சென்னை: சுதந்திர தினத்தையொட்டி, காவல் துறையில் 15 பேருக்கு தமிழக முதல்வரின் காவல் சிறப்பு பதக்கங்கள் அறிவிக்கப் பட்டுள்ளன.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: புலன் விசாரணைப் பணியில் மிகச் சிறப்பாக செயல்பட்டதையும், அர்ப்பணிப்புடன் பணியாற்றியதையும் பாராட்டி, முதல்வரின் காவல் புலன் விசாரணைக்கான சிறப்பு பணி பதக்கங்கள் வழங்கப்படுகின்றன.
இந்த பதக்கங்களைப் பெற, டிஜிபி அலுவலக நிர்வாகப் பிரிவு காவல் துறை உதவி தலைவர் கோமதி, திருநெல்வேலி மாநகர மேற்குதுணை ஆணையர் ச.விஜயகுமார், டிஎஸ்பிக்கள் தமிழரசி (திருவள்ளூர்), ஜெய (கும்மிடிப்பூண்டி), தனுசியா (திருச்சி மாநகர சிபிசிஐடி), இன்ஸ்பெக்டர்கள் அழகுராஜ் (கோவை மாநகர சைபர் க்ரைம்), லதா (கோவை மாநகர தனி சிறுவர் காவல் உதவி பிரிவு), சித்ரா (பெரம்பலூர் மாவட்டம் கைகளத்தூர்), வினதா (விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர்), மகாலட்சுமி (சிவகங்கை மாவட்ட குற்றப் பதிவேட்டுக் கூடம்) ஆகிய 10 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
இதேபோல, மக்கள் சேவையில் தன்னலம் கருதாமல் சிறப்பாகவும், சீரிய முறையிலும் பணியாற்றிய திண்டுக்கல் சரக காவல் துறை துணைத் தலைவர் டாக்டர் வி.சசிமோகன், சென்னை மேற்கு சரக ஊழல் தடுப்பு, கண்காணிப்பு இயக்கக எஸ்.பி. சண்முக பிரியா, சென்னை தனிப்பிரிவு குற்றப் புலனாய்வுத் துறை டிஎஸ்பி மணிமொழியன், சென்னை மாநில காவல் தலைமை கட்டுப்பாட்டு அறை இன்ஸ்பெக்டர் (தொழில்நுட்பம்) மதன்மோகன், கரூர் நகர காவல் நிலைய தலைமைக் காவலர் ரவிக்குமார் ஆகிய 5 பேர் சிறந்த பொதுச் சேவைக்கான தமிழகமுதல்வரின் காவல் பதக்கம்பெற தேர்வாகியுள்ளனர்.
தங்கப் பதக்கம், ரூ.25 ஆயிரம் பரிசு
பதக்கத்துக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள 15 பேருக்கும் தலா 8 கிராம் எடையுள்ள தங்கப் பதக்கமும், ரூ.25 ஆயிரம் ரொக்கப் பரிசும் வழங்கப்படும். இந்த விருதுகள் முதல்வர் விஜய்யால் வேறொரு விழாவில் வழங் கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.