புதிய துணை மின் நிலையங்களை முதல்வர் ஸ்டாலின் காணொலி மூலம் திறந்துவைத்தார். உடன் அமைச்சர் சிவசங்கர், தலைமைச் செயலாளர் நா.முருகானந்தம், துறைச் செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன், எரிசக்தித் துறை தலைமை செயலர் மங்கத் ராம் சர்மா.
சென்னை: தமிழகத்தில் ரூ.4,813.92 கோடியில் கட்டப்பட்ட 13 சாலைகள் மற்றும் ஒரு பாலம் மற்றும் ரூ1,970.57 கோடியில் அமைக்கப்பட்ட 38 துணை மின் நிலையங்கள் உள்ளிட்டவற்றை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
இதுகுறித்து அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: தலைமைச் செயலகத்தில், நெடுஞ்சாலைத் துறை சார்பில் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, தஞ்சாவூர், மயிலாடுதுறை, கடலூர், கள்ளக்குறிச்சி, தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி திருவாரூர், நாகப்பட்டினம், சேலம், நாமக்கல் மற்றும் திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் ரூ.4,712.55 கோடியில் 13 சாலைகள் மற்றும் திருச்சி- கரூர் மாவட்டங்களில் ரூ.101.37 கோடியில் கட்டப்பட்ட பாலத்தையும் மக்கள் பயன்பாட்டுக்காக காணொலியில் முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். மேலும், மயிலாடுதுறை மாவட்டத்தில் ரூ.113 கோடியில் அமைக்கப்பட உள்ள புறவழிச்சாலைப் பணிக்கு அடிக்கல் நாட்டினார்.
உள்துறை சார்பில், மதுரையில் ரூ.1.45 கோடி செலவில் அறிவுரைக் குழும அலுவலகக் கட்டிடத்தை திறந்து வைத்த முதல்வர், ரூ.137.04 கோடியில் குற்றம் மற்றும் குற்றவாளிகள் கண்காணிப்பு வலைபின்னல் அமைப்பு 2.O மற்றும் டிஜிட்டல் கைரேகை சேகரிப்பு அமைப்பையும் தொடங்கி வைத்தார்.
இதுதவிர, வாகனங்களில் வாகன இருப்பிட கண்காணிப்புக் கருவி அமைக்கும் திட்டத்துக்காக ரூ.7.24 கோடியில், ஒருங்கிணைந்த கண்காணிப்பு கட்டுப்பாட்டு மையம், 7 வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் கணினிமயமாக்கப்பட்ட தானியங்கி ஓட்டுநர் தேர்வுத்தளங்கள் ஆகியவற்றையும் தொடங்கி வைத்தார்.
அத்துடன் 53 மோட்டார் வாகன ஆய்வாளர் பணியிடங்களுக்கான நியமன ஆணைகளையும் வழங்கினார்.மேலும் தமிழ்நாடு மின் தொடரமைப்புக் கழகம் மற்றும் தமிழ்நாடு மின்பகிர்மானக் கழகத்தின்சார்பில் ரூ.1,970.57 கோடியில்பல்வேறு மாவட்டங்களில் நிறுவப்பட்டுள்ள 38 புதிய துணை மின் நிலையங்களை திறந்து வைத்தார்.
மேலும், தூத்துக்குடி அணியாபரநல்லூரில் ரூ.46.65 கோடியில், புதிய பால்பண்ணை, திட்டக்குடியில் ரூ.33 கோடியில் கால்நடை தீவன உற்பத்தி ஆலை மற்றும் நீலகிரியில் பாலாடைக் கட்டி தயாரிக்கும் தொழிற்சாலை ஆகியவற்றை முதல்வர் திறந்தார்.
இதுதவிர, 7 பால் பண்ணைகளில் ரூ.29.93 கோடியில் தானியங்கி பால் பாக்கெட்கள் அடுக்கும் இயந்திரங்கள் நிறுவும் பணிகள், மதுரை- சாத்தமங்கலம், திருச்சி- கொட்டப்பட்டுபால் பதப்படுத்தும் ஆலைகளை ரூ.67.62 கோடியில் தானியங்கி ஆலைகளாக மேம்படுத்தும் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.
சேலம், விருதுநகர் அரசு அருங்காட்சியக கட்டிடங்களை திறந்தார். மேலும், ரூ.248.66 கோடியில் கட்டப்படவுள்ள திருவண்ணாமலை, மாமல்லபுரத்தில் தமிழர் பண்பாட்டு அருங்காட்சியக புதிய கட்டிடங்கள், சென்னையில் சிந்துவெளிப் பண்பாட்டு அரங்கம் ஆகியவற்றுக்கும் அடிக்கல் நாட்டினார். இவைதவிர, பட்டுவளர்ச்சித் துறையின் சார்பில் தேர்வான 11 விருதாளர்களுக்கு ரூ.8 லட்சம் பரிசுத்தொகை வழங்கினார்.