சென்னை: வடகிழக்குப் பருவமழை தொடங்குவதற்கு முன் நிறைவு பெறாத குடிநீர், கழிவுநீர்க் கால்வாய்கள் மற்றும் சாலைப் பணிகளை உடனடியாக செய்து முடிக்க வேண்டும் என்று அமைச்சர்கள், அதிகாரிகளுக்கு முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.
வடகிழக்குப் பருவமழையை முன்னிட்டு மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நேற்று தலைமைச் செயலகத்தில் முதல்வர் விஜய் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் வடகிழக்குப் பருவமழைக்கு முன் எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
கூட்டத்தில் முதல்வர் விஜய் வழங்கிய அறிவுறுத்தல்கள் வருமாறு: கடந்த பருவமழைக் காலங்களில் வெள்ளம் பாதித்த இடங்கள் மற்றும் ஏனைய பகுதிகளில் நடைபெறும் பணிகளை அமைச்சர்கள், உயர் அதிகாரிகளைக் கொண்ட குழுவினர் வாரம் இரு முறையாவது ஆய்வு செய்ய வேண்டும்.
ஆய்வின்போது கண்டறியப்பட்ட குறைபாடுகளைக் களையும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
சென்னை மாநகராட்சியைப் பொறுத்தவரை, மாநகராட்சி நிர்வாகம், சென்னை குடிநீர் வாரியம், காவல் துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை, மீன்வளத்துறை, மின்சார வாரியம், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் ஆகியவை ஒருங்கிணைந்து நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
மழைநீர் விரைவாக வெளியேறும் வகையில் நீர்நிலைகளில் ஆகாயத் தாமரைகளை அகற்றுவதுடன், கால்வாய்கள் மற்றும் மழைநீர் வடிகால்களைத் தூர்வாருவதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும். வடகிழக்குப் பருவமழை தொடங்குவதற்கு முன் நிறைவுபெறாமல் இருக்கும் குடிநீர், கழிவுநீர்க் கால்வாய்கள் மற்றும் சாலைப் பணிகளை உடனடியாகச் செய்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அறுந்து விழும் நிலையில் உள்ள மின் கம்பிகள், பலவீனமான மின் கம்பங்கள் ஆகியவற்றை உடனடியாக மின்துறையினர் சீரமைக்க வேண்டும்.
மழைக்காலங்களில் மின் கம்பிகளால் எவ்வித உயிர்ச்சேதமும் ஏற்படாத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
கடந்த காலங்களில் சாலைகளில் வெள்ளநீர் அதிகம் தேங்கிய பகுதிகளுக்கு நேரில் சென்று ஆய்வு செய்து, வெள்ளநீர் தேங்காதவாறு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வெள்ள நீரை உடனடியாக வெளியேற்ற மின்மோட்டார்கள், சாலைகளில் விழுந்த மரங்களை அப்புறப்படுத்த மின் ரம்பங்கள், ஜேசிபி போன்றவற்றையும், மழைநீர் தேங்கும் பகுதிகளில் உள்ள மக்களைப் பாதுகாப்பாக வெளியேற்றும் வகையில் படகுகளையும் தயார்நிலையில் வைத்திருக்க வேண்டும்.
முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களுக்கு உணவு, பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கும் வகையில் சமுதாய உணவுக் கூடங்கள் தயார்நிலையில் வைத்திருக்க வேண்டும். இவ்வாறு அவர் அறிவுறுத்தினார்.
கூட்டத்தில் அமைச்சர்கள் ந.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, கோ.க. அருண்ராஜ், கே.ஏ. செங்கோட்டையன், டிகே.பிரபு, ம.விஜய் பாலாஜி, தலைமைச் செயலர் மு.சாய்குமார் மற்றும் துறைச் செயலர்கள், டிஜிபி மகேஷ்குமார் அகர்வால் உள்ளிட்டோர் பங்கேற்றனர். காணொலி வாயிலாக, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், விழுப்புரம் மற்றும் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர்களும் பங்கேற்றனர்.