சென்னை திருவிக நகர் தொகுதிக்கு உட்பட்ட புளியந்தோப்பு பகுதியில் முதல்வர் ஸ்டாலினுடன் பிரச்சாரத்தில் ஈடுபட்ட டெல்லி முன்னாள் முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால்.
சென்னை: சென்னையில் திமுக வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் ஸ்டாலின் நேற்று தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார். டெல்லி முன்னாள் முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவாலும் முதல்வருடன் சென்று வாக்கு சேகரித்தார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 23-ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தல் பிரச்சாரம் இன்று மாலையுடன் முடிவடைகிறது. இதனால், அனைத்துக் கட்சியினரும் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் தமிழகம் முழுவதும் 6 கட்டங்களாக பிரச்சாரத்தில் ஈடுபட்டார். நேற்று முன்தினம் இரவு சென்னை திரும்பிய முதல்வர், சென்னையில் மயிலாப்பூர், ஆயிரம்விளக்கு, தியாகராய நகர் தொகுதிகளில் திமுக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்தார்.
நேற்று காலை சென்னை அண்ணா நகர், மதுரவாயல், விரும்பாக்கம் ஆகிய தொகுதிகளில் திமுக வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார். பூங்காக்கள், மார்க்கெட் பகுதிகளில் நடந்து சென்று, பொதுமக்களிடம் ஆதரவு கோரினார்.
நேற்று மாலை திருவிக நகர் தொகுதி திமுக வேட்பாளரை ஆதரித்து புளியந்தோப்பு காவல் நிலையம் அருகே பிரச்சாரத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கினார். அவருடன் ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முன்னாள் முதல்வருமான அர்விந்த் கேஜ்ரிவாலும் இணைந்து பிரச்சாரம் மேற்கொண்டார்.
பிரச்சாரத்தின்போது முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: டெல்லியில் 2 முறை முதல்வராக இருந்த அர்விந்த் கேஜ்ரிவால் நமது அழைப்பை ஏற்று பிரச்சாரத்துக்காக தமிழகம் வந்துள்ளார். அவர் பாஜகவுக்கு ஜென்ம விரோதியாக இருப்பவர். எந்த மிரட்டலுக்கும், அச்சுறுத்தலுக்கும் அஞ்சாதவர். அவர் மீது அபாண்டமான வகையில் ஊழல் குற்றச்சாட்டை சுமத்தினர்.
அவரை கைது செய்து சிறையில் அடைத்து, மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அவரை வலியுறுத்தினர். உயிரே போனாலும் மன்னிப்பு கேட்க மாட்டேன் என்று போராடியவர் கேஜ்ரிவால். உச்ச நீதிமன்றம் வரை சென்று போராடி, தன் மீது போடப்பட்ட வழக்குகள் அனைத்தையும் பொய் என்று நிரூபித்து விடுதலையாகி வெளியே வந்துள்ளார்.
அவர் உங்களைத் தேடி வந்து திமுகவுக்கு ஆதரவு கேட்கிறார். அந்த அளவுக்கு அவருக்கும், நமக்கும் தொடர்பு இருக்கிறது. அதுமட்டுமின்றி, தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் உள்ள மாதிரிப் பள்ளிகளை திறக்க உந்துதலாக இருந்தவர் கேஜ்ரிவால். மீண்டும் தமிழகத்தில் நம் ஆட்சி அமைந்ததும், 1,000 ஸ்மார்ட் பள்ளிகளைத் திறப்போம். இவ்வாறு அவர் பேசினார்.
