உயர் நீதிமன்ற மதுரை அமர்வு
மதுரை: கரூர் பொறியியல் கல்லூரி மாணவி வகுப்பறையில் கொலை செய்யப்பட்ட வழக்கில் பிறழ்சாட்சி அளித்த மாணவர்கள் சமூக ஊடகங்களில் வெறுமனே எதிர்ப்பு கருத்துகளை தெரிவிப்பதால் எந்தப் பலனும் இல்லை. அது செயலாக மாறாவிட்டால் மாணவர்கள் நிஜ வாழ்க்கையில் காகிதப் புலிகளாக மட்டுமே இருப்பர் என உயர் நீதிமன்ற நீதிபதிகள் அறிவுரை வழங்கி உள்ளனர்.
கரூர் பொறியியல் கல்லூரியில் 2016-ல் பிஇ 3-ம் ஆண்டு படித்து வந்தவர் சோனாலி. இவருடன் படித்தவர் உதயகுமார். இருவரும் நண்பர்களாக இருந்துள்ளனர். பின்னர், உதயகுமாருடன் பேசுவதை சோனாலி நிறுத்திவிட்டார்.
இந்நிலையில் 2016 ஆக. 30-ல் கல்லூரியில் வகுப்பு நடந்த போது, மரக்கட்டையுடன் வந்த உதயகுமார் வகுப்பறையில் பேராசிரியர், சக மாணவர்கள் முன்னிலையில் சோனாலியின் தலையில் கடுமையாகத் தாக்கினார். இதில் பலத்த காயமடைந்த அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உயிரிழந்தார். இதையடுத்து உதயகுமாரை போலீஸார் கைது செய்தனர்.
இவ்வழக்கை விசாரித்த கரூர் மகளிர் நீதிமன்றம் உதயகுமாருக்கு ஆயுள் தண்டனை வழங்கி 2022 பிப். 1-ல் தீர்ப்பளித்தது. இந்த தண்டனையை ரத்து செய்யக்கோரி, உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் உதயகுமார் மேல்முறையீடு செய்தார். இம்மனுவை நீதிபதிகள் ஆனந்த் வெங்கடேஷ்,ராமகிருஷ்ணன் அமர்வு விசாரித்தது. மனுதாரர் தரப்பில், வழக்கின் சாட்சிகள் பலர் பிறழ்சாட்சிகளாக மாறிவிட்டனர்.
அடையாள அணி வகுப்பு முறையாக நடத்தப்படவில்லை என வாதிடப்பட்டது. பின்னர் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: பழகுவதை நிறுத்தும் பெண்ணை கொலை செய்வது நியாயமான செயல் என நினைக்கும் போக்கு சமீபகாலங்களில் அதிகரித்து வருகிறது. மனுதாரரின் கொடூரமான செயலால், பெரிய கனவுகளுடன் வாழ்ந்த ஒரு பெண்ணின் உயிர் பறிபோய்விட்டது.
வகுப்பறையில் பல மாணவர்கள் முன்னிலையில் பட்டப்பகலில் சம்பவம் நடந்துள்ளது. தாக்குதலை தடுக்க சக மாணவர்கள் எந்த முயற்சியும் எடுக்கவில்லை. நீதிமன்றத்திலாவது உண்மையான சாட்சியம் அளித்திருக்க வேண்டும். அதை செய்யாமல் பிறழ் சாட்சியாக மாறியுள்ளனர். சமூக ஊடகங்களில் வெறுமனே எதிர்ப்பு கருத்துகளைத் தெரிவிப்பதில் எந்தப் பலனும் இல்லை. அது செயலாக மாற வேண்டும். இல்லாவிட்டால், மாணவர்கள் நிஜ வாழ்க்கையில் காகிதப் புலிகளாக மட்டுமே இருப்பர்.
இந்த வழக்கில் போதுமான அளவு உறுதிப்படுத்தப்பட்ட சாட்சியங்கள் உள்ளதால் சிறிய முரண்பாடுகளை கவனிக்க வேண்டியதில்லை. இதனால் விசாரணை நீதிமன்றத்தின் தீர்ப்பில் தலையிட வேண்டியதில்லை. மேல்முறையீடு மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. இவ்வாறு நீதிபதிகள் உத்தரவில் குறிப்பிட்டுள்ளனர்.