போராட்டத்தில் ஈடுபட்ட இலங்கை தமிழர்கள்.
கோவில்பட்டி: எட்டயபுரம் அருகே குளத்துள்வாள்பட்டியில் கிராம மக்களுக்கும், இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமைச் சேர்ந்தவர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. கற்களை வீசி எறிந்து தாக்குதலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
எட்டயபுரம் அருகே சுரைக்காய்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட குளத்துள்வாய்பட்டி கிராமத்தில் உள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் 44 வீடுகள் அமைந்துள்ளன. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இலங்கை தமிழர் முகாமில் உள்ளவர்களுக்கு அரசு சார்பில் வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டன. அதன் பின்னர் குளத்துள்வாய்பட்டி கிராம மக்கள் தங்களது விவசாய நிலங்களுக்கு செல்வதில் பிரச்சினை உருவானது.
இலங்கை தமிழர் முகாமில் உள்ளவர்களை கண்காணிக்க வேண்டும். இப்பகுதியில் போதைப் பொருள் நடமாட்டம் அதிகமாக உள்ளதால், குளத்துள்வாய்பட்டியில் புறக்காவல் நிலையம் அமைக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால், வட்டாட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் தரப்பில் எந்தவொரு தீர்வும் எட்டப்படவில்லை.
இந்நிலையில், நேற்று முன்தினம் விளை நிலங்களுக்கு செல்வதற்கான பாதையில் கிராம மக்கள் சரளை மண் கொட்டி சமப்படுத்தினர். இதற்கு முகாமைச் சேர்ந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து நேற்று காலை கிராம மக்கள் திரண்டு முகாமில் உள்ள வீடுகளை முற்றுகையிடச் சென்றனர். அப்போது கிராம மக்களுக்கும், முகாமைச் சேர்ந்தவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் இரண்டு தரப்பினரும் கற்களை வீசி தாக்குதலில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
தகவல் அறிந்து டிஎஸ்பி-க்கள் சுந்தரபாண்டியன், ஜெகநாதன், காவல் ஆய்வாளர்கள் மணிகண்டன், உமா மகேஸ்வரி மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து வட்டாட்சியர் சுபா மற்றும் வருவாய்த்துறையினர் அங்கு வந்து இருதரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினர்.
எனினும், நேற்று மாலை வரை பிரச்சினை முடிவுக்கு வரவில்லை. இருதப்பினரும் கோரிக்கைகளை முன்வைத்து பேசினர். அவர்களிடம் தொடர்ந்து வருவாய்த்துறையினரும், போலீஸாரும் பேச்சு நடத்தி வருகின்றனர்.