சென்னை: பசுமைவழிச் சாலையில் முதல்வரின் முகாம் இல்லமாக புதுப்பிக்கப்பட்ட பாமணி இல்லத்தில் முதல்வர் விஜய் நேற்று முதல் குடியேறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
முதல்வர் விஜய், நீலாங்கரையில் உள்ள தனது இல்லத்தில் இருந்து தலைமைச் செயலகத்துக்குச் சென்று வருவதால், தினமும் நீண்ட தூரம் பயணிக்க வேண்டியுள்ளது.
இந்த நிலையில், பயண நேரத்தைக் குறைக்கவும், பாதுகாப்புப் பணியில் காவல் துறைக்கு ஏற்படும் சிரமங்களைக் குறைக்கவும் டிஜிஎஸ் தினகரன் சாலையில் பொதிகை வளாகத்தில் உள்ள பாமணி இல்லம் முதல்வரின் முகாம் அலுவலகமாக சமீபத்தில் புதுப்பிக்கப்பட்டது.
இந்த அலுவலகத்தில் முதல்வருக்கென தனி அலுவலக அறை, தனிச் செயலர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் பணியாற்றுவதற்குத் தனித்தனி அறைகள் அமைக்கப்பட்டுள்ளன. அதிகாரிகள், முக்கியப் பிரமுகர்களுடன் ஆலோசனை நடத்த கூட்ட அரங்கமும் தயார் செய்யப்பட்டுள்ளது.
புதுப்பிப்பு பணிகள் முடிவடைந்ததைத் தொடர்ந்து, முதல்வர் விஜய் நேற்று முதல் அங்கு குடியேறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பாமணி இல்லத்தின் பெயர் ‘வெற்றி இல்லம்’ என மாற்றப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இதே பகுதியிலேயே அமைச்சர்கள் சிலரின் இல்லங்களும் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.