தமிழகம்

தமிழகத்தில் நவோதயா பள்ளிகள் தொடங்கும் விவகாரம்: கொள்கை முரணால் அதிமுக - பாஜக கூட்டணியில் சலசலப்பு

செய்திப்பிரிவு

சென்னை: நவோதயா பள்ளி விவ​காரத்​தில் அதி​முக - பாஜக இடையே​யான முரண்​பட்ட கொள்​கைகள் நிலவி வரு​வது கூட்​ட​ணிக்​குள் சலசலப்பை ஏற்​படுத்தி உள்​ளது.

தமிழகத்​தில் ஜவஹர் நவோதயா பள்​ளி​களை அமைப்​ப​தற்​கான இடங்​களை 6 வாரத்​துக்​குள் கண்​டறிய வேண்​டும் என தமிழக அரசுக்கு உச்ச நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது. திமுகவை​போல, அதி​முக​வும் மும்​மொழிக் கொள்​கையை எதிர்க்​கிறது. இந்​நிலை​யில், தமிழகத்​தில் நவோதயா பள்​ளி​கள் தொடங்​கும் சூழலை திமுக அரசு ஏற்​படுத்​தி​விட்​ட​தாக, அதி​முக பொதுச்​செய​லா​ளர் பழனி​சாமி குற்​றம்​சாட்​டி​யுள்​ளார்.

பாஜக மாநில தலை​வர் நயி​னார் நாகேந்​திரன், “தேசிய ஜனநாயக கூட்​டணி ஆட்​சிக்கு வந்​தால், தமிழகத்​தில் நவோதயா பள்​ளி​கள் அமைக்​கப்​படும்” என உறு​திபட கூறி வரு​கிறார். ஆனால், தமிழகத்​தில் அதே கூட்​ட​ணிக்கு தலைமை வகிக்​கும் பழனி​சாமி, “மூத்த வழக்​கறிஞர்​களை நியமித்​து, தமிழகத்​தின் வாதங்​களை முழு​மை​யாக உச்ச நீதி​மன்​றத்​தில் எடுத்​துரைத்​து, நவோதயா பள்​ளி​கள் வராமல் தடுக்க அனைத்து நடவடிக்​கை​யும் திமுக அரசு எடுக்க வேண்​டும்” என்று வலி​யுறுத்​தி​யுள்​ளார். இந்நிலையில் நவோதயா பள்ளிகள் தொடர்பாக பாஜக, அதிமுக தலைவர்கள் கூறியிருப்பதாவது:

பாஜக மாநில செய்​தித் தொடர்​பாளர் ஏ.என்​.எஸ்​.பிர​சாத்: நவோதயா பள்ளி விவ​காரத்​ தில் தாயுள்​ளத்​தோடு தமிழக கிராமப்​புற மாணவர்​களின் நலனை பழனி​சாமி கருத்​தில் கொண்​டு, உச்ச நீதி​மன்ற தீர்ப்பை நிறைவேற்ற திமுக அரசை வலி​யுறுத்த வேண்​டும். மோடி தலை​மையி​லான மத்​திய அரசு, தமிழகத்​தின் நலன் காக்​கும் அரசு என்​ப​தால், தாய்​மொழி தமிழை முதல் நிலை​யில் கற்​பிக்​கக்​கூடிய நவோதயா பள்​ளி​கள் தமிழகத்​தில் அமைய பழனி​சாமி ஆதர​வளிக்க வேண்​டும். இந்தி எதிர்ப்​பு, இந்தி திணிப்பு என்று கற்​பனை கபட நாடக மொழி அரசி​யலுக்கு முற்​றுப்​புள்ளி வைக்க தமிழக அரசி​யல் கட்​சிகள் ஒன்​றிணைந்து செயல்பட வேண்​டும். தமிழகத்​தில் நவோதயா பள்​ளி​களால் ஏற்​படும் நன்​மை​களைப் பற்றி முழு​மை​யாக ஆராய அதி​முக சார்​பில் ஒரு குழுவை அமைக்க வேண்​டும்.

அதி​முக​வின் முன்​னாள் கல்​வித்​துறை அமைச்​சர் வைகைச்​செல்வன்: பாஜக​வுடன் தேர்​தலுக்​காக கூட்​டணி அமைக்​கப்​பட்​டுள்​ளது. பொது எதிரியை வீழ்த்​தும் நோக்​கத்​தில் இந்​தக் கூட்​டணி அமைக்​கப்​பட்​டுள்​ளது. பாஜக​வுடன் கூட்​டணி வைத்​திருப்​ப​தால், அதன் அனைத்து கொள்​கைகளை​யும் ஏற்​றுக்​கொண்​ட​தாக பொருள் கொள்​ளக்​கூ​டாது. அதி​முக​வின் கொள்கை உயிர்​நாடி தமிழ், இணைப்பு மொழி ஆங்​கிலம், இந்தி திணிப்பு கூடாது என்​பது​தான். அதில் அதி​முக உறு​தி​யாக உள்​ளது.

