புதுச்சேரி: “புதுச்சேரியில் இன்னும் ஒரு சில ஆண்டுகளில் 2 ஆயிரம் பேருக்கு நிச்சயம் பணியிடங்கள் கொடுக்கப்படும். முறைகேடு இல்லாமல் பணிகள் நிரப்பப்பட்டு வருகின்றன” என்று முதல்வர் ரங்கசாமி தெரிவித்தார்.
புதுச்சேரி கருவடிக்குப்பம் காமராஜர் மணிமண்டபத்தில் நடைபெற்ற பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்ததுறையின் கீழ் புதிதாக தேர்வு செய்யப்பட்ட 115 இளநிலை எழுத்தர் பணி நியமன ஆணை வழங்கும் விழாவில் முதல்வர் ரங்கசாமி கலந்து கொண்டார்.
அப்போது பேசிய முதல்வர், “பிடெக், எம்டெக் படித்தவர்கள் கூட நான்காம் தர அரசு பணிகள் கிடைக்காதா என்று ஏங்கும் நிலையில் எல்டிசி, யுடிசி பணிக்கு வரும்போது மிகுந்த மகிழ்ச்சியை கொடுக்கும். ஏன் என்றால் இன்றைய காலக்கட்டம் அப்படி இருக்கிறது.
நல்ல கல்வி பெருகின்ற வாய்ப்பு இருக்கிறது. அதே சமயத்தில் வேலை வாய்ப்பை உருவாக்கி தரவேண்டும் என்பதும் எங்களின் எண்ணம். பணி நிர்வாகத்துக்கு அடிப்படை தேவையான அத்தனையையும் நிர்ணயிக்கும் பணி. கோப்புகள் எல்சிடியிடம் இருந்துதான் ஆரம்பிக்கிறது.
ஆகவே கவனத்துடன் இருப்பதோடு, மக்களுக்கு செய்கிறோம் என்ற எண்ணத்தோடு பணிகளைச் செய்ய வேண்டும். நிர்வாகத்தில் விதிமுறைகள் நிறைய இருக்கும். நேரடியாக பணியில் நீங்கள் அமர்த்தப்படுவதால், அவற்றை முழுவதுமாக தெரிந்து கொண்டு கோப்புகளை எழுதி அனுப்ப வேண்டும்.
கடந்த முறையும், இம்முறையும் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு தான் உள்ளது. நாங்கள், ‘அரசு பணியிடங்களை நிரப்புவோம்’ என்று சொன்னோம். அதேபோன்று 5 ஆயிரம் படித்த இளைஞர்களுக்கு அனைத்து துறைகளிலும் பணியிடங்கள் வழங்கப்பட்டுள்ளன.
சுகாதாரத் துறையில் செவிலியர் அதிகாரி, காவல் துறை உள்ளிட்ட துறைகளில் பணியிடங்களை நிரப்பிக் கொண்டு இருக்கிறோம். இன்னும் ஒரு சில ஆண்டுகளில் 2 ஆயிரம் பேருக்கு நிச்சயம் பணியிடங்கள் கொடுக்கப்படும். முறைகேடு இல்லாமல் பணிகள் நிரப்பப்பட்டு வருகின்றன.
சிறு சந்தேகம் கூட யாருக்கும் வரக்கூடாது என்ற எண்ணத்தில் ஓரிரு நாட்களில் இந்த பணி நியமன ஆணை கொடுக்கப்படுகிறது. நன்றாக படித்து தேர்வு எழுதினால் அரசு பணி கிடைக்கும் என்ற நம்பிக்கை இப்போது வந்தருக்கிறது” என்று தெரிவித்தார்.