சென்னை: மேற்காசிய போர் விளைவாக எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டு அது பொதுமக்களையும், தொழிலாளர்களையும் பாதிக்கும் நிலை உருவாகியுள்ள சூழலில், “சிலிண்டர் வழங்குவதும், வெளியுறவுக் கொள்கையும் மாநில அரசின் கையிலா இருக்கிறது?” என காட்டமாக வினவியுள்ளார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்.
இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்த பதிவில் கூறியிருப்பதாவது: ‘கோவிட் காலத்தைப் போல’ என பிரதமர் பேசியதால், ஏற்கெனவே எரிவாயு தட்டுப்பாட்டால் தவிக்கும் மக்கள் மேலும் பீதிக்கு உள்ளாகியுள்ளனர். பெரும்பாலான உணவகங்கள் மூடப்பட்டு, தொழிலாளர்கள் வேலையிழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
தீவிர நடவடிக்கைகள் மூலம் இவற்றுக்குத் தீர்வு காண வேண்டிய ஒன்றிய பாஜக அரசு இதில் இருந்து செய்திகளைத் திசைதிருப்புவதற்காகவே தொகுதி மறுவரையறை script-ஐத் தற்போது கையிலெடுத்துள்ளது. பாஜக ஜாடிக்கு ஏற்ற மூடியாக, மக்கள் பிரச்சினையை மறந்தும் பேசமாட்டோம் எனத் தங்களுக்குத் தாங்களே வாய்ப்பூட்டு போட்டுக்கொண்டுள்ள அதிமுகவோ, மாநில அரசு என்ன செய்கிறது எனக் கேட்கிறார்கள்.
சிலிண்டர் வழங்குவதும், வெளியுறவுக் கொள்கையும் மாநில அரசின் கையிலா இருக்கிறது? மாநில அரசு தன்னால் இயன்ற அத்தனை நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளது. “இத்தனைக்கும் பொறுப்பான ஒன்றிய பாஜக அரசு என்ன செய்கிறது?” என்பதே மக்கள் முன்வைக்கும் கேள்வி,” என்று முதல்வர் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக நேற்று (மார்ச் 24) மேற்காசியப் போரின் தாக்கங்களில் இருந்து இந்திய மக்களைப் பாதுகாக்க, மத்திய அரசு எடுத்துள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்ன என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கேள்வி எழுப்பியிருந்தார். இந்நிலையில், இன்று மீண்டும் சிலிண்டர் பிரச்சினையை முன்வைத்து முதல்வர் கேள்வி எழுப்பியுள்ளார்.
அனைத்துக் கட்சிக் கூட்டம்: மேற்கு ஆசியாவில் ஏற்பட்டுள்ள போர் காரணமாக, நம் நாட்டில் சமையல் எரிவாயு (எல்பிஜி) தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் உணவகங்கள் சிக்கலை எதிர்கொண்டு வருகின்றன.
இதனிடையே, இதுகுறித்து விவாதிக்க அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டுமாறு எதிர்க்கட்சித் தலைவர்கள் வலியுறுத்தி வந்தனர். காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ், தற்போதைய மேற்கு ஆசிய மோதலை அரசு கையாளும் விதத்தை கடுமையாக விமர்சித்து இருந்தார்.
இந்நிலையில், இன்று (மார்ச் 25) மாலை அனைத்து கட்சி கூட்டத்துக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. இதில் மேற்கு ஆசிய போரால் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது குறித்து விரிவாக விவாதிக்கப்படும் எனத் தெரிகிறது.