தமிழகம்

“2030-க்குள் காசநோய் இல்லாத புதுச்சேரி” - முதல்வர் ரங்கசாமி நம்பிக்கை

செ. ஞானபிரகாஷ்

புதுச்சேரி: “வரும் 2030-ம் ஆண்டுக்குள் புதுச்சேரியை காசநோய் இல்லாத பிரதேசமாக மாற்ற முடியும்” என முதல்வர் ரங்கசாமி நம்பிக்கை தெரிவித்தார்.

மரபணு வரிசைமுறை தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, காசநோய் நோயாளிகளுக்கு மருந்து உணர்திறன் பரிசோதனை மேற்கொள்வது தொடர்பான 3 நாட்கள் தேசிய மாநாட்டை ஜிப்மரில் முதல்வர் ரங்கசாமி இன்று தொடக்கி வைத்தார்.

அப்போது பேசிய முதல்வர், “இந்தியாவில் ஆண்டுதோறும் சுமார் 28 லட்சம் பேர் காசநோயால் பாதிக்கப்படுகின்றனர். காசநோய் ஒழிப்பு மத்திய அரசின் முக்கிய நோக்கங்களில் ஒன்று.

2015 முதல் 2021-ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில். புதுச்சேரியில் காசநோய் பாதிப்பு கணிசமாகக் குறைந்துள்ளது. புதுச்சேரியில் உள்ள 148 கிராமங்களில் 36 கிராமங்கள் ஏற்கெனவே காசநோய் இல்லாத கிராமங்களாக மாறியுள்ளது. மேலும் பல கிராமங்களை வரும் ஆண்டுகளில் காசநோய் இல்லாத கிராமங்களாக மாற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

புதுச்சேரியை 2030-ம் ஆண்டுக்குள் காசநோய் இல்லாத பிரதேசமாக மாற்ற முடியும். காசநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 நிதியுதவி வழங்கப்படுகிறது.

தன்னார்வ அமைப்புகள் மூலம் ஊட்டச்சத்து உணவுகள் தரப்படுகின்றன. காசநோயை ஒழிப்பது 2047-ம் ஆண்டுக்குள் இந்தியாவை அனைத்து துறைகளிலும் வளர்ச்சியடைந்த நாடாக மாற்றும் தேசிய இலக்கிற்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கும்” என்று தெரிவித்தார்.

ஜிப்மர் இயக்குநர் டாக்டர் வீர் சிங் நேகி பேசுகையில், "காசநோய் கண்டறியப்படும் ஒவ்வொரு நோயாளிக்கும் மருந்து எதிர்ப்புப் பரிசோதனை மேற்கொள்ளப்படுவதை உறுதி செய்வதில், அனைத்து நோயாளிகளுக்குமான மருந்து உணர்திறன் பரிசோதனை (UDST) முக்கியப் பங்கு வகிக்கிறது.

மருந்து எதிர்ப்பை முன்கூட்டியே கண்டறிவதன் மூலம் உரிய சிகிச்சை முடிவுகளை மேற்கொள்ளவும், சிகிச்சை தோல்வி மற்றும் மருந்து எதிர்ப்புக் காசநோய் பரவலைக் குறைக்கவும் முடியும்.

இலக்கு நிர்ணயிக்கப்பட்ட அடுத்த தலைமுறை மரபணு வரிசைமுறை தொழில்நுட்பம் (TNGS), மருந்து எதிர்ப்புடன் தொடர்புடைய மரபணு மாற்றங்களை விரிவாகக் கண்டறிய உதவுவதன் மூலம் காசநோய் நோயறிதலை வலுப்படுத்துவதோடு, சிகிச்சை முடிவுகளை மேற்கொள்வதற்குத் தேவையான மருத்துவத் தகவல்களையும் வழங்கக்கூடியதாக இருக்கும்” என்று தெரிவித்தார். நிகழ்வில் பாலிசி ரெசிலியன்ஸ் ஃபவுண்டேஷன் நிறுவனர் நந்திஷ் பேத்தானி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

SCROLL FOR NEXT