சென்னை: தமிழகத்தில் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்ட பயனாளிகளின் குடும்ப ஆண்டு வருமான வரம்பு ரூ.1.20 லட்சத்தில் இருந்து ரூ.2.50 லட்சமாக உயர்த்தப்பட்டது.
இக்காப்பீட்டுத் திட்டம், பிரதான் மந்திரி ஜன் ஆரோக்யா யோஜனா, ஆயுஷ்மான் பாரத் திட்டத்துடன் ஒருங்கிணைத்து செயல்படுத்தப்படுகிறது. இதற்கான பயனாளி குடும்பத்துக்கு ஆண்டுக்கு ரூ.5 லட்சம் காப்பீட்டுத் தொகை வழங்கப்படுகிறது.
இதில், ரூ.2 லட்சம் முதல்வர் காப்பீடுத் தொகை, ரூ.3 லட்சம் ஆயுஷ்மான் பாரத் காப்பீட்டுத் தொகையாகும். முதல்வர் காப்பீட்டுத் திட்டம் 2,100-க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 1.48 கோடிக்கும் மேற்பட்ட குடும்பங்கள் காப்பீட்டுத் திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளன. அந்த குடும்பங்களுக்கு ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரையிலான சிகிச்சைகள் வழங்கப்படுகின்றன. சில உயர் சிகிச்சைகளுக்கு ரூ.22 லட்சம் வரை வழங்கப்படுகிறது.
இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பு நடந்த சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் காப்பீட்டுத் தொகை ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.25 லட்சமாக உயர்த்தப்படும் என முதல்வர் விஜய் அறிவித்தார். இந்நிலையில், இதற்காக காப்பீட்டுத் திட்ட பயனாளி குடும்ப ஆண்டு வருமான வரம்பாக ஏற்கெனவே நிர்ணயிக்கப்பட்டிருந்த ரூ.1.20 லட்சம் தற்போது ரூ.2.50 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
அதன்படி, காப்பீட்டுத் திட்டத்தை 2027-ம் ஆண்டு ஜன.11-ம் தேதி முதல் 5 ஆண்டுகளுக்கு செயல்படுத்த புதிய காப்பீட்டு நிறுவனங்களை தேர்வு செய்ய தமிழக அரசு டெண்டர் வெளியிட்டுள்ளது.