சென்னை: வீட்டு வசதி வாரியம், நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில், ரூ.1,021.53 கோடியில் 768 அடுக்குமாடிக் குடியிருப்புகள், வணிக வளாகங்களை முதல்வர் விஜய் காணொலி வழியாகத் திறந்து வைத்தார்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் சார்பில் சென்னை அரும்பாக்கத்தில் ரூ.588.10 கோடியில் 304 அடுக்குமாடிக் குடியிருப்புகள் மற்றும் 11 தளங்கள் கொண்ட வணிக வளாகம் கட்டப்பட்டுள்ளன.
அசோக் நகரில் ரூ.307.89 கோடியில் வணிக வளாகம் மற்றும் உயர்வருவாய்ப் பிரிவினருக்கான 216 அடுக்குமாடிக் குடியிருப்புகள், பெசன்ட் நகரில் ரூ.23.79 கோடியில் வணிக வளாகம் மற்றும் 8 உயர் வருவாய் பிரிவு குடியிருப்புகள் மற்றும் 8 மத்தியவருவாய் பிரிவு குடியிருப்புகள், பாடிக்குப்பத்தில் ரூ.80.24 கோடியில் உயர் வருவாய் பிரிவினருக்கான 80 அடுக்குமாடிக் குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன.
கருமாங்குளத்தில் ரூ.3.95 கோடியில் பொருளாதாரத்தில் நலிவுற்ற பிரிவினருக்கான 24 அடுக்குமாடிக் குடியிருப்புகள் என 5 இடங்களில் ரூ.1,003.97 கோடியில் கட்டப்பட்ட 643 அடுக்குமாடிக் குடியிருப்புகள் மற்றும் வணிக வளாகங்களை முதல்வர் விஜய் நேற்று காணொலி வழியாகத் திறந்தார்.
நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் அனைவருக்கும் வீட்டு வசதித் திட்டத்தின்கீழ், கரூர் மாவட்டம் கொளந்தா கவுண்டனூர் திட்டப் பகுதியில் மறுகட்டுமானத் திட்டத்தின்கீழ், ரூ.17.56 கோடியில் கட்டப்பட்ட 125 அடுக்குமாடிக் குடியிருப்புகளையும் முதல்வர் திறந்தார்.
ரூ.71.36 கோடியில் கட்டிடங்கள் காவல் துறை சார்பில் ரூ.8.90 கோடியில் ஈரோடு, ராமநாதபுரம், சென்னை, திருவாரூரில் 4 காவல் நிலையங்கள், திருவள்ளூர் மாவட்டம் பெரும்பாக்கத்தில் எஸ்பிசிஐடி அலுவலக கட்டிடம், தீயணைப்பு, மீட்புப் பணிகள் துறை சார்பில் ரூ.8.41 கோடியில், சென்னை -மேடவாக்கம், திருவாரூர்- நீடாமங்கலம், வேலூர்- ஒடுக்கத்தூரில் தீயணைப்பு நிலையங்கள் என ரூ.17.31 கோடி செலவில் கட்டப்பட்ட கட்டிடங்களையும் முதல்வர் திறந்து வைத்தார்.
குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறையின் தமிழ்நாடு சிறு தொழில் வளர்ச்சி நிறுவனம் சார்பில், ஈரோடு மாவட்டம் பெருந்துறை பகுதி – II ல் ரூ.15.23 கோடியில் 17.95 ஏக்கரில் அமைக்கப்பட்டுள்ள வேளாண் உற்பத்தி சார்ந்த புதிய தொழிற்பேட்டை, விழுப்புரம் மாவட்டம் நாயனூரில் ரூ.5.57 கோடியில் 29.44 ஏக்கரில் அமைக்கப்பட்டுள்ள புதிய தொழிற்பேட்டை, தொழில் ஆணையர் மற்றும் தொழில்வணிக இயக்குநரகம் சார்பில் திருப்பூர்
மாவட்டம் முதலிபாளையத்தில் ரூ.13.95 கோடியில் அமைக்கப்பட்டுள்ள கயிறு குழுமத்துக்கான பொது வசதி மையம் ஆகியவற்றையும் முதல்வர் திறந்து வைத்தார்.
தருமபுரி மாவட்டம் சோகத்தூரில் ரூ.19.20 கோடியில் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த அரசு பட்டுக்கூடு அங்காடி வளாகத்தையும் முதல்வர் திறந்து வைத்தார். இந்த நிகழ்வுகளில் அமைச்சர்கள் ராஜ்குமார், மதன்ராஜா, நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத் தலைவர் கு.ப.கிருஷ்ணன், வீட்டுவசதி வாரியத் தலைவர் சிவா, தலைமைச் செயலர் சாய் குமார், டிஜிபி மகேஷ் குமார் அகர்வால், துறைச் செயலர்கள் கார்த்திக் (உள்துறை), கிர்லோஷ் குமார் (வீட்டு வசதி), பிரதீப் யாதவ் (எம்எஸ்எம்இ), லில்லி (கைத்தறி), வீட்டுவசதி வாரிய மேலாண்மை இயக்குநர் பிரபாகர், நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய மேலாண்மை இயக்குநர் பெ.ரமண சரஸ்வதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.