தமிழகம்

“எப்படி பந்து வீசினாலும் சிக்ஸர் அடிப்போம்...” - பாஜகவுக்கு ஸ்டாலின் பதில்

செய்திப்பிரிவு

மதுரை உத்தங்குடியில் நடந்த அரசு விழாவில் ரூ.2,630.88 கோடியில் 63 முடிவுற்ற பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். அதைத் தொடர்ந்து, ரூ.17.18 கோடியில் 7 புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும், 1,77,562 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கியும் முதல்வர் பேசியதாவது:

தமிழகத்தில் ஒவ்வொரு நாளும் லட்சக்கணக்கான மக்கள் பயனடையும் வகையில் நலத்திட்ட உதவிகள் செயல்படுத்தப்படுகிறது. இதனால் எதிர்க்கட்சிகள் என்ன செய்வதென்றே தெரியாமல் விழிக்கின்றனர். ஆரோக்கியமற்ற அரசியல் சூழ்ச்சிகளை செய்து பார்க்கிறார்கள். நாம் வளர்ச்சி அரசியலை பேசினால், அவர்கள் வேறுஅரசியலை பேசுகிறார்கள். அவர்கள் எத்தனை சூழ்ச்சி செய்தாலும், அதை நாங்கள் முறியடிப்போம். மதுரைக்குத் தேவை வளர்ச்சி அரசியல்.

மதுரையை முக்கிய தொழில்மையமாக உயர்த்த முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தி வேலைவாய்ப்பை நாம் கொண்டு வருகிறோம். ஆனால் பாஜகவைச் சேர்ந்தவர்கள் இளைஞர்களை பகோடா விற்க சொல்கிறார்கள். மத்திய அரசு மதுரைக்கு மெட்ரோ ரயில் வேண்டாம் என்கிறது. பாஜக ஆளும் மாநிலங்களில் உள்ள பாட்னா, ஆக்ரா, இந்தூரில் மெட்ரோ ரயிலுக்கு எப்படி ஒப்புதல் கிடைத்தது? மதுரையில் மெட்ரோ ரயில் ஓடக் கூடாதா? மதுரைக்காரர்கள் என்றால் உங்களுக்கு இளக்காரமா?

நம்முடைய சிந்தனை எல்லாம் தமிழ்நாட்டின் வளர்ச்சியையும், முன்னேற்றத்தையும் பற்றித்தான் உள்ளது. ஆனால், சில கட்சிகளுக்கு எப்போதுமே கலவரசிந்தனைதான் உள்ளது. தேவையில்லாத பிரச்சினையை கிளப்பி, நம்முடைய வளர்ச்சிக்கு இடையூறு ஏற்படுத்தலாம் என்று நினைக்கிறார்கள்.

காலம் காலமாக கார்த்திகை தீபத்துக்கு, திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் தீபம் ஏற்றுவது போல, கடந்த 3-ம் தேதி மாலை 6 மணிக்கு பால தீபம் ஏற்றப்பட்டது. அதேநேரத்தில் உச்சிப் பிள்ளையார் கோயில் தீப மண்டபத்திலும் தீபம் ஏற்றி, சுவாமி புறப்பாடாகி பதினாறு கால் மண்டபத்துக்கு எதிரே சென்று சொக்கப்பனை ஏற்றப்பட்டது. இவையெல்லாம் அறநிலையத் துறை சார்பில் முறையாக நடைபெற்றது. இவை எல்லாம் உள்ளூர் மக்களுக்கும், உண்மையான பக்தர்களுக்கும் நன்றாக தெரியும். உள்ளூர் மக்கள் நல்லபடியாக தரிசனம் செய்துவிட்டு தான் வீட்டுக்குச் சென்றார்கள்.

இப்போது அங்கே பிரச்சினையை கிளப்புகிறவர்களின் நோக்கம் என்ன என்பது மக்களுக்குத் தெரியும். ஆன்மீகம் என்பது மன அமைதியை, நிம்மதியை தந்து, மக்களை ஒற்றுமையாக இருக்க வைக்க வேண்டும். இதுதான் உண்மையான ஆன்மீகமாக இருக்க முடியும்.ஒருசிலருடைய அரசியல் லாபங்களுக்காக பிளவுகளை உண்டாக்கி சமூகத்தை துண்டாடும் சதிச் செயல்கள் நிச்சயமாக ஆன்மீகமாக இருக்காது. அது அரசியல். திருப்பரங்குன்றத்தில் தீபம், எங்கே, எப்போது ஏற்றப்பட வேண்டுமோ அங்கே சரியாக முறையாக ஏற்றப்பட்டுள்ளது.

தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்து 1,490 நாட்களில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோயில்களுக்கு குடமுழுக்கு நடத்தி இருக்கிறோம். இப்படிப்பட்ட அரசை, ஆன்மீகத்துக்கு எதிரி என்று சொன்னால், அப்படி சொல்பவர்களின் உள்நோக்கம் என்ன என்று உண்மையான பக்தர்களுக்கு தெளிவாக தெரியும். அறத்தைக் கொண்டாடும் அமைதியான மாநிலமாகவே தமிழ்நாடு என்றைக்கும் இருக்கும்.

நம்முடைய எதிரிகள் டெல்லியில் இருந்து நமக்கு எத்தனை இடையூறுகள் செய்தாலும், நிதி நெருக்கடிகள் ஏற்படுத்தினாலும், ஆளுநர் மூலமாக முட்டுக்கட்டைகள் போட்டாலும், எல்லாவற்றையும் மீறி நாட்டிலேயே நம்பர் 1 ஆக வரலாறு காணாத பொருளாதார வளர்ச்சியை தமிழ்நாடு அடைந்திருக்கிறது.

இந்த வளர்ச்சிப் பயணத்தை, தாங்கிக் கொள்ள முடியாதவர்கள் சதித்திட்டங்கள் செய்கிறார்கள். நீங்கள் எப்படி பந்து வீசினாலும், தமிழ்நாட்டை பொறுத்தவரைக்கும் நாங்கள் அடிப்பது சிக்ஸர்தான். அந்த டீமுக்கு ஏற்றார்போல அடிமைகள் சிக்கலாம். பழைய அடிமைகள், புது அடிமைகளை வைத்து, ‘பி’ டீம், ‘சி’ டீம் உருவாகலாம். ஆனால், கடைசியில் சாம்பியன் நாங்கள்தான். இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் பிரவீன்குமார் தலைமை வகித்தார். மாநகராட்சி ஆணையர் சித்ரா முன்னிலை வகித்தார். அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, சாத்தூர் ராமச்சந்திரன், பி.மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன், எம்பிக்கள் சு.வெங்கடேசன், மாணிக்கம் தாகூர், தங்க தமிழ்ச்செல்வன், எம்எல்ஏக்கள் தளபதி, வெங்கடேசன், பூமிநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

SCROLL FOR NEXT