சென்னையில் மெட்ரோ ரயிலில் பொதுமக்களுடன் முதல்வர் ஸ்டாலின் பயணம் செய்தார்..

 
தமிழகம்

மெட்ரோ ரயிலில் பயணித்த முதல்வர் ஸ்டாலின்

பொதுமக்களுடன் கலந்துரையாடி வாக்கு சேகரிப்பு

செய்திப்பிரிவு

திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயிலில் பயணம் செய்து பயணிகளிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரச்சாரம் செய்து வருகிறார். பிரச்சாரத்துக்கு செல்லும் மாவட்டங்களில் காலை நேரங்களில் நடைப்பயிற்சியின் போது பொதுமக்களுடன் கலந்துரையாடி வாக்கு சேகரித்து வருகிறார். அந்தவகையில் முதல்வர் மு.க.ஸ்டாலின், நேற்று சென்னை மெட்ரோ ரயிலில் பயணம் செய்து பிரச்சாரம் மேற்கொண்டார்.

          

அதன்படி, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து, ஏஜி டிஎம்எஸ் மெட்ரோ நிலையம் வரை பயணித்து மெட்ரோ ரயில் பயணிகளிடம் வாக்கு சேகரித்தார். பொதுவாக காலை நேரங்களில் மெட்ரோ ரயிலில் வேலைக்குச் செல்லும் பொதுமக்கள் அதிகம் பேர் பயணிப்பர். அதனால் முதல்வர் சென்றபோது அதிகப்படியான பயணிகள் ரயிலில் உடன் பயணித்தனர். அவர்களிடம், அரசின் நலத்திட்டங்கள், மெட்ரோ ரயில் சேவை உட்பட பல்வேறு விஷயங்கள் குறித்து முதல்வர் கலந்துரையாடினார்.

ஒரு பயணியின் குழந்தையைத் தூக்கி கொஞ்சி விளையாடியதுடன், தேர்தலில் திமுக கூட்டணிக்கு வாக்கு அளிக்குமாறும் கேட்டுக்கொண்டார். மேலும், மெட்ரோவில் பயணித்த முதல்வர் ஸ்டாலினுடன் பொதுமக்கள் மிகுந்த ஆர்வத்துடன் செல்ஃபி எடுத்துக் கொண்டனர்.

இதுகுறித்து முதல்வர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், மக்களின் அன்பில் நனைந்தபடியும், மெட்ரோ ரயில் திட்டம் உருவாகப் பாடுபட்ட நாட்களின் நினைவுகளைச் சுமந்தபடியும் ஒரு பயணம். துணை முதல்வராக இருந்தபோது, ஜப்பான் நாட்டுக்குச் சென்று நிதியுதவியைப் பெற்றுவந்து, நான் முன்னின்று செய்த திட்டம். விம்கோ நகர் முதல் விமான நிலையம் வரையும், சென்ட்ரல் முதல் பரங்கிமலை வரையும் இயங்கிவரும் முதற்கட்ட திட்டத்தில் இதுவரை கோடிக்கணக்கான பயணங்களை மக்கள் செய்துள்ளனர்.

அதிவேகமாக நடைபெற்றுவரும் மாதவரம் - சிறுசேரி, கலங்கரை விளக்கம் - பூந்தமல்லி, மாதவரம் - சோழிங்கநல்லூர் இடையேயான 2-ம் கட்ட மெட்ரோ திட்டப் பணிகளையும் விரைவில் மக்கள் பயன்பாட்டுக்கு ஒப்படைப்போம். விமான நிலையம் - கிளாம்பாக்கம், கோயம்பேடு - பட்டாபிராம், பூந்தமல்லி - சுங்குவார்சத்திரம், தாம்பரம் - கிண்டி, கலங்கரை விளக்கம் - உயர்நீதிமன்றம், சிறுசேரி - கலைஞர் பன்னாட்டு அரங்கம் என மெட்ரோ விரிவாக்கப் பணிகள் எல்லாம் நிறைவுறும்போது, இந்தியாவிலேயே மெட்ரோ வழியாக அதிக தூரத்தை இணைக்கும் நகரங்களில் ஒன்றாகச் சென்னை விளங்கும். சென்னையை வளர்த்தெடுக்கும் நமது கனவு வெல்லட்டும்’ என்று தெரிவித்துள்ளார்

SCROLL FOR NEXT