நாகர்கோவிலில் நேற்று நடைபெற்ற அரசு விழாவில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார் முதல்வர் மு.க.ஸ்டாலின். உடன், அமைச்சர்கள் அனிதா ராதாகிருஷ்ணன், கீதா ஜீவன், மனோ தங்கராஜ் உள்ளிட்டோர். | படங்கள்: மு.லெட்சுமி அருண் |
நாகர்கோவில்: டெல்லியில் இருந்து தமிழகத்தை ஆளும் நிலை ஒருபோதும் ஏற்படக் கூடாது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
நாகர்கோவில் கன்கார்டியா பள்ளி மைதானத்தில் நேற்று நடைபெற்ற அரசு விழாவில் ரூ.1,785.37 கோடி மதிப்பில் 1,217 முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்துவைத்தும், 1,237 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், 3,12,082 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கியும் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:
நான் 50 ஆண்டுகள் தொடர் உழைப்பால் பேரியக்கத்தின் தலைவர் என்ற பொறுப்பை அடைந்திருக்கிறேன். வாக்களித்த மக்களுக்கு மட்டுமின்றி,
வாக்களிக்காத மக்களுக்கும் சேர்த்துதான் உழைக்கிறேன். ஆனால், தேர்தல் நேரத்தில் மட்டும் சிலர் மக்களை வட்டமடிப்பார்கள். தேர்தல் சீசனில் பிரதமர் மோடி அடிக்கடி தமிழகத்துக்கு வருவார்.
ஏற்கெனவே வரத் தொடங்கிவிட்டார். இதனால் அவரது கூட்டணிக் கட்சியினரே பயப்படுகிறார்கள். எத்தனை முறை பிரதமர் இங்கு வருகிறாரோ, அந்த அளவுக்கு பெரிய வித்தியாசத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி தோல்வி அடையும். ஏனெனில், தமிழகத்துக்கு பிரதமர் ஒன்றுமே செய்யவில்லை என்பது மக்கள் ஞாபகத்துக்கு வரும்.
மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், குஜராத் மாநில மெட்ரோ திட்டத்துக்கு ஒப்புதல் வழங்கியிருக்கிறார்கள். ஆனால், தமிழகத்துக்கு ஏதுமில்லை. வரும் சட்டப்பேரவைத் தேர்தல் போட்டி தமிழகத்துக்கும், தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கும்தான். செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் இருந்துதான் தமிழகம் ஆளப்பட வேண்டும்.
டெல்லியில் இருந்து ஆளும் நிலை வரக்கூடாது. இதை தீர்மானிப்பதற்கான தேர்தல் இது. தமிழகத்தை அனைத்து வகையிலும் தாழ்த்தி, வீழ்த்த வேண்டும் என்று பாஜக கருதுகிறது. ஏனெனில், வளர்ச்சி இருக்கும் மாநிலங்களில் பாஜக இருக்காது. பாஜக இருந்தால் அங்கே வளர்ச்சி இருக்காது.
விழாவில் பங்கேற்ற பொதுமக்கள் மற்றும் பயனாளிகள்.
கிறிஸ்துமஸ் பண்டிகையின்போது நாடு முழுவதும் கிறிஸ்தவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. மகாராஷ்டிராவில் பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டுள்ளது. மணிப்பூர் இன்னும் பற்றி எரிகிறது. அசாமில் பாஜக முதல்வர், முஸ்லிம்கள் மீது வெளிப்படையாக வெறுப்பை உமிழ்கிறார்.
இப்படி ஒரு நிலையை தமிழகத்திலும் ஏற்படுத்தவே தவிக்கிறார்கள். ஆனால், திராவிட மாடல் அரசில், மதநல்லிணக்கமும், ஒற்றுமையும் பேணப்படுகிறது.
வரலாற்றிலேயே இல்லாத எண்ணிக்கையாக 4,000 கோயில்களுக்கு குடமுழுக்கு செய்திருக்கிறோம். பாலபிரஜாபதி அடிகளார் உள்ளிட்ட உண்மையான ஆன்மிகப் பெரியோர்கள் நம்மைப் பாராட்டுகிறார்கள். இது பாஜகவின் கண்களை உறுத்திக்கொண்டே இருக்கிறது.
தமிழகத்துக்கு வரும் பிரதமர் இந்தக் கேள்விகளுக்கு பதில் சொல்வாரா? ஒருவர் நாட்டு மக்கள் எல்லோருக்கும் ரூ.15 லட்சம் தருவேன் என்று கூறியதுபோல, பழனிசாமியும் தற்போது வாய்க்கு வந்ததெல்லாம் கூறிக் கொண்டிருக்கிறார்.
தேர்தலைக் காரணம் காட்டி, மகளிர் உரிமைத்தொகையை 3 மாதத்துக்கு நிறுத்திவைத்து, மக்களுக்கு திமுக அரசு மீது அதிருப்தியை ஏற்படுத்தலாம் என்று சூழ்ச்சி செய்தார்கள்.
இதை தெரிந்துகொண்டு ரூ.5 ஆயிரத்தை முன்கூட்டியே வழங்கினோம். இந்த நடவடிக்கையால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். எதிர்க்கட்சிகள் நிலைகுலைந்து போயிருக்கிறார்கள். பாஜக என்ற டப்பா இன்ஜினை நம்பி அதிமுக இருக்கிறது. அதிமுக என்ற மூழ்கும் கப்பலை நம்பி பாஜக இருக்கிறது.
பூஜ்ஜியமும், பூஜ்ஜியமும் சேர்ந்தால், பூஜ்ஜியம்தான். ராஜ்ஜியம் கிடைக்காது. திராவிட மாடல் ‘சூப்பர் பாஸ்ட்’ இன்ஜின் 11.19 சதவீத வளர்ச்சியோடு அதிவேகமாக முன்னோக்கிச் செல்கிறது.
மீண்டும் தமிழகத்தில் திராவிட மாடல் 2.0 ஆட்சிதான் அமையும். நாட்டுக்கே வழிகாட்டும் மக்கள் நலத் திட்டங்கள் தொடர, ஒன்றினைந்து வெல்வோம். இவ்வாறு முதல்வர் பேசினார்.
நிகழ்ச்சியில், அமைச்சர்கள் மனோ தங்கராஜ், கீதா ஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன், டிஆர்பி.ராஜா, விஜய் வசந்த் எம்.பி. எம்எல்ஏக்கள் பிரின்ஸ், ராஜேஷ்குமார், தாரகை கத்பர்ட், மேயர் மகேஷ், குமரி ஆட்சியர் அழகுமீனா, உணவு ஆணைய தலைவர் சுரேஷ்ராஜன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.