மேட்டூர் அணை வலது கரை பகுதியில் ஆய்வு மேற்கொண்ட சேலம் எஸ்பி குத்தாலிங்கம்.
மேட்டூர்: மேட்டூர் அணையின் நீர்மட்டம் 88 அடியை எட்டிய நிலையில், காவிரி டெல்டா பாசனத்துக்காக மேட்டூர் அணையை திறந்து வைக்க முதல்வர் விஜய் வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதையொட்டி அணையில் பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நேற்று ஆய்வு மேற்கொண்டார்.
மேட்டூர் அணையில் இருந்து ஆண்டுதோறும் ஜூன் 12-ம் தேதி காவிரி டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறப்பது வழக்கம். இதன்மூலம் சேலம், ஈரோடு, நாமக்கல், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் சுமார் 17 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். இந்த ஆண்டு போதிய நீர் இருப்பு இல்லாததால் ஜூன் 12-ல் தண்ணீர் திறக்கப்படவில்லை.
தற்போது காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து, நீர்மட்டம் 88 அடியை எட்டியுள்ளது. விரைவில் 90 அடியை எட்டும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அணை திறப்பு குறித்து சட்டப்பேரவையில் கேள்வி எழுந்தபோது நீர்வளத்துறை அமைச்சர் என்.ஆனந்த் விரைவில் நல்ல செய்தி அறிவிக்கப்படும் என தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், முதல்வர் விஜய் மேட்டூர் அணைக்கு வந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எனவே முன்னேற்பாடாக சேலம் மாவட்ட எஸ்பி குத்தாலிங்கம் மேட்டூர் அணையில் நேற்று ஆய்வு மேற்கொண்டார்.
அணையின் வலது கரை, மேல்மட்ட மதகில் மின் விசையை இயக்கும் பகுதி உள்ளிட்டவற்றை பார்வையிட்டு, பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ஆய்வு செய்தார். ஆய்வின்போது நீர்வளத்துறை செயற்பொறியாளர் செல்வராஜ், உதவி பொறியாளர்கள் சதீஷ், பிரசாந்த், டிஎஸ்பி சண்முகசுந்தரம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
விநாடிக்கு 10,807 கனஅடி: மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் காலை விநாடிக்கு 13,415 கனஅடியாகவும், மாலையில் 12,231 கனஅடியாகவும், நேற்று காலை 12,534 கனஅடியாகவும் நீர்வரத்து பதிவானது. மாலையில் 10,807 கனஅடியாக சரிந்தது.
அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 2,000 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. நீர் வெளியேற்றத்தைவிட, நீர்வரத்து அதிகமாக உள்ளதால் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. தற்போது அணையின் நீர்மட்டம் 88.43 அடியாகவும், நீர் இருப்பு 50.87 டிஎம்சியாகவும் உள்ளது.