சென்னை: அரசுப் பள்ளிகளில் செயல்படுத்தப்பட்டு வரும் காலை உணவுத் திட்டம் ‘காமராஜர்’ பெயரில் மாற்றப்பட்டுள்ளது.இந்தத் திட்டத்தை 6 முதல் 8-ம் வகுப்புகளுக்கு விரிவாக்கம் செய்வதற்காக ரூ.217 கோடி நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் குழந்தைகளுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் நோக்கத்தில் முதல்வரின் காலை உணவுத் திட்டம் 2022 செப்டம்பர் 15-ம் தேதி தொடங்கப்பட்டது. தொடர்ந்து அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு இத்திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டது. இந்தத் திட்டத்தின்கீழ் கிச்சடி, பொங்கல், உப்புமா என தினமும் ஏதேனும் ஒரு வகை உணவுகள் வழங்கப்பட்டு வருகின்றன. தற்போது மாநிலம் முழுவதும் உள்ள 37,447 அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் படிக்கும் 19.34 லட்சம் குழந்தைகளுக்குக் காலை உணவு வழங்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையே, சமூக நலத்துறை செயல்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் முதல்வர் விஜய் தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் கடந்த ஜூன் 15-ம் தேதி நடைபெற்றது. இதில் காலை உணவுத் திட்டத்தை 6 முதல் 8-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கும் விரிவாக்கம் செய்வதற்கு முடிவானது. இந்நிலையில் காலை உணவுத் திட்டத்தின் பெயர் மாற்றப்பட்டு, அதை விரிவாக்கம் செய்வதற்காக ரூ.217 கோடி நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சமூக நலத்துறை செயலர் ம.பல்லவி பல்தேவ் வெளியிட்ட அரசாணை: அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் செயல்படுத்தப்பட்டு வரும் காலை உணவுத் திட்டம் இனி ‘பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம்’ என்று பெயரிடப்படுகிறது. இத்திட்டம் 6 முதல் 8-ம் வகுப்புகளுக்கு விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இத்திட்டம் பெரியாரின் பிறந்தநாளான செப்டம்பர் 17-ம் தேதி முதல்வர் விஜய்யால் தொடங்கி வைக்கப்பட உள்ளது. தமிழகம் முழுவதும் 15,454 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 15 லட்சத்து 14,274 மாணவர்கள் பயன்பெறுவார்கள்.
இந்தத் திட்டத்தை விரிவுபடுத்துவதற்காக, நடப்பு நிதியாண்டில்(2026-27) தொடர் செலவினமாக ரூ.204 கோடியும், தொடரா செலவினமாக (உபகரணங்கள் வாங்குதல்) ரூ.13.57 கோடியும் என ஒட்டுமொத்தமாக ரூ.217.63 கோடிக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாணவருக்கும் தினசரி காலை உணவுச் செலவாக ரூ.12.71 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சியில் ஆணையரகமும், பிற மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளில் நகராட்சி நிர்வாக இயக்குநரகமும் ஒருங்கிணைந்த சமையல் கூடங்கள் வாயிலாக செயல்படுத்தப்படும்.
மேலும், ஊரகப் பகுதிகளில் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் மூலம் அந்தந்தப் பள்ளிகளிலேயே காலை உணவு தயாரிக்கப்பட்டு வழங்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
காங்கிரஸ் வரவேற்பு
தமிழக காங்கிரஸ் தலைவர் ப.மாணிக்கம் தாகூர் வெளியிட்ட அறிக்கையில், ‘காலை உணவு திட்டத்துக்கு காமராஜர் பெயர் சூட்டி இருப்பதை வரவேற்கிறோம். இதற்காக முதல்வர் விஜய்க்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்’ என்று கூறியுள்ளார்.