சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஸ்டாலினை அரசு ஊழியர், ஆசிரியர்கள் சங்கங்களின் நிர்வாகிகள் சந்தித்து உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தை அறிவித்ததற்காக இனிப்பு வழங்கி நன்றி தெரிவித்தனர். உடன் அமைச்சர்கள், அரசு உயரதிகாரிகள்.

 
தமிழகம்

தமிழக அரசு ஊழியர்களின் 20 ஆண்டு கோரிக்கையை ஏற்று உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் அறிவிப்பு

இறுதி சம்பளத்தில் 50 சதவீதம் வழங்கப்படும்

செய்திப்பிரிவு

சென்னை: தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் 20 ஆண்டு கோரிக்கையை நிறைவேற்றும் வகையில், தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியம் என்ற புதிய திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டுள்ளார். அதன்படி, ரூ.25 லட்சம் வரை பணிக்கொடை, இறுதி சம்பளத்தில் 50 சதவீதம் வரை ஓய்வூதியம் வழங் கப்படும்.

இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: கடந்த 2021-ம் ஆண்டு இந்த அரசு பொறுப்பேற்றது முதல், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் நலன்களைக் காக்க தேவையான பல்வேறு நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. தமிழகம் முன்னெப்போதும் கண்டிராத வளர்ச்சியை எட்டியிருப்பினும், மத்திய அரசின் வரிப்பகிர்வு தொடர்ந்து குறைப்பது, திட்டங்களுக்கான மத்திய அரசின் நிதி குறைக்கப்படுவது அல்லது முறையாக விடுவிக்கப்படாமல் இருப்பது, ஜிஎஸ்டி மாற்றங்களால் குறைந்து வரும் மாநில வரி வருவாய், உயர்ந்து வரும் நலத்திட்டச் செலவுகள் போன்றவற்றால் அரசுக்கு நிதிச்சுமை உள்ளது.

அவற்றை எல்லாம் தாண்டி, தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் நலன்களை முதல்வர் ஸ்டாலின் தொடர்ந்து காத்து வருகிறார். அந்த வகையில், கரோனா காலத்தில் நிறுத்தப்பட்ட அகவிலைப்படி உயர்வு, ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு நடைமுறை, அரசு ஊழியர்கள் விபத்தில் உயிரிழந்தால் ரூ.1 கோடி, இயற்கை மரணத்துக்கு ரூ.10 லட்சம், கல்வி முன்பணம், திருமண முன்பணம், வீடு கட்டுவதற்கான முன்பணம் உயர்வு, ஓய்வு பெறும் நாளில் சஸ்பெண்ட் சூழல் நீக்கம், பணிக்கொடை ரூ.25 லட்சமாக உயர்வு, ஓய்வூதியர்கள் மருத்துவ காப்பீடு, பொங்கல் பரிசுத் தொகை உயர்வு, மகப்பேறு உயர்வு போன்றவை அமல்படுத் தப்பட்டுள்ளன.

எனினும், அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் நாளன்று எவ்வளவு ஓய்வூதியம் பெறுவோம் என்று அறியாமல் கடந்த 20 ஆண்டுகளாக இருப்பதாகவும், பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்றும் சங்கங்கள் கோரிக்கைகளை முன்வைத்து வருகின்றன. அதை உணர்ந்து இந்த விவகாரத்தில் தகுந்த பரிந்துரைகளை வழங்க ககன்தீப் சிங்பேடி தலைமையில் குழு ஒன்றை முதல்வர் ஸ்டாலின் அமைத்தார். அந்தக் குழுவின் அறிக்கையையும் அரசு பெற்றுள்ளது.

அந்த அறிக்கையை முழுமையாக ஆராய்ந்து, தமிழக அரசு தற்போது சந்தித்து வரும் நிதி சுமை சூழலில், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கோரிக்கைகளை நிறைவு செய்வதற்கான வழிமுறைகள் குறித்து நிதியமைச்சர், தலைமைச் செயலர், நிதித் துறை செயலரிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். அப்போது பொதுப்பணி, நிதி, பள்ளிக்கல்வி அமைச்சர்களிடம் சங்கங்கள் வைத்த முக்கிய கோரிக்கைகள் பற்றி விவாதிக்கப்பட்டது.

