந்தியாவுக்கான வளர்ச்சிதானே” என்று பா.ஜ.க. நினைக்கவில்லை. அந்த அளவுக்கு நம்முடைய வளர்ச்சி மீது பொறாமை.

தமிழர்களின் அடையாளமே மொழிதான். தமிழர், தமிழ்நாடு, இப்படி நம்முடைய இனம், நாம் வாழும் மாநிலம் என எல்லாமே மொழியை அடிப்படையாக கொண்டதுதான். அப்படிபட்ட மொழியையே அழித்துவிட்டால், தமிழர்களை எளிதாக அடிமைப்படுத்திடலாம்.

தமிழர் பண்பாட்டையே அழித்துவிடலாம் என்று அவர்கள் நினைக்கிறார்கள். அதனால்தான், செம்மொழித் தமிழை அழிக்க, மும்மொழித் திட்டம் கொண்டு வந்தே தீருவோம் என்று அடம் பிடிக்கிறார்கள். அராஜகம் செய்கிறார்கள்.

ஒன்றிய அரசின் 2 ஆயிரம் கோடி ரூபாய் கல்வி நிதி வேண்டும் என்றால், இந்தியைப் படித்தாக வேண்டும் என்று கட்டாயப்படுத்துகிறார்கள். 2 ஆயிரம் கோடிக்காக தமிழர்களின் சுயமரியாதையை அடமானம் வைக்க, நான் ஒன்றும் காலில் விழுந்து பதவி வாங்கிய பழனிசாமி இல்லை.

மிசாவுக்கே அசராமல் எதிர்த்து நின்ற முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின். மிசாவுக்கே பயப்படாதவன், அமித்ஷாவுக்கா பயப்படுவேன். நான் மக்களை சந்தித்து மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சர். அதனால், என்னுடைய விசுவாசம் என்றைக்குமே தமிழ்நாட்டு மக்களுக்குதான்.

மாநில உரிமையை அடகு வைத்து பதவியில் நீடிக்க வேண்டும் என்றால், அப்படி ஒரு பதவியே வேண்டாம் என்று சொல்லி, நெருக்கடி காலத்தில் ஆட்சியையே இழந்த கலைஞரின் கொள்கை வாரிசுகள் நாங்கள். நம்முடைய உரிமை முழக்கம், தமிழ்நாட்டில் மட்டுமல்ல; டெல்லி நாடாளுமன்றத்திலும் இன்றைக்கு ஓங்கி ஒலிக்கிறது. இந்தியாவில் இருக்கும் மற்ற மாநிலங்களைச் சேர்ந்த உறுப்பினர்களும், நம்மைப் பார்த்து மாநில உரிமைகளுக்காக குரல் கொடுக்க தொடங்கிவிட்டார்கள்.

அதனால்தான், இவர்களை இப்படியே விட்டு வைக்க கூடாது என்று, தொகுதி மறுவரையறையை கையில் எடுத்திருக்கிறது பி.ஜே.பி. நாட்டில் எவ்வளவோ பிரச்சினைகள் இருக்கிறது. சமைக்க சிலிண்டர் இல்லாமல், குடும்பங்களும் – ஹோட்டல்களும் திண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். ஆட்டோ ஓட்டுநர்கள், வண்டி ஓட்டுவதற்கு கேஸ் கிடைக்காமல் தவிக்கிறார்கள், புலம்புகிறார்கள். டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, வரலாற்றில் இல்லாத அளவுக்கு சரிந்து, டேபிளுக்கு அடியில் தவழ்ந்த பழனிசாமி போன்று இப்போது மொத்தமாக படுத்துவிட்டது.

அதையெல்லாம் கவனிக்காமல், தேர்தலுக்கு நடுவில் மக்களை திசை திருப்புவதற்காக, தொகுதி மறுவரையறையை இப்போதே நடத்தியாக வேண்டும் என்று, பா.ஜ.க. அரசு திட்டமிட்டு துடி துடிக்கிறது. இந்திய அரசியலையே மாற்றியமைக்கப் போகும் மிகப் பெரிய அரசியலமைப்புச் சட்டத் திருத்தம் இது.

