படம்: எம்.சாம்ராஜ்

தமிழகம்

புதுச்சேரியில் போக்குவரத்து நெரிசல் ஏன்? - பேரவையில் முதல்வர் ரங்கசாமி விளக்கம்

அ.முன்னடியான்

புதுச்சேரி: புதுச்சேரி சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தன் மீது சாய் ஜெ சரவணன்குமார் (தவெக) பேசுகையில், “இந்திராகாந்தி சிலையில் இருந்து கருவடிக்குப்பம் சிவாஜி சிலை செல்வதற்கு நீண்ட நேரம் ஆகிறது. முதல்வருக்கு செல்ல சிக்னல்களில் வழி ஏற்படுத்தி தருகின்றனர். நாங்கள் செல்வதற்கு அதுபோல் இல்லை” என்றார்.

அப்போது குறுக்கிட்ட முதல்வர் ரங்கசாமி, “புதுச்சேரி தட்டாஞ்சாவடி, விவிபி நகர் பகுதியில் விபத்து நேரிடாமல் கடவுள் புண்ணியத்தில் இருக்கிறோம். அங்கு சிறிது நின்று பார்த்தால் இது புரியும். புதுச்சேரியில் எதிர்ப்பாக்காத வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. ஆனால் விரிவுபடுத்த முடியாத நிலையில் சாலைகள் இருக்கின்றன.

புதுச்சேரியில் மக்களிடம் வாங்கும் சக்தி அதிகரித்துள்ளது. அதனால் வாகனங்களை நிறுத்துவதற்கு இடம் இல்லாவிட்டாலும் இப்போது 2 சக்கர வாகனங்களும், கார்களும் ஒவ்வொரு வீட்டிலும் சாலையில் நிறுத்தப்பட்டுள்ளன.

புதுச்சேரியில் 26 கி.மீட்டருக்குள் எல்லா இடங்களுக்கும் சென்று வரலாம். எங்கு செல்ல வேண்டுமோ 5 நிமிடத்துக்கு முன்பு கிளம்பினால் போய்ச் சேரலாம். சரியான நேரத்தில் கிளம்பினால் சாலையில் வேகமாகதான் செல்ல வேண்டும்.

புதுச்சேரியில் போக்குவரத்து நெரிசலைச் சமாளிக்க வல்லுநர்களின் கருத்துகளைக் கேட்டுள்ளோம். புதுச்சேரியில் உள்ள அனைத்து சாலைகளையும் ஒரு வழிப் பாதையாக மாற்றினால் சமாளிக்க முடியும். இதை இங்குள்ள வியாபாரிகள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். வாகனங்கள் வராததால் எங்கள் வியாபாரம் பாதிக்கிறது என்று ஒரு சில வியாபாரிகள் கூறுவார்கள்.

விபத்து இல்லாத போக்குவரத்து வசதிகளைத்தான் செய்ய வேண்டும், நான் சிக்னல்களில் நின்றுதான் பயணிக்கிறேன். சென்னையில் 3 கி.மீ வரை சென்றுதான் திரும்புகின்றனர். கோயம்பத்தூரிலும் அதுபோன்ற நிலைதான் உள்ளது. ஆனால் புதுச்சேரியில் அந்த நிலை இல்லை.

புதுச்சேரியில் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வருகின்றனர். கொக்கு பார்க் சிக்னலுக்கு விவிபி நகர், கஸ்தூரி பாய் நகர் பகுதிகளில் இருந்து வருகின்றனர். அதுபோல் அந்த பகுதியில் இருந்து தட்டாஞ்சாவடி எஸ்டேட் வழியாக வருகின்றனர். இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அதனாலேயே அங்கு அடைக்கப்பட்டுள்ளது. நீண்ட தூரம் செல்வது என்பதைவிட, விபத்து இல்லாத போக்குவரத்து அமைப்பை சிறந்தது. இந்திராகாந்தி மேம்பாலப் பணிக்கு டெண்டர் விடப்பட்டு விட்டது, விரைவில் பணிகள் தொடங்கும்” என்று தெரிவித்தார்.

SCROLL FOR NEXT