சென்னை: எல்லாருக்கும் எல்லாம் என்ற சமத்துவ நிலையை அடைய திராவிட மாடல் அரசு செயல்படுவதாக சமத்துவ பொங்கல் விழாவில் கலந்துகொண்ட முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னையில் உள்ள தலைமை செயலகத்தில் அனைத்துத் துறை பணியாளர்கள் சார்பில் சமத்துவ பொங்கல் இன்று கொண்டாடப்பட்டது. இதில் நமது பாரம்பரிய உடையான பட்டு வேட்டி, சட்டையுடன் கலந்து கொண்ட முதல்வர் ஸ்டாலின், அரசு பணியாளர்களுக்கு பொங்கலை வழங்கி தனது மகிழ்ச்சி மற்றும் வாழ்த்துக்களை பகிர்ந்துகொண்டார்.
தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் ஸ்டாலின், ”எல்லாருக்கும் எல்லாம் என்ற இலக்கை நோக்கி சமத்துவ நிலையை அனைவரும் அடைந்திட வேண்டும் என்ற நோக்கத்தோடு, நமது திராவிட மாடல் அரசு பணியாற்றி வருகிறது. அதற்காக கடினமாக அரசு தொடர்ந்து உழைத்துக் கொண்டு இருக்கிறது.
இந்த திராவிட மாடல் அரசுக்காக அரசு பணியாளர்கள் நேரம் காலமின்றி கடினமாக உழைத்துக் கொண்டு இருக்கிறார்கள். அப்படிப்பட்ட பணியாளர்களுடன் இன்றை தினம் சமத்துவ பொங்கல் கொண்டாடுவதில் மகிழ்ச்சி கொள்கிறேன்” என்று தெரிவித்தார்.