பாஜக மூத்த தலைவர் பொன்​.​ரா​தாகிருஷ்ணன்: நான் அமைச்​ச​ராக இருக்​கும்​போது, நாடாளு​மன்​றத்​தில், ஸ்மிருதி இரானி 60 நவோதயா பள்​ளி​கள் புதி​தாக திறக்​கப்​படும் என அறி​வித்​தார். உடனடி​யாக நான், தமிழகத்​துக்கு 12 பள்​ளி​கள் வேண்​டும் என கோரிக்கை விடுத்​தேன். மேலும், அப்​போது முதல்​வ​ராக இருந்த ஜெயலலி​தா, டெல்லி வந்​திருந்​த​போது, அவரிட​மும் நவோதயா பள்ளி குறித்து தெரி​வித்​தேன். இன்று தனி​யார் பள்​ளி​கள் புற்​றீசல்கள்போல பெரு​கி​விட்​டன. அங்கு அதி​கள​வில் கல்விக் கட்​ட​ணம் வசூலிக்​கப்​படு​கிறது.

எனவே, குறைந்த கல்விக் கட்​ட​ணம் அல்​லது இலவச கல்வி கிடைக்​கும் வகையி​லான ஏற்​பாடு​களை செய்ய வேண்​டும். எனவே, நவோதயா பள்​ளி​கள் தமிழகத்​தில் அமைப்​பது குறித்து, அனைத்து கட்​சிகளும் யோசித்து நல்ல முடிவை எடுக்க வேண்​டும். யார் யாருக்கு என்ன மொழி தேவையோ அதை படிக்க விட வேண்​டும். தமிழ​னாக பிறந்​த​தில் நான் பெருமை கொள்​கிறேன். தமிழ் மொழியை தலை​முறை தலை​முறை​யாக கொண்டு சேர்க்க வேண்​டியது எனது பொறுப்​பு. அதே​நேரத்​தில், இந்த உணர்​வுடன், சோற்​றுக்காக மற்ற மொழியை படிப்​ப​தில் என்னதவறு இருக்​கிறது. இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.

பி.வில்சன் கருத்து: ஜவஹர் நவோதயா பள்​ளி​களை தமிழ கத்​தில் தொடங்​கு​வதை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதி​மன்​றத்​தில் தொடர்ந்​துள்ள மேல்​முறை​யீட்டு வழக்கு விசா​ரணை​யில், தமிழக அரசு தரப்​பில் ஆஜராகி வாதிட்ட மூத்த வழக்​கறிஞர் பி,​வில்​சனிடம்நீதி​மன்​றத்​தில் நடந்த வாதங்​கள் குறித்து கேட்​ட​போது அவர் கூறிய​தாவது: ஏற்​கெனவே மத்​திய அரசு சமக்ர சிக் ஷா திட்​டத்​தின்​கீழ் தமிழக அரசுக்கு வழங்க வேண்​டிய ரூ.3 ஆயிரத்து 500 கோடியை வழங்க மறுக்​கிறது.

தற்​போது நவோதயா பள்​ளி​களில் மும்​மொழிக் கொள்கை பின்​பற்​றப்​படு​கிறது. தமிழகத்​தில் இரு​மொழிக் கொள்​கை​தான் என்​பதை தமிழக அரசு கொள்கை முடிவு எடுத்து அதை சட்​ட​மாக​வும் ஆக்​கி​யுள்​ளது. மேலும், ஒவ்​வொரு பள்​ளிக்​கும் 30 ஏக்​கர் நிலம் தேவை என்​கின்​றனர்.

அத்​துடன் நில்​லாமல் 3 ஆண்​டு​களுக்கு அந்​தப் பள்​ளி​களை தமிழகஅரசே ஏற்று நடத்​திக் கொடுக்கவேண்​டும் என்​கின்​றனர். அதற்​கான செல​வை​யும் தமிழக அரசு​தான் ஏற்க வேண்​டும். முதலில் சமக்ர சிக் ஷா திட்​டத்​தின் கீழ் வழங்க வேண்​டிய ரூ.3 ஆயிரத்து 500 கோடியை வழங்​கச்​சொல்​லுங்​கள் என்​றேன். அதற்கு நீதிப​தி​கள், மாநில அரசின் கொள்கை முடிவு இரு​மொழிக் கொள்கை என்​றால் அதை மத்​திய அரசிடம் தெரி​வி​யுங்​கள். அதுகுறித்​து மத்​தி​ய அரசு பரிசீலிக்​கும்​, எனக்​கூறி வி​சா​ரணை​யை தள்​ளி வைத்​துள்​ளனர்​. இவ்​வாறு அவர்​ கூறி​னார்.

SCROLL FOR NEXT