நிவாரணப் பொருட்களுடன் இலங்கை செல்லும் இந்திய கடற்படைக் கப்பல்.

 
தமிழகம்

புயலால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கைக்கு 950 டன் நிவாரணப் பொருட்கள்: முதல்வர் ஸ்டாலின் அனுப்பி வைத்தார்

செய்திப்பிரிவு

சென்னை: டிட்வா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள இலங்கை மக்களுக்கு தமிழகத்தில் இருந்து 950 டன் நிவாரணப் பொருட்களை முதல்வர் ஸ்டாலின் அனுப்பி வைத்தார்.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: இலங்கை மக்கள், டிட்வா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்டு, நெருக்கடியில் சிக்கித் தவிக்கின்றனர். தமிழக மக்களின் சார்பில் அவர்களுக்கு உதவும் வகையில் தமிழகத்தில் இருந்து 950 டன் நிவாரணப் பொருட்களை அந்நாட்டுக்கு இந்திய கடற்படைக்குச் சொந்தமான கப்பல்கள் மூலம் முதல்வர் ஸ்டாலின் கொடியசைத்து அனுப்பி வைத்தார்.

சென்னை துறைமுகத்தில் இருந்து 300 டன் சர்க்கரை, 300 டன் பருப்பு, 25 டன் பால் பவுடர், 25 டன் கொண்ட 5 ஆயிரம் வேட்டிகள், 5 ஆயிரம் சேலைகள், 10 ஆயிரம் துண்டுகள், 10 ஆயிரம் போர்வைகள், ஆயிரம் தார்பாலீன்கள் என 650 டன் நிவாரணப் பொருட்களும், தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து 150 டன் சர்க்கரை, 150 டன் பருப்பு என 300 டன் நிவாரணப் பொருட்களும் இலங்கைக்கு அனுப்பப்பட்டுள்ளன.

இந்த நிவாரணப் பொருட்களின் மாதிரித் தொகுப்பை இலங்கை துணைத் தூதர் கணேசநாதன் கீதீஸ்வரனிடம் முதல்வர் வழங்கினார். இப்பணிகளை அயலகத் தமிழர் நலன், மறுவாழ்வுத் துறை, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையம், கைத்தறி துறை, வேளாண்மை, உழவர் நலத் துறை ஆகியவை ஒருங்கிணைத்தன. இந்த நிகழ்வில் அமைச்சர்கள் சேகர்பாபு, நாசர், தலைமைச் செயலர் முருகானந்தம் பங்கேற்றனர்.

SCROLL FOR NEXT