தமிழகத்தில் உள்ள 30 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் ரூ.5.10 கோடியில் அமைக்கப்பட்டுள்ள நவீன மின் ஆய்வகங்களை முதல்வர் விஜய் நேற்று சென்னையில் இருந்தபடி திறந்து வைத்தார். உடன், அமைச்சர் முகமது பர்வேஸ், அருள்பிரகாசம் எம்எல்ஏ, தலைமைச் செயலாளர் சாய்குமார், துறை செயலாளர் கொ.வீரராகவ ராவ்.
சென்னை: தனியார் நிறுவனத்தின் உதவியுடன் ரூ.5.10 கோடி செலவில் 30 அரசு ஐடிஐ-க்களில் அமைக்கப்பட்டுள்ள மேம்பட்ட மின்ஆய்வகங்களை முதல்வர் விஜய் நேற்று திறந்துவைத்தார்.
தமிழகம் முழுவதும் 30 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் (ஐடிஐ) ஸ்னைடர் எலெக்ட்ரிக் இந்தியா நிறுவனத்தின் உதவியுடன் ரூ.5.10 கோடியில் மேம்பட்ட மின்ஆய்வகங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதனை கிண்டி அரசு ஐடிஐ-யில் நேற்று நடைபெற்ற விழாவில், முதல்வர் திறந்துவைத்தார்.
மேலும், மாநில அளவிலான திறன் போட்டியில் வெற்றிபெற்ற 15 மாணவர்களுக்கு தலா ரூ.25 ஆயிரத்துக்கான காசோலைகளையும் அகில இந்திய தொழிற் தேர்வுகளில் தேசிய அளவில் முதலிடம் பெற்றவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களையும் டிஎன்பிஎஸ்சி மூலம் இளநிலை பயிற்சி அலுவலர் பணிக்கு தேர்வான 673 பேருக்கு பணிநியமன ஆணைகளையும் முதல்வர் வழங்கினார்.
மேலும் ரூ.6.80 கோடி மதிப்பீட்டில் 40 அரசு ஐடிஐ-க்களில் நவீன மின்ஆய்வகங்கள் அமைப்பது தொடர்பாக முதல்வர் முன்னிலையில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை இயக்ககத்துக்கும் ஸ்னைடர் எலெக்ட்ரிக் இந்தியா நிறுவனத்துக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
முன்னதாக, முதல்வர் விஜய் மாணவர்களின் திறன் படைப்புகளைப் பார்வையிட்டு மாணவர்களுடன் கலந்துரையாடினார். விழாவில் அமைச்சர் முகமது பர்வேஸ், எம். அருள்பிரகாசம் எம்எல்ஏ, தலைமைச் செயலர் எம்.சாய்குமார், துறை செயலர் கொ.வீரராகவ ராவ், துறை இயக்குநர் சி.பழனி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.