இப்படி ஒட்டுமொத்தமாக, தென் மாநிலங்களுக்கும் - வட மாநிலங்களுக்குமான இடைவெளியை அதிகரித்து, இதுமூலமாக நாடாளுமன்றத்தில் நம்முடைய குரலை நசுக்கப் பார்க்கிறார்கள். இந்தியா மொத்தத்தையும் பாதிக்கும் முடிவு இது. ஆனால், மாநில அரசுகள் மற்றும் எதிர்க்கட்சிகளுடன் எந்த ஆலோசனையும் நடத்தாமல் அவசர அவசரமாக இதை அரங்கேற்றப் பார்க்கிறார்கள்.

அதுவும் இது தேர்தல் காலம். சாதாரண மக்களுக்கே எத்தனை கட்டுப்பாடுகளை தேர்தல் ஆணையம் விதிக்கிறார்கள்? ஆனால், ஒன்றிய பா.ஜ.க. அரசுக்கு ஏன் எந்தக் கட்டுப்பாடும் இல்லை? எப்படி, 5 மாநில தேர்தலுக்கு இடையே நாடாளுமன்ற சிறப்பு கூட்டத் தொடரை அவர்கள் கூட்டுகிறார்கள்? ஏன், தேர்தல் முடிந்து 29-ஆம் தேதிக்கு பிறகு கூட்டினால் என்ன? எதுக்கு இந்தப் பதற்றம்?

அம்மையார் ஜெயலலிதா அவர்களுடன் நமக்கு ஆயிரம் அரசியல் விமர்சனங்கள், கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால், அந்த அம்மையார் உயிருடன் இருந்திருந்தால், தொகுதி மறுவரையறை போன்று, மாநில உரிமைகளைப் பறிக்கும், தமிழ்நாட்டை பாதிக்கும் விஷயத்தில் தி.மு.க.-வைப் போன்றே நிச்சயமாக உறுதியான நிலைப்பாட்டை எடுத்திருப்பார். அதற்கு உதாரணம் சொல்ல வேண்டும் என்றால், ஜி.எஸ்.டி., நீட் போன்றவற்றை அவர் கடுமையாக எதிர்த்தார். ஏன், அவர் ஒரு வார்த்தை சொன்னாரே, “குஜராத் மோடியா, இந்த லேடியா?” என கேள்வி எழுப்பினார்.

இன்றைக்கு அவருடைய அ.தி.மு.க-வின் நிலைமையைப் பாருங்கள். தமிழ்நாட்டின் பிரதான எதிர்க்கட்சி, தமிழ்நாட்டின் வாழ்வாதார பிரச்சினையில்கூட பா.ஜ.க-வை எதிர்த்து குரல் கொடுக்க முடியாமல் இருக்கிறது. அம்மையார் ஜெயலலிதா அவர்களை, ‘அம்மா... அம்மா’ என்று சொல்லிவிட்டு, தமிழ்நாட்டிற்கு ஆபத்து வரும்போது இப்படி சும்மா இருக்கிறீர்களே? இது நியாயமா பழனிசாமி அவர்களே... இது அவர்களுக்கு செய்யும் துரோகம் இல்லையா... ‘மம்மி’ மறைந்த பிறகு, பழனிசாமி அந்தக் அ.தி.மு.க.வை ‘டம்மி’ ஆக்கிட்டார். இதுதான் உண்மை! தமிழ்நாட்டில் தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிதான் டெல்லியின் படையெடுப்பை தடுத்து நிறுத்தும் ஒரே அணி.

டெல்லி அணியின் அஜெண்டா என்ன? மாநில அரசுகளை ஒழிப்பது, தமிழை அழிப்பது, சிறுபான்மையினரை முடக்குவது, இந்தியைத் திணிப்பது, சமஸ்கிருதத்தை புகுத்துவது, ஆட்சிக்கு வந்த 12 ஆண்டுகளில் இதைத் தாண்டி வேறு ஒன்றும் அவர்கள் செய்யவில்லை. ஆனால், நம்முடைய திராவிட மாடல் அரசு வெறும் ஐந்தே ஆண்டுகளில் இந்தியாவே திரும்பிப் பார்க்கும், எல்லா மாநிலங்களும் பின்பற்றும் முத்திரைத் திட்டங்களை நிறைவேற்றிக் காட்டி இருக்கிறோம்” இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார். 

SCROLL FOR NEXT