பின்னர், எழும்பூர், துறைமுகம், ராயபுரம் பெரம்பூர், ஆர்.கே.நகர் தொகுதிகளில் முதல்வர் பிரச்சாரம் மேற்கொண்டார். அவருக்கு திமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். பெரம்பூரில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: நான் யாரையும் தாக்கியோ, விமர்சித்தோ, தரக்குறைவாகவோ பேச விரும்பவில்லை. அந்த பழக்கமும் எனக்கு கிடையாது. கடந்த முறை திமுக அளித்த தேர்தல் வாக்குறுதியில் 90 சதவீத பணிகளை முடித்து விட்டோம். மீதம் 10 சதவீத பணிகள் உள்ளன. மத்திய அரசு போதிய நிதியை விடுவிக்காததுதான் அதற்கு காரணம். மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி ஆட்சிக்கு வந்து, நாடாளுமன்றத்தில் தோல்வியை சந்தித்த முதல் மசோதா, தொகுதி மறுவரையறை மசோதாதான். மத்திய அரசுக்கு கவுன்ட்-டவுன் தொடங்கிவிட்டது.
விஜய் குறித்து விமர்சனம்: சென்னை மாநகராட்சியில் மக்களால் தேர்வு செய்யப்பட்ட முதல் மேயர் நான்தான். நான் மேயராக இருந்தபோது, பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி உள்ளேன். உங்களுடன் இருந்து, உங்களுக்காக பணியாற்றும், உங்கள் வீட்டுப் பிள்ளையாக இருந்து பணியாற்றும் ஒருவர் வேண்டுமா? அல்லது எங்கிருந்தோ புதிதாக அரசியலுக்கு வந்து, நாடகம் நடித்துக் கொண்டிருப்பவர் வேண்டுமா? சிந்தித்துப் பாருங்கள். கூப்பிட்ட குரலுக்கு ஓடிவரக்கூடிய எம்எல்ஏவைத்தான் நீங்கள் தேர்வு செய்ய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
வில்லிவாக்கம் மற்றும் தனது தொகுதியான கொளத்தூரில் நிறைவு நாளான இன்று முதல்வர் பிரச்சாரம் மேற்கொள்கிறார். கொளத்தூர் தொகுதிக்கு உட்பட்ட பெரவள்ளூர் சதுக்கத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் தனது பிரச்சாரத்தை ஸ்டாலின் நிறைவு செய்கிறார். கடந்த 3 நாட்களாக முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னையில் தொடர்ந்து தீவிரமாக பிரச்சாரம் மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.
அதிமுக மிகப் பெரிய துரோகம்: அர்விந்த் கேஜ்ரிவால் குற்றச்சாட்டு
சென்னையில் நேற்று நடந்த பிரச்சாரத்தின்போது, டெல்லி முன்னாள் முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் பேசியதாவது: தமிழகத்தில் மகளிருக்கு மாதம் ரூ.1,000 உரிமைத் தொகை, காலை உணவு என பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. வேறு எந்த மாநிலத்திலும் இத்தகைய திட்டங்கள் கிடையாது. இதனால்தான் ஸ்டாலினுக்காக பிரச்சாரம் செய்ய இங்கு வந்துள்ளேன்.
என்டிஏ என்பது புதிய டெல்லி கூட்டணியை (New Delhi Alliance) குறிக்கிறது. அது பாஜகவும், அதிமுகவும் சேர்ந்த கூட்டணி அல்ல. அதிமுகவை பாஜக முழுமையாக கைப்பற்றிவிட்டது. பாஜகவை தமிழத்துக்குள் கொண்டு வந்ததன் மூலம், உங்களுக்கு அதிமுக மிகப்பெரிய துரோகத்தை இழைத்துள்ளது. எனவே, அவர்களுக்கு வாக்களிக்கும் முன்பு எச்சரிக்கையாக இருங்கள். ஓராண்டுக்கு முன்பு டெல்லி மக்கள் தவறுதலாக பாஜகவுக்கு வாக்களித்தார்கள். இப்போது நாங்கள் டெல்லியில் செய்த அனைத்து நல்ல திட்டங்களையும் பாஜக நிறுத்திவிட்டது. எனவே, நீங்கள் எச்சரிக்கையாக வாக்களிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.