இதையடுத்து, “தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம்’’ (Tamil Nadu Assured Pension Scheme – TAPS) என்ற புதிய திட்டம் செயல்படுத்தப்படும் என்று முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இத்திட்டத்தின் கீழ்...

  • மாநில அரசு ஊழியர்கள் பெற்ற கடைசி மாத ஊதியத்தில் 50 சதவீதம் உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியமாக வழங்கப்படும். இந்த ஓய்வூதியம் வழங்க ஊழியர்களின் 10 சதவீத பங்களிப்புடன், ஓய்வூதிய நிதியத்துக்கு தேவைப்படும் கூடுதல் நிதி முழுவதையும் அரசே ஏற்கும்.

  • ஐம்பது சதவீதம் உறுதி யளிக்கப்பட்ட ஓய்வூதியம் பெறுவோருக்கு 6 மாதத்துக்கு ஒரு முறை அரசு அலுவலர்களுக்கு இணையான அகவிலைப்படி உயர்வு அளிக்கப்படும்.

  • ஓய்வூதியர் இறந்தால், அவர் பரிந்துரைத்த குடும்ப உறுப்பினர்களுக்கு ஓய்வூதியத்தில் 60 சதவீதம் குடும்ப ஓய்வூதியமாக வழங்கப்படும்.

  • அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் போதும், பணிக் காலத்தில் இறக்க நேரிட்டாலும் அவரவர் பணிக் காலத்துக்கேற்ப ரூ.25 லட்சத்துக்கு மிகாமல் பணிக்கொடை வழங்கப்படும்.

  • புதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டம் செயல்படுத்தப்பட்ட பின், ஓய்வூதியம் பெறுவதற்கான தகுதி பணிக்காலத்தை நிறைவு செய்யாமல் ஓய்வு பெறுவோருக்கு குறைந்தபட்ச ஓய்வூதியம் வழங்கப்படும்.

  • பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தின் கீழ் பணியில் சேர்ந்து, புதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியம் செயல்படுத்தப்படுவதற்கு முன் இடைப்பட்ட காலத்தில் ஓய்வூதியம் இன்றி பணி ஓய்வு பெற்றவர்களுக்கு சிறப்பு கருணை ஓய்வூதியம் வழங்கப்படும்.

இந்த திட்டத்தை அறிமுகப் படுத்துவதால் ஓய்வூதிய நிதியத்துக்கு கூடுதலாக ரூ.13 ஆயிரம் கோடியை அரசு அளிக்க வேண்டும். இதுமட்டுமின்றி, ஆண்டுதோறும் சுமார் ரூ.11 ஆயிரம் கோடி அரசு பங்களிப்பாக வழங்க வேண்டும். இத்தொகை ஊழியர்களின் ஊதியத்துக்கேற்ப ஆண்டு தோறும் மேலும் உயரும். தற்போது தமிழக அரசு சந்தித்து வரும் கடுமையான நிதிச் சூழலிலும், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் நலன்களைக் காக்கும் பொருட்டு, இந்த செலவினங்களை தமிழக அரசே முழுமையாக ஏற்கும்.

எனவே இந்த திட்டத்தை அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஒருமனதாக வரவேற்று, அதனைச் செயல்படுத்துவதற்கான முழு ஒத்துழைப்பையும் நல்கும்படி முதல்வர் ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார். இவ்வாறு அரசு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து முதல்வர் வெளி யிட்ட சமூக வலைதளப்பதிவில், ‘‘அரசு ஊழியர்களுக்கு மிகப் பெரும் புத்தாண்டு, பொங்கல் பரிசாக தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் அறிவித்துள்ளோம். திராவிட மாடல் நல்லாட்சிதான் தொடரும். தலைநிமிர்ந்து வரும் தமிழகத்தின் நிதிநிலை சீரடையச் சீரடைய அனைத்துத் தரப்பினரின் கோரிக்கைகளும் நீங்கள் கேட்காமலே நிறைவேறும்’’ என தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT