தமிழகம்

முதல்வர் - முன்னாள் முதல்வர் மோதும் தட்டாஞ்சாவடி

செ.ஞானபிரகாஷ்

புதுச்​சேரி​யில் 30 தொகு​தி​கள் இருந்​தா​லும் இம்​முறை பலரும் முதலில் உற்​று​நோக்​கு​வது தட்​டாஞ்​சாவடி தொகு​தி​யைத்​தான். முதல்​வர் தொகு​தி’ என்ற அந்​தஸ்து நெடுங்​காலம் இத்​தொகு​திக்கு உண்​டு. அதே​நேரத்​தில் புதுச்​சேரி​யிலேயே எம்​எல்ஏ அலு​வல​கம் இல்​லாத ஒரு சில தொகு​தி​களில் இது​வும் ஒன்​று. கடந்த 2021 சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் வென்ற பிறகு ரங்​க​சாமி இந்த தொகு​திக்கு வந்​தது என்​னவோ மிகக்​குறைவு​தான். அதே நேரத்​தில் தட்​டாஞ்​சாவடிக்​கும் ரங்​க​சாமிக்​கும் நீண்​ட​கால பந்​தம் உண்​டு.

கடந்த 1990-ல் தட்​டாஞ்​சாவடி​யில் காங்​கிரஸ் சார்​பில் போட்​டி​யிட்ட ரங்​க​சாமி தோல்​வியடைந்​தார். அதன்​பின்​னர் தனது ஆஸ்​தான குரு அப்பா பைத்​திய சுவாமி​யிடம் ஆசி பெற்​றார். ‘தேர்​தலில் வெற்றி பெறு​வாய்’ என்று அவர் சொல்ல, அடுத்த ஓராண்​டில் தேர்​தல் வந்​தது. அதையடுத்து தட்​டாஞ்​சாவடி​யில் 1991, 1996, 2001, 2006 தேர்​தல்​களில் ரங்​க​சாமி தொடர்ச்​சி​யாக வென்​றார். முதல்​வ​ராக​வும் ஆனார்.

          

காங்​கிரஸோடு ஏற்​பட்ட பிணக்​கால், 2011-ல் என்​.ஆர்​.​காங்​கிரஸ் என்ற தனிக்​கட்​சி​யைத் தொடங்​கி​னார். அதே 2011-ம் ஆண்டு கதிர்​காமம், இந்​திரா நகர் ஆகிய இரு தொகு​தி​களில் போட்​டி​யிட்டு வென்​றார். பின்​னர் இந்​திரா நகர் தொகு​தியை துறந்​தார். 2016-ல் இந்​தி​ராநகரில் மட்​டும் போட்​டி​யிட்டு வென்​றார். அப்​போது அவரால் முதல்​வ​ராக முடிய​வில்​லை. ‘‘இரண்டு தொகு​தி​களில் போட்​டி​யிடும் போது​தான் நீங்​கள் முதல்​வர் ஆகிறீர்​கள்’’ என்று யாரோ சொல்ல, கடந்த 2021-ல் 2 தொகு​தி​களில் போட்​டி​யிட்​டார். ஏனாமில் தோற்​றாலும், தட்​டாஞ்​சாவடி​யில் வென்​றார்.

அதே நம்​பிக்​கை​யில் இந்த முறை மீண்​டும் தட்​டாஞ்​சாவடி​யில் போட்​டி​யிடு​கிறார். கூடவே மங்​கலத்​தி​லும் போட்​டி​யிடு​கிறார். இரண்டு தொகுதி சென்​டிமென்ட் ஒரு புறம்; தனது தட்​டாஞ்​சாவடி தொகுதி ராசி மறு​புறம் என திட்​ட​மிட்டு களமிறங்கி இருக்​கிறார் ரங்​க​சாமி. இது​வரை புதுச்​சேரி​யிலேயே அதிக ஆண்​டு​கள் முதல்​வ​ராக இருந்த பெரு​மை​யும் இவருக்​குண்​டு.

இந்​தத் தேர்​தலில், புதுச்​சேரிக்​கான தேசிய ஜனநாயகக் கூட்​ட​ணித் தலை​வ​ராக இருக்​கும் ரங்​க​சாமி தலை​மை​யில் என்​.ஆர்​.​காங்​கிரஸ், பாஜக, அதி​முக, லட்​சிய ஜனநாயகக் கட்​சிகள் இணைந்து போட்​டி​யிடு​கின்​றன. இந்​தச் சூழலில் தட்​டாஞ்​சாவடி​யில் ரங்​க​சாமியை எதிர்த்து முன்​னாள் முதல்​வரும் தற்​போதைய மக்​களவை உறுப்​பினரு​மான வைத்​திலிங்​கம் போட்​டி​யிடு​கிறார். இவர் புதுச்​சேரிக்​கான காங்​கிரஸ் மாநிலத் தலை​வ​ராக​வும் உள்​ளார்.

இந்​நாள் முதல்​வரும் முன்​னாள் முதல்​வரும் ஒரே தொகு​தி​யில் மோது​வது புதுச்​சேரி அரசி​யலில் முக்​கி​யத்​து​வ​மாக பார்க்​கப்​படு​கிறது. காங்​கிரஸ் தரப்​பில் களம் காணும் வைத்​திலிங்​க​மும் புதுச்​சேரி​யில் அனுபவம்​மிக்க அரசி​யல்​வா​தி. நெட்​டப்​பாக்​கம் தொகு​தி​யில் கடந்த 1980-ல் முதன்​முதலில் போட்​டி​யிட்டு தோற்​றார். அதன்​பிறகு 1985, 1990, 1991, 1996, 2001, 2006 ஆகிய தேர்தல்​களில் தொடர்ச்​சி​யாக வென்​றார்.

நெட்​டப்​பாக்​கம் தனித் தொகு​தி​யான​தால் கடந்த 2011, 2016 தேர்​தல்​களில் காம​ராஜர் நகர் தொகு​தி​யில் போட்​டி​யிட்டு வென்​றார். பின்​னர் 2019, 2024-ல் மக்​களவை உறுப்​பின​ரா​னார். எனினும், இண்​டியா கூட்​ட​ணி​யில் இந்​திய கம்​யூனிஸ்ட், மார்க்​சிஸ்ட், விசிக ஆகிய கட்​சிகள் காங்​கிரஸுக்கு பணி​யாற்ற மாட்​டோம் என வெளிப்​படை​யாக தெரி​வித்து விட்​டன.

திமுக ‘சைலன்ட் மோடில்’ உள்​ளது. இதனால், தனித்து தன் பலத்தை காட்ட வேண்​டிய நிர்​பந்​தத்​தில் வைத்​திலிங்​கம் உள்​ளார். இதே தொகு​தி​யில் இந்​திய கம்​யூனிஸ்ட்​டில் இருந்து பிரிந்து சென்ற சேது செல்​வம், தமிழக வெற்​றிக் கழகத்​துடன் கூட்​டணி வைத்​திருக்​கும் நேயம் மக்​கள் கழகத்​தின் வேட்​பாளர் வி​நாயகம், நாம் தமிழர் கட்சி வேட்​பாளர் கார்த்​திக் குமாரி உள்​ளிட்​டோரும் தங்​களின் பரப்​புரையைத் தொடங்​கி​யிருக்​கின்​றனர். மொத்​தத்​தில் மற்​றத் தொகு​தி​களைக்​ காட்​டிலும்​ தட்​டாஞ்​சாவடி தொகுதியில்​ அனல்​ பறக்​கிறது.

SCROLL FOR